சமவெளியில் மிளகு சாகுபடி

சமவெளியில் மிளகு சாகுபடி
Published on
Updated on
1 min read

மலைப் பகுதிகளில் மட்டுமே விளையும் மிளகு சாகுபடியை, காவிரிப் படுகை மாவட்டமான மயிலாடுதுறையில் குத்தாலம் அருகேயுள்ள அரையபுரம் கிராமத்தில் சமவெளிப் பகுதியில் மேற்கொண்டு வருகிறார் விவசாயியான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரமணி.

அவரிடம் பேசியபோது:

''சமவெளியில் நெல், கரும்பு, பருத்தி, வாழை, உளுந்து, பயறு, காய்கனி போன்ற பயிர்களையே விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். உணவுப் பொருள்களில் மருத்துவக் குணம் நிறைந்த, 'கருப்புத் தங்கம்' எனப்படும் மிளகு சாகுபடி மலையும், மலைசார்ந்த இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.

ஆனால், எனது வீட்டுத் தோட்டத்தில் வண்டல் மண் நிறைந்த 3 ஏக்கரில் சமவெளியில் மிளகு சாகுபடி செய்து நிருபித்துள்ளேன். நூறு மிளகு கன்றுகளை வாங்கிவந்து, மிளகு கொடிகள் படர்வதற்கு தனியாக செலவு செய்யாமல், தோட்டத்தில் தேக்கு, தென்னை, மகாகனி உள்ளிட்ட மரங்கள் சாகுபடி செய்யப்பட்ட இடத்தில் இந்த மிளகு செடிகளையும் நடவு செய்து கொடிகளை மரங்களில் படரவிட்டுள்ளேன்.

சாகுபடி செய்து மூன்றரை ஆண்டுகளில் முதல் அறுவடை செய்தபோது, ஒரு மரத்தில் படரவிடப்படும் மிளகுச் செடியிலிருந்து 10 கிலோ பச்சை மிளகு கிடைