கல்வி இணைச் செயல்பாடுகளில் ஓர் அமைப்பான நாட்டு நலப் பணித் திட்டத்தின் (என்.எஸ்.எஸ்.) வாயிலாக, சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்கி வருகிறார் திட்ட அலுவலரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான சுப்பாராஜு.
என்.எஸ்.எஸ். என்றாலே கோயில்களைச் சுத்தம் செய்தல், மருத்துவ முகாம்களை நடத்துதல், விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல் என சேவைப் பணிகளில் ஈடுபடுவோர் மத்தியில், சாகசச் சாதனைகளை தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
இதுகுறித்து ரெ.சுப்பாராஜுவிடம் பேசியபோது:
'நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒழுக்கம், தற்காப்பு உடற்பயிற்சிகளை அளிக்கின்ற வகையில் தேசிய மாணவர் படை என்ற திட்டம் (என்.சி.சி.) 1948-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் மாணவர்களுக்கு பொது சேவைப் பணிகளில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்ற நோக்கில் நாட்டு நலப் பணித் திட்டமானது 1969- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தேசிய சேவை அமைப்பில் பலவிதமான சேவைப் பணிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் சாகச விளையாட்டுகள். அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதற்
கிணங்க, குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சாசக விளையாட்டுகளில் மாநில அளவில் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.
இருபத்து ஐந்து ஆண்டுகளாகத் திட்ட அலுவலராகப் பணியாற்றிவரும் நான், தொலைநோக்கு சிந்தனையுடன் கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல், வேளாண்மை, தூய்மை இந்தியா திட்டப் பணி, இளைஞர் சாதனை விளையாட்டுகள் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மாணவர்களைத் தயார் செய்து வருகிறேன்.
மாணவர்களிடையே வீர, சாகச விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கிலும், வாழ்க்கையில் புதிய அனுபவத்தைப் பெறவும் கிளைடர் விமான பயிற்சி,பாராசூட் பயிற்சி, நீண்ட தூர சைக்கிள் பயணம், கடல் நீச்சல், நீண்ட தூர ஓட்டம், மலையேற்ற பயிற்சியை மத்திய, மாநில அரசு துறைகளின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு அளித்து வருகிறேன்.
மாணவர்களுக்கு மன இறுக்கத்தைப் போக்குவதோடு, நெருக்கடியான காலங்களில் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுக்கிறது. சாதனை உணர்வு கொண்ட மாணவர்களை வருங்காலத்தில் சாதனையாளர்களாக மாற்றவும் இது உதவுகிறது.
மத்திய அரசின் தேசிய இளைஞர் நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சாதனை அமைப்பு மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு ஒற்றை எஞ்சினில் இயங்கும் கிளைடர் விமான பயிற்சி, பாரா சூட்டில் இறங்கும் பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி மணப்பாடு வரை எனது தலைமையில் மாணவர்கள் சைக்கிளில் சென்றோம். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் பல்வேறு பகுதிகளில் 45 முறை மலையேற்ற பயிற்சி என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஆரோக்கியமான உடல் அமைப்பு, காடுகளை பற்றிய சுற்றுச்சூழல் உணர்வு, மரம் வளர்ப்பின் மகத்துவம் எல்லாவற்றிற்கும் மேலாக
இயற்கையை நேசிக்கும் ஆர்வம் மாணவர்களுக்கு உண்டாகிறது.
வட்டக்கோட்டை முதல் கன்னியாகுமரி வரை கடல் நீச்சல் சாகச பயிற்சியிலும் இந்த மாணவர்கள் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு தொலைதூர நீச்சல் போட்டியும் நடத்தப்பட்டது. இத்தகைய சாகச பயிற்சிகளால் மாணவர்களின் தன்னம்பிக்கையும் மேம்பட்டது.
சாதனை விளையாட்டுப் பயிற்சிகளின் மூலம் பல மாணவர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக, தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பங்கு பெறுவதற்கான பயிற்சியையும் நான் வழங்கி வருகிறேன்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி இருமுறை இமயமலையை ஏறியுள்ளேன். மாநில வனத்துறையுடன் புலிகள் கணக்கெடுப்பிலும் பல முறை பங்கேற்றுள்ளேன்.
இத்தகைய செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் இளைஞர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தில்லியில் உள்ள நாட்டு நலப் பணித்திட்ட அமைச்சகமும், தென் மண்டல என்.எஸ்.எஸ் இயக்குநரும் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் விருதும், தமிழ்நாடு அரசின் மாநில நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளேன். ஐந்து முறை மாவட்ட ஆட்சியர் சிறப்பு நற்சான்றிதழ் பெற்றுள்ளேன்.
இப்படி சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கும் இத்தகைய சாகச பயிற்சிகள் உதவியாகவுளளன' என்றார் சுப்பாராஜூ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.