சேவையே வாழ்நாள் லட்சியம்

சேவையே வாழ்நாள் லட்சியம்
Published on
Updated on
2 min read

"சேவை செய்வது மட்டுமே தன்னுடைய வாழ்நாள் லட்சியம்'' என்கிறார் ஐம்பது வயது நிரம்பிய இரா.சங்கர் கணேஷ் விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட ராஜபாளையம், பூபால்ராஜா பட்டி தெருவைச் சேர்ந்த இவரிடம் பேசியபோது:

"எனது பெற்றோர் ராமசாமி- லட்சுமி அம்மாள் வழிகாட்டியபடி, பிறருக்கு உதவுகிறேன். நான் சிறிய அளவில் பரிசுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறேன். பத்தாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். ஆனால் படிக்க விரும்புவர்களுக்கும் சரி, விளையாட்டில் ஆர்வமுள்ளவருக்கும் சரி என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். என்னால் குறைந்த நிதியுதவி தான் வழங்க முடியும்.அதனால் உடல் உழைப்பை அனைவருக்கும் வழங்கி வருகிறேன்.

பள்ளிகள் ,கல்லூரிகள் , சமூக நல அமைப்புகள், விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்கள், மருத்துவ முகாம்களை நடத்துபவர்கள் என எல்லோரும் அவர்களின் பணித் தேவைக்காக என்னை அழைப்பார்கள் . நான் இலவசமாக அங்கு சென்று என்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதை செய்வேன்.

கரோனா காலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு உணவுப் பொருள்களை பேக்கிங் செய்யும் பணியை செய்தேன். தமிழ்நாடு அமைச்சூர் கபடி அசோசியேஷன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் போன்றவை நடத்தும் மாரத்தான் ,வாலிபால், ஹாக்கி, கபடி போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்தி, உதவிகளைச் செய்வேன்.

அதையும் தாண்டி காயம் படும் வீரர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சேவை செய்வதை மிக உயர்வாக கருதுகிறேன். இதுபோன்று கிராமப்புறங்களில் நான் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருவதால் பலர் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பும் பெற்று வருகின்றனர்.

சிறந்த அளவில் செயல்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி உள்ளேன்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக, சைக்கிள் பேரணியை நடத்தியுள்ளேன். தேசத் தலைவர்களின் பிறந்தநாளன்று இலவச மரக்கன்றுகள், மாணவர்களுக்கு நோட்டுகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறேன்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் சார்பில் காந்தி சென்ற இடங்களுக்கு எல்லாம் செல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கினர். அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று அங்கும் தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டேன். பல முறை ரத்த தானமும் செய்துள்ளேன். விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடை மருத்துவ முகாம்களிலும் கலந்து கொண்டு சேவையாற்றி உள்ளேன்.

எனது வாழ்நாள் முழுவதும் சேவை தொடரும்.

பலனை எதிர்பாராமல் இன்றைய தலைமுறையினர் தங்களது ஓய்வு நேரங்களில் சேவையாற்ற முன்வர வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com