சிறுமியின் சாதனை..!

இளம் இயக்குநரின் அசத்தல் படைப்பு!
-தி.நந்தகுமார்
-தி.நந்தகுமார்
Published on
Updated on
2 min read

"குண்டான் சட்டி' எனும் அனிமேஷன் ஃபிலிமை "செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ்' எனும் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தக் கதையை எழுதி, இயக்கியிருப்பது பன்னிரெண்டு வயதே நிரம்பிய ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி பூ.கா. அகஸ்தி. இளம் வயதிலேயே சிறுமி திரைப்பட இயக்குநராகியிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட கும்பகோணம் அருகே கொரநாட்டுக்கருப்பூர் கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றை தொகுத்துள்ள சிறுமி அகஸ்தி உருவாக்கிய அனிமேஷன் ஃபிலிம் இதுவாகும்.

இதுகுறித்து அகஸ்தியிடம் பேசியபோது:

""கருப்பூர் கிராமத்தில் குப்பன், சுப்பன் என்ற நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கின்றனர். இருவருக்கும் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. குப்பனுக்கு வித்தியாசமான தோற்றத்துடன் மகன் பிறக்கிறான். இரண்டு குழந்தை

களுக்கும் குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் என்று பெயர் சூட்டுகிறார்கள்.

குண்டானும், சட்டியும் மற்றவர்களின் கேலிகளுக்கு வருத்தப்படாமல் நன்றாகப் படிக்கின்றனர். அவர்களது கிராமத்தில் கோயில் நிலத்தை வைத்திருக்கும் பண்ணையார், அதிக வட்டி வசூலிக்கும் சேட்டு, பொருள்களைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரி என மூவரையும் புத்திசாலிதனமாக இருவரும் ஏமாற்றுகிறார்கள்.

இருவரும் செய்யும் சேட்டைகள் குப்பனுக்கும், சுப்பனுக்கும் தெரியவர, குண்டானையும், சட்டியையும் மூங்கில் மரத்தில் கட்டி ஆற்றோடு விடுகின்றனர். இருவரும் வாழைத்தோப்புக்காரர், சலவை தொழிலாளி, குதிரைக்காரன், பேராசை கிராமம் என அவர்களிடமும் தங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டி பணம் சேர்க்கிறார்கள்.

குண்டானும், சட்டியும் மீண்டும் ஊருக்குள் வர. இவர்களால் பாதிக்கப்பட்ட பண்ணையார், சேட்டு, வியாபாரி ஆகிய மூவரும் அடியாள்களை அனுப்பி தூக்கி வரச் சொல்கின்றனர்.

அடியாள்கள் இருவரையும் அழைத்து செல்வதைப் பார்த்த அணில், வாத்தியார் பெற்றோருக்கு தெரியப்படுத்த குண்டானும், சட்டியும் காப்பாற்றப்பட்டார்களா ?, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைத்ததா? என்பதுதான் கதையின் கிளைமாக்ஸ்.

இதோடு மாணவர்கள் பள்ளியிலும், பெற்றோர்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எப்படி படித்து முன்னேற வேண்டும் என்பதையும் விழிப்புணர்வோடு சொல்லியிருக்கிறேன்.

கதை, இயக்கத்தை நான் கவனிக்கிறேன். திரைக்கதை, வசனம், பாடல்களை அரங்கன் சின்னத்தம்பி எழுதியிருக்கிறார். எனது தந்தையும் கார்த்திவித்யாலயா இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக இயக்குநருமான எஸ்.ஏ.கார்த்திகேயன், இந்தப் படத்தை "செல்லம்மாள் மூவி மேக்கர் நிறுவனம்' சார்பில் தயாரித்துவருகிறார்.

எனது பள்ளிப்படிப்புக்கு இடையூறு ஏற்படாமல், விடுமுறை நாள்களில்தான் படப்பணிகள். ஏப்ரல் மாதத்தில் மேலும் இரு படங்களையும் எழுதி இயக்க உள்ளேன். எதிர்காலத்தில் மருத்துவம் படித்து, மருத்துவச் சேவை புரிய விருப்பம். அதேநேரத்தில், ஓய்வு நேரத்தில் திரைத்துறையிம் சாதிப்பேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com