என் குரலுக்கு இன்னும் வயதாகவில்லை!

என் குரலுக்கு இன்னும் வயதாகவில்லை!
Picasa
Published on
Updated on
1 min read

"பெண்களின் குரல் பொதுவாக, மென்மையாக, இனிமையாக இருக்கும். ஆண்மைத்தனம் கொண்ட கட்டைக் குரல் உள்ள பெண் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள் என்று நினைத்தவர்கள் இருந்தனர். எனது கணீர் குரலால் இந்தச் சிக்கலில் சிக்கிக் கொண்டேன். தடைகளை உடைத்து எதிர்நீச்சல் போட்டு மக்கள் விரும்பும் பாடகியாக மாறியதற்கு ரசிகர்கள்தான் காரணம்'' என்கிறார் "பத்ம பூஷண்' விருது பெற்ற உஷா உதூப்.

தொடக்கத்தில் "உஷா அய்யர்' என்று அறியப்பட்டவர் ஜானி உதூப்பை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டதும் உஷா உதூப் ஆனார். இவருக்கு சன்னி என்ற மகனும் அஞ்சலி என்ற மகளும் இருக்கின்றனர். உஷா, அஞ்சலி, பேத்தி ஆயிஷா மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை தற்போது வழங்கி வருகின்றனர். உஷா உதூப் சுயசரிதை "பாப் இசையின் அரசி' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

அவரிடம் பேசியபோது:

""ஐம்பத்து ஐந்து ஆண்டுகளாக மேடைகளில் பாடி வரும் எனக்கு, தற்போது எழுபத்து ஆறு வயதாகிறது. ஆனால், என் குரலுக்கு இன்னும் வயதாகவில்லை.

எனது குடும்பத்தில் அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் இசைப் பிரியர்கள். எந்த இசைப் பிரிவிலும் நான் பயிற்சி பெறவில்லை. சாஸ்திரிய சங்கீதத்தில் பயிற்சி பெற எனது கட்டைக்கு குரல் தடையாக இருந்தது. அதற்கு மேற்கத்திய பாடல்கள் பொருத்தமாக இருக்கும் என்று ஆங்கிலப் பாடல்களை பாட ஆரம்பித்தேன். அதுவே எனது அடையாளமாகவும் மாறியது.

நட்சத்திர விடுதிகளில் செயல்படும் "இரவு கேளிக்கை' நிகழ்ச்சியில் பாடகியாக, சென்னையில் பாட ஆரம்பித்தேன். பிறகு கொல்கத்தா, மும்பை, தில்லி கொச்சி.. என்று மாநகரங்களிலும், வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை ஏராளமாக நடத்தியிருக்கிறேன்.

இரவு கேளிக்கை விடுதிகளில் "பாப்' பாடல்களைப் பாட சேலை, பொருந்தாது என்றாலும், எனக்கு ஒரு அடையாளமாக பிராண்டாக சேலை, பிளவுஸ், சற்றே அகலமான பொட்டு, கை நிறைய வளையல்களில் தோன்றினேன்.

தமிழில் முதன் முதலாகப் பாட வாய்ப்பு வழங்கியவர் பிரபல இசையமைப்பாளர் குன்னக்குடி. "மேல்நாட்டு மருமகள்' படத்தில் 1975-இல் "லவ் ஈஸ் பியூட்டிபுல்...' என்ற பாடலைப் பாடும் வாய்ப்பை வழங்கினார். அவர்தான் "மதன மாளிகை' திரைப்படத்தில், "அங்கொரு மங்கோ ட்ரீ ஆன் தி பாங்க்ஸ் ஆஃப் தி காவிரி ', இதயக்கனி திரைப்படத்தில் "ஹலோ லவர் மிஸ்டர் லைன்', "வாங்க சம்பந்தி வாங்க' திரைப்படத்தில் பானுமதி ராமகிருஷ்ணாவுடன் இணைந்து பாடியிருக்கிறேன்.

ஆங்கிலத்தைத் தவிர, 17 இந்திய மொழிகளில், 8 வெளிநாட்டு மொழிகளில் பாடியிருக்கிறேன். பாடி வருகிறேன். ஆரம்பத்தில் கொல்கத்தாவில், அரசு அரங்கங்களில் எனது இசை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டபோது, உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதியைப் பெற்றேன். அந்த காலத்தில் டி.வி., சானல்கள் இல்லை. அச்சு ஊடகங்கள் மூலமாக, நான் தொடர்ந்து பிரபலமாக இருந்தேன். எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்த செய்தியை கமல்தான் தெரிவித்தார்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com