உடலுக்கு உதவும் உணவகம்..

உடலுக்கு உதவும் உணவகம்..
Picasa
Published on
Updated on
2 min read

தரமான, சுவையான, உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் நார்ச் சத்துகள் உள்ள காய்கறிகள், சாலட்டுகளுடன் மூன்று வேளையும் கிடைக்கும் உணவு வகைகள் சேலத்தில் கண்ணன்குறிச்சியில் செயல்படும் "கந்தாஸ் கிச்சனில்' கிடைக்கின்றன. முதியோரும், நோயாளிகளுக்கும், வீட்டில் சமைக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்களுக்கும் மட்டுமே இந்த உணவகம் உதவுகிறது.

இந்த உணவகத்தை நடத்திவரும் ஐஸ்வர்யாவிடம் பேசியபோது:

""எனது அப்பாவுக்கு சர்க்கரை நோயின் அளவு கூடி, காலை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மருந்துடன், உணவு முறையை மாற்றி என்னால் அப்பாவின் காலைக் காப்பாற்ற முடிந்தது. சரிவிகித உணவு கிடைத்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்குப் பொருத்தமான உணவானது வீடுகளில் சமைக்கப்படுவதில்லை.

வாழ்க்கை சூழல் காரணமாக, எனக்கும் சொந்தக் காலில் நிற்க ஒரு தொழில் தேவைப்பட்டது. அப்பாவுக்கு ரத்தச் சர்க்கரையை குறைக்கும் உணவு சமைத்து கொடுத்தது தைரியத்தைத் தந்தது. முதலில் பத்து பேருக்கு உணவு கொடுக்க ஆரம்பித்தேன். இப்போது ஐம்பது வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

எனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் சந்திரா, மீனாட்சி, சித்ரா, ராணி ஆகியோர் என்னுடன் இணைந்தனர். உணவு விநியோகிக்கும் பொறுப்பை எனது அண்ணன் குணசேகர், தம்பி சஞ்சய் ஏற்றனர். ஏழு பேர் கூட்டு முயற்சியில் "கந்தாஸ்' செயல்படுகிறது.

காலையில் நான்கு இட்லி , பொங்கல், ஒரு சாலட் வழங்குகிறோம். மதியம் சாதத்துடன் போதுமான அளவு காய்கறிகள் அடங்கிய கூட்டு, பொரியல், சாலட் , இரவு தோசை, அப்பம், சப்பாத்தி சாலட் வழங்குகிறோம்.

உணவு சூடாக வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஹாட் பேக்கில் உணவை வழங்குகிறோம். மற்றபடி, எவர் சில்வர் கேரியரில் உணவு அனுப்புவோம். எந்த நிலையிலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. ஞாயிறு தவிர மற்ற நாள்களிலும் உணவு விநியோகம் நடக்கிறது.

சமையலுக்கு மரச் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். விரும்பும் உணவு வகைகளையும் செய்தும் தருவோம்.

வீட்டில் பெரியவர்களுக்கு எவ்வளவு கரிசனத்துடன் பொறுப்புடன் சமைக்கிறோமோ, அதே உணர்வுடன் வாடிக்கையாளர்களுக்கும் சமைத்து வழங்குகிறோம்.

எனது வாடிக்கையாளர்களின் 92 வயதான பெரியவரும் 88 வயதான அவருடைய மனைவியும் இருக்கிறார்கள். பண்டிகை நாள்களில் சர்க்கரை அதிகம் சேர்க்காமல், செயற்கை நிற பொடிகளைச் சேர்க்காமல் இனிப்பு வகைகளை வழங்குகிறோம்.

கந்தாஸில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும். தயிர் பசும்பாலில் தயாரிக்கிறோம். மசாலா பொடிவகைகளையும் தயாரித்து விற்கிறோம்.

ராகி இட்லி, கொள்ளுப் பொடி இட்லி, உளுந்து சட்னி, திருநெல்வேலி சொதி, திணை - வரகரிசி பொங்கல், கும்பகோணம் கடப்பா, சிதம்பர கத்திரிக்காய் கொஸ்து, முந்திரி தேங்காய் சாதம், பருப்பு உருண்டை குழம்பு, கேரளா உள்ளி (சின்ன வெங்காயம்) தீயல், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, லெமன் இஞ்சி ரசம், வல்லாரை கீரை துவையல், கொள்ளு துவையல், தேங்காய் எண்ணெய்யில் சமைத்த கேரளா அவியல், முளை கட்டிய பச்சைப் பயறு சாலட், நரிப்பயறு சாலட், பசும்பால் தயிர் மாதுளை சாதம் போன்ற உணவு வகைகள் எங்கள் ஸ்பெஷல்'' என்கிறார் ஐஸ்வர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com