வளரிளம் பருவ உடற்பருமன் : தடுக்கும் வழிகள்!

வளரிளம் பருவ உடற்பருமன்: தடுக்கும் வழிகள் மற்றும் பரிந்துரைகள்!
வளரிளம் பருவ உடற்பருமன் : தடுக்கும் வழிகள்!
Published on
Updated on
3 min read

ஐக்கிய நாடுகளால் 2016-இல் உருவாக்கப்பட்ட, வளர்ச்சிக்கான குறிக்கோள்களின் "சஸ்ட்டெயினபில் டெவலப்மெண்ட் கோல்' வரையறையில், உயர்ந்துவரும் உடற்பருமன் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி, 135 மில்லியன் நடுத்தர வயதினரும், 5 வயதிற்குள்பட்ட 39 மில்லியன் குழந்தைகளும் உடற்பருமனுடன் இருக்கிறார்கள்.

மேலும், "வேர்ல்டு ஒபிஸிடி ஃபெடரேஷன்' என்ற அமைப்பின் "தி ஒபிஸிடி அட்லஸ் - 2023' என்ற திட்டத்தின் ஆய்வு முடிவுகள், வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் நடுத்தர வயதினரின் உடற்பருமன் எண்ணிக்கை 5.2 சதவிகிதம் அதிகரிக்கும் நிலையில், குழந்தைகள் உடற்பருமன் எண்ணிக்கையானது, 9.1 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கைக் கொடுத்துள்ளது.

உடற்பருமன் அதிகரிப்பதற்கான காரணிகள்:

வளரிளம் பருவத்தினரிடையே உடற்பருமன் அதிகரிப்பதற்கு முக்கியமான ஐந்து காரணங்கள்:

(I) மரபியல் காரணிகள் - ஒரு பெண் அல்லது ஆண் குழந்தையின் குடும்பப் பின்னணியுடன் இணைந்த மரபியல் காரணிகள் அல்லது பிறவியில் ஏற்படும் மரபியல் காரணிகளால் உடல் எடை அதிகரிப்பு நிகழ்வது இயல்புதான். இருப்பினும், இது வெறும் 5 சதவிகிதம்தான் என்பதால், தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினரின் உடற்பருமன் எண்ணிக்கைக்கு, பிறநான்கு காரணிகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

(II) எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் தரமும் - உணவைப் பொருத்தமட்டில், அதிக சர்க்கரை, கொழுப்பு, உப்பு மற்றும் சேர்மானங்கள் சேர்த்த உணவுகள் வளரிளம்பருவ வயதினரால் விரும்பி உண்ணப்படுவதும் உடல் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. அதிக கலோரி உணவுகள் மட்டுமல்லாது, குறைவான ஊட்டச் சத்துகளுடன் இருக்கும் துரிதவகை உணவுகளை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடும்போது, அதிக அளவில் உட்கொள்ளுவதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

(III) பெற்றோரின் கவனிப்பு - தங்களுடைய குழந்தையின் சமச்சீரான உடல் ஆரோக்கியத்தைத் தெரிவிக்கும் உயரம், உடல் உடை போன்றவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, குறைபாடு ஏற்படும் நிலையில், உடனடியாக அதைக் களையும் செயல்பாட்டில் இறங்குவதே நல்ல பெற்றோருக்கு அழகு. ஆனால், பெற்றோர்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 62 சதவிகித பெற்றோர், உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளை வைத்திருப்பதாகவும், ஆனால் அது குறித்து அவர்கள் அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.

(IV) உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை - சிறு குழந்தைகளாக இருந்தபோது மேற்கொண்ட உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள், பருவமடைந்த பிறகு தொடர்வதில்லை. இதனால், சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் கலோரியே எரிக்கப்படாமல் உடலில் சேருவதுடன், அதிகக் கலோரி உணவுகளால் கூடுதலாகக் கிடைப்பவையும் உடலில் சேமித்து வைக்கப்படுவதால் உடற்பருமன் ஏற்படுகிறது.

