

உடல் வெப்பம்தான் பல்வேறு நோய்களுக்கு அடிப்படைக் காரணமாகிறது. அதைத் தணிக்கும் வாழை இலை குளியல் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. சில அரசு மருத்துவமனைகளிலுள்ள இயற்கை மருத்துவப் பிரிவிலும் வாழை இலை குளியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதனுடைய பலன்கள் குறித்து தஞ்சாவூர் கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆயுர்வேத மருத்துவர் கிருத்திகா, யோகா- இயற்கை மருத்துவர் செல்வ ஸ்ரீவித்யா ஆகியோர் பேசியது:
'கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாழை இலை குளியல் சிகிச்சை முறை இலவசமாகவே கடந்த பிப்ரவரி 8-இல் தொடங்கப்பட்டது. இந்தச் சிகிச்சைக்கு படிப்படியாக வரவேற்பு இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். ஆங்கில சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பயனாளிகளும் கூடுதலாக இந்த வாழை இலை சிகிச்சையைப் பெறலாம்.
வாழை இலை குளியல் சிகிச்சையை மிதமான வெயில் நேரமான காலை 8 முதல் 9 மணியளவில் எடுத்துகொள்ள வேண்டும். இந்தச் சிகிச்சைக்கு சூரிய ஒளி அவசியம். இச்சிகிச்சைக்கு முன்பாக 2 முதல் 3 டம்ளர் அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பின்பு வயிற்றுப்பகுதியில் களிமண் கலவை பூசப்படும். ஈரத் துணியைச் சிகிச்சை எடுத்துகொள்பவரின் தலையில் வைக்கப்படும். இந்தச் சிகிச்சையின்போது குறைந்தபட்ச ஆடை மட்டுமே உடுத்திக் கொள்ள வேண்டும்.
தரையில் போடப்படும் பாய் விரிப்பில் படுக்க வைத்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் எந்தப் பாகமும் வெளியில் தெரியாதபடி வாழை இலைகளைச் சிகிச்சை எடுத்துக் கொள்பவரின் உடலில் சுற்றிக் கட்டப்படும். ஒரு நபருக்கு மொத்தம் 10 வாழை இலைகள் தேவைப்படுகின்றன. தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு வாழை இலைகள் சுற்றப்பட்ட நிலையில்
வெயிலில் படுத்திருக்க வேண்டும். இந்தச் சிகிச்சை முறைக்கு வாழை இலை குளியல் எனப்படுகிறது.
இந்தக் குளியல் மூலம், உடல் பருமனைக் குறைத்தல், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்தல், தோல் நோய்களிலிருந்து முழுமையாகக் குணமடைதல், உடலில் உள்ள அனைத்து நச்சுத்தன்மையையும் வெளியேற்றுதல், தூக்கமின்மையைப் போக்குதல், உடலில் ஏற்படும் கெட்ட வாடையை நீக்குதல், சுவாசக் கோளாறுகளைச் சீர்செய்தல், ஒற்றைத் தலைவலியைப் போக்குதல், மூட்டு வலி - பாத எரிச்சலை சரி செய்தல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன. இக்குளியலை வாரத்துக்கு ஒருமுறையும், மாதத்துக்கு நான்கு முறையும் எடுத்துக் கொள்வதன் மூலம் சிறந்த பலனைப் பெற முடியும்' என்றனர் கிருத்திகா, செல்வ ஸ்ரீவித்யா.
இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சியின் மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ்காந்தி கூறியதாவது:
'மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து 3 முறை முதலிடத்தைப் பெற்றது. பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிலையத்தில் இந்திய மருத்துவம்- ஹோமியோபதி துறையும் தொடங்கப்பட்டது.
இதன் மூலம், நமது சங்ககால மருத்துவ முறையான வாழை இலை சிகிச்சை முறை பிப்ரவரி 8-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலேயே நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் இச்சிகிச்சை முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
மன அழுத்தத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்குக் கிடைக்கும் விதமாக நலவாழ்வு மையமும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார்.
வி.என்.ராகவன் | படம் - எஸ். தேனாரமுதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.