பாடல் தொகுப்பில் புது முயற்சி!

பாடல் தொகுப்பில் புது முயற்சி!
Picasa
Updated on
2 min read

தமிழ்த் திரைப்படப் பாடல்களை ரசிப்பவர்களும், மனதைப் பறிகொடுத்தவர்களும், விமர்சகர்களும் செய்யாத சாதனையைச் செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஆர். ரெங்கராஜன்.

எம்.கே.தியாகராஜ பாகவதர், பி. யு . சின்னப்பா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி. சுந்தராம்பாள், டி .ஆர்.மகாலிங்கம் உள்ளிட்டோர் தொடங்கி பி.சுசிலா, ஜமுனா ராணி, நடிகை பானுமதி, ஏ.பி. கோமளா பாடிய திரைப்படங்களின் பாடல்களைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டுள்ளார்.

எல்லா பாடல்களிலும் அந்தப் பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர், இசையமைப்பாளர், பாடலை இயற்றிய கவிஞர், பாடலைப் பாடியவர், பின்னணிப் பாடகர், நடிகர், நடிகை போன்ற தகவல்களையும் மறக்காமல் ரெங்கராஜன் பதிவு செய்துள்ளார்.

இந்த முயற்சி குறித்து அவர் கூறியதாவது:

""அந்தக் காலத்தில் சொந்தக் குரலில் எம்.எஸ். சுப்புலட்சுமி, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் பாடல்களைப் பாடினர். பின்னர் திரைப்படப் பாடல்கள் பாடும் பாணி கர்நாடக இசையிலிருந்து மெல்லிசைக்கு மாறியது. பின்னணி பாடுவதும் அறிமுகமானது.

திருச்சி லோகநாதன், டி .எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம். ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ், கண்டசாலா, ஏ.எல்.ராகவன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், யேசுதாஸ், எம்.எஸ். ராஜேஸ்வரி, பி.லீலா, பி.சுசிலா, ஜிக்கி, ஜமுனாராணி, எஸ். ஜானகி, எல் .ஆர்.ஈஸ்வரி உள்ளிட்ட பாடகர்கள் அறிமுகமாகினர். இவர்களின் பாடல்களைத் தொகுத்ததுடன் இவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வளர்ந்த நான் ஒரு கடமையாக நினைக்கிறேன்.

Picasa

பாட்டுப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைத்தவை சிலதான். மற்றவற்றை சிரமப்பட்டுதான் சேகரித்தேன். பலரிடம் பழைய பாட்டு புத்தகங்களின் சேகரிப்பு உள்ளது. ஆனால் தந்து உதவ மாட்டார்கள். அதில் சிலர் பெரிய மனதுவைத்து, காப்பி எடுத்து தருவார்கள். சினிமா பாடல்கள் குறித்து பல ஆய்வுக் கோணங்களில் பங்களிப்பு செய்பவர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிமுகம் எனக்கு உள்ளதால் பரஸ்பரம் பாடல்களைப் பகிர்ந்து கொள்வோம். ஒருவர் செய்யும் முயற்சியை இன்னொருவர் செய்யக் கூடாது என்று விதிமுறையை நாங்கள் வகுத்துக் கொண்டுள்ளோம்.

திரைப் பாடல்களைத் தொகுத்து அதை ஓர் ஆவணமாக வெளியிட்டு வருகிறோம். அப்படி வெளியிடும் என்னைப் போன்றவர்களைத் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பொருட்படுத்தவில்லை. ஒரேயொரு விதிவிலக்கு உண்டு.

நடிகை சாவித்திரி வாழ்க்கை "மகாநதி' திரைப்படமாகி வெற்றி பெற்றதையொட்டி, சாவித்திரி படப்பாடல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டேன். அதை அறிந்த சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி என்னைப் பாராட்டினார். அதுபோல், பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள் தொகுப்பு உருவாக, அவருடைய மகன் பாடல்கள் பட்டியலைத் தந்து உதவினார்'' என்கிறார் ரெங்கராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com