பணி ஓய்வுப் பெற்றவுடன் முடங்கிவிடாமல் மனதை உற்சாகமாய் வைத்திருந்தால், வாழும்வரை நோய்கள் தாக்காமல், உடலைப் பாதுகாக்கலாம். இதற்கு தடகளப் போட்டிகள் உதவுகின்றன'' என்கின்றனர் சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற எண்பது வயதான துரைராஜ்.
திருவறும்பூர் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட கணேசபுரத்தைச் சேர்ந்த துரைராஜ், எழில் நகரைச் சேர்ந்த செல்வராஜ், கலைச்செல்வன், மனோகரன், கூத்தைபார் ஜெய் நகரைச் சேர்ந்த செல்வராஜன் ஆகிய ஐந்து பேரும் பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றாலும், தடகளப் போட்டிகளில் ஆர்வமாக இருந்து தொடர்ந்து விளையாடி வந்தனர். இவர்கள் அண்மையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்று, திரும்பினர்.
இதுதொடர்பாக, துரைராஜிடம் பேசியபோது:
""பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருவோம்.
அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவு தடகளப் போட்டிகளில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றோம். இதைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று சர்வதேசப் போட்டியில் பங்கேற்ற தேர்வானோம்.
இலங்கை அரசின் விளையாட்டுத் துறை சார்பாக, கொழும்பு சுகததாச அரங்கத்தில் போட்டிகள் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்றன .இதில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
முப்பத்து ஐந்து வயது முதல் எண்பத்து ஐந்து வயது வரை பல்வேறு வயது பிரிவினரும்,அந்தந்த பிரிவு வயதினருக்கான போட்டிகளில் பங்கேற்றனர். இதில், அறுபது வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு பார்வையாளர்களையும், மக்களையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றோம். 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் திருச்சி பெல் நிறுவனத்தையொட்டியுள்ள பகுதிகளிலிருந்து எட்டு பேர் உள்பட தமிழ்நாட்டிலிருந்து 25 பேர் பங்கேற்றோம்.
திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாங்கள் ஐந்து தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை பெற்றோம்.
நான் (துரைராஜ்) ஹாம்மர் த்ரோவிலும், டிஸ்கஸ் த்ரோவிலும் இரண்டு தங்கப் பதக்கங்களையும், ஜாவ்லின் úத்ராவில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றேன். 300 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் செல்வராஜ் பெற்றார். ஹாம்மர் úத்ராவில் வெண்கலப்பதக்கத்தை கலைச்செல்வன் பெற்றார்.
போல்வால்ட் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மனோகரனும், ஹாம்மர் த்ரோவிலும், டிஸ்கஸ் த்ரோவிலும் வெள்ளிப் பதக்கங்களை செல்வராஜனும் பெற்றனர்.
இந்தியாவின் சார்பில், வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. தங்கம்,வெள்ளி,வெண்கலப்பதக்கங்கள் வென்றது இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
இலங்கையிலிருந்துத் திரும்பிய எங்களுக்கு எங்கள் பகுதி மக்கள் சிறப்பாக வரவேற்பை அளித்தது, உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவே முதியோர்கள் இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவுடன் முடங்கிவிடாமல் மனதை உற்சாகமாய் வைத்திருப்பதற்கும், வாழும் வரை நோய்கள் தாக்காமல், உடலைக் கச்சிதமாக வைத்திருக்கலாம். இதற்கு, தடகளப் போட்டிகள் உதவுகின்றன'' என்கிறார் துரைராஜ்.
எஸ்.ரம்யா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.