ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம்.
பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம். ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது.
ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனுஷங்களா ஆகிறோம் என்பது நம்பிக்கை. பேச்சில் ஈர்க்கிறார் இயக்குநர் இயக்குநர் ஜே. எஸ். கே. 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்.
'ஃபயர்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.
ஃபயர்... 90-களில் பாலிவுட்டில் ஹிட்டடித்த படம்... அதன் தழுவல் ஏதாவது இருக்குமா?
இல்லை. இது முற்றிலும் வேறு களம். இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாகப் பேச வேண்டிய விஷயம் இது. முதல் படம் என்பதால், இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.
அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன. இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம்.
பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலைமாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு.
இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.
பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...
தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன மருத்துவப் பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப் பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? அந்தப் கணத்தை எப்படி கடந்து வந்திருப்பாள் அந்தப் பெண்.
நினைத்துப் பார்க்கவே அப்படி ஒரு கூச்சம். ஆணாகப் பிறந்த அத்தனை பேருமே கூனிக்குறுக வேண்டிய சம்பவம் இல்லையா அது? ஆனால், அதற்குக் கூட பெண்களின் உடைதான் காரணம், நடைதான் காரணம் என்று உள்ளர்த்தம் கற்பிக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக் கிராமங்களிலும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கண்டும் காணாமலும் நாம கடந்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த இல்லை... பத்திரமாய் பாதுகாப்பதற்கு.
சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில் தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள். அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி தராத இந்தச் சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும்.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால்.. ஒரே பிக் பாஸ் பட்டாளமாக இருக்கே...
எல்லோரும் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறி வருகிற படம் இது. பாலாஜி முருகதாஸ் யார் என்று விளம்பரப்படுத்தி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை. பார்த்தாலே தெரிந்து விடும். எல்லோருக்கும் சினிமா பற்றி நல்ல கனவுகள் உண்டு. சிறு வயதில் இருந்தே சினிமாவில் பயணிக்கிறவர்கள், அது குறித்தே யோசித்துக் கொண்டிருப்பவர்கள்.
அந்த அர்பணிப்புக்கு ஒரு முதல் தகுதியை உண்டாக்கி தரும் விதமாக இந்தப் படம் இருக்கும். ரச்சிதா எப்போதும் இணைய வாசிகளிடம் இருப்பவர். இந்தப் படத்துக்கு முன்பே கன்னடத்தில் ஒரு படத்தை முடித்து வந்து விட்டார்.
இந்தப் படம் அவரை பரிச்சயமாக முகமாக மாற்றி விடும். எல்லோருக்கும் தெரிந்த சிங்கம் புலிக்கு முக்கிய வேடம். டி கே. இசையமைக்க, சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ். கே. ஜீவா வசனங்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை சி எஸ் பிரேம்குமாரும் கலை இயக்கத்தை சுரேஷ் கல்லேரியும் கவனிக்க, பாடல்வரிகளை மதுர கவியும், ராவும் எழுதுகின்றனர். நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறேன்.
தயாரிப்பு, விநியோகம், நடிப்பு... இப்போது இயக்குநர் என எல்லா பக்கங்களிலும் இருக்கீங்க... இது பெரிய அழுத்தம் இல்லையா...
எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். சம்பாதிப்பதை நல்லப் படியாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல் நீயே சினிமா தயாரிப்பதெல்லாம் தேவையா என்று கேட்காதவர்கள் இல்லை.
அப்போதெல்லாம் மனசுக்கு பிடித்ததைத்தானே செய்கிறோம் என உள்ளுக்குள் ஒரு அலை அடிக்கும். அருவா, ஆபாசம் என நாடு போற்றும் வெள்ளி விழா படங்களை எடுத்தால், சமூகத்தை கெடுக்கிறீங்களே என்று கேட்கலாம். சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. இதை நானே தயாரிக்கலாம் என தோன்றியதால் தயார்க்கிறேன்.
அவ்வளவுதான். இயக்கமும் அப்படித்தான். எல்லாம் கேள்வி ஞானம்தான். இங்கே யாரும் சுயம்பு கிடையாது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்துக் கொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.