வளரிளம் பருவத்தினர் தொடர்பான ஆய்விதழ் வெளியிட்டுள்ள தரவுகளும், வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்ஸ் போன்ற செயல்பாடுகளுக்கும் பருவவயதினரின் உடற்பருமன் அதிகரிப்புக்கும் மிக நெருங்கியத் தொடர்பு இருப்பதையும், உடற்பருமன் ஏற்படுவதற்கு இவையும் காரணம் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

(V) பொருளாதாரம் உள்ளிட்ட பிற சூழ்நிலைகள் - பருவ வயதினர் வசிக்கும் இடம், போக்குவரத்து வசதி, உணவு கிடைக்கும் வாய்ப்புகள், எந்தவொரு மகிழ்ச்சியையும் துரித உணவு அல்லது விருந்துணவுடன் கொண்டாடும் மனநிலை, மேம்பட்ட பொருளாதார வசதிகள் போன்றவையும் அவர்களின் எடையை நிர்ணயிப்பதாக உள்ளது.

உடற்பருமனால் என்னென்ன உடலநலக்கேடுகள் ஏற்படும்?

பள்ளிப் பருவம் மற்றும் வளரிளம் பருவம் என்ற இரண்டு நிலையிலும்; அதிகரிக்கும் உடற்பருமனானது, அவர்களுடைய மேற்படிப்பு, பணி, திருமணம், குழந்தைப்பேறு என்று எதிர்காலத்திலும் அவர்களுக்கு பிரச்னைகளைக் கொடுக்கவல்லது. மிகக் குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் நிலை நீரிழிவு, தூக்கமின்மை, சுவாசமண்டல பிரச்னைகள் போன்றவற்றை நடுத்தர வயதிலேயே சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது மட்டுமல்லாமல், அதிக உடற்பருமனால், உடல் எடையைத் தாங்க முடியாததாலும், உடலுக்குத் தேவையான நுண்சத்துகள் சரியாகக் கிடைக்காமல் குறைபாடு ஏற்படுவதாலும், மூட்டுத்தேய்மானம், எலும்பு மட்டும் தசைகளில் அடிக்கடி வலி ஏற்படுதல், உடலியங்கியல் நிகழ்வுகள் பாதிப்படைந்து, பித்தப்பை, சிறுநீரக பிரச்னைகள் போன்றவையும் ஏற்படலாம்.

உடல் ரீதியான பிரச்னைகள் பல இருக்கும் நிலையில், பருவவயதில் உடற்பருமன் இருக்கும் பெண் குழந்தைகள் அல்லது ஆண் குழந்தைகள் இருபாலருக்கும், உளவியல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கிறது.

ஒத்த வயதுடையவர்கள் சரியான உடல் எடை இருப்பதைப் பார்த்து, உடற்பருமன் உள்ள குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை, அதன்வாயிலாக சிறிது சிறிதாக அதிகரிக்கும் கவலை, பயம், எதிலும் விருப்பமின்மை, உணவை மறுத்தல், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளுதல், மன அழுத்தம் என்று முழு பாதிப்படைவதும் நிகழ்கிறது என்று வளரிளம்பருவ வயது ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வளரிளம் பருவத்தில் உடல் எடை சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்வதுதான் முதலில் செய்ய வேண்டிய செயல். ஒருவேளை அதிகரிக்கும் நிலையில் அல்லது உடற்பருமன் ஏற்பட்ட நிலையில், எடையைக் குறைப்பதற்கான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உடற்பருமனை அல்லது அதிக உடல் எடையைக் குறைப்பதற்கு மருத்துவச் சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என்றெண்ணி, முறையற்ற மருத்துவம் மற்றும் போலி மருத்துவம் போன்றவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது தவிர்க்கப்படவேண்டும்.

முறையான உணவுப் பழக்கம், இடைவேளை விட்டு உண்பது, சரியான நேரத்தில் உண்பது, ஒரு பங்கு முழு தானிய உணவும், அதற்கு இரண்டு மடங்கு காய்கள், கீரைகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக்கொள்வது, அளவான- தரமான கொழுப்புணவு, புரதச் சத்திற்கு மீன், முட்டை, பால், பருப்பு போன்ற சரிவிகித உணவுகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (ICMR) பரிந்துரைக்கப்பட்ட அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், தொடர்ச்சியான அசைவ உணவு, துரித உணவு, அதிகக் கலோரி, சர்க்கரை, கொழுப்பு இருக்கும் உணவுகள், பேக்கர் உணவுகள், சிப்ஸ் போன்ற நொறுக்குகள், சாக்லேட் உள்ளிட்ட பிற இனிப்புகள், ரெடிமேட் குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு வகைகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

உடலை எப்போதும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பது, நிம்மதியான தூக்கம், மது, புகைப்பழக்கம் தவிர்ப்பது, ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கும் வகையில் பருவவயதினரின் சூழலையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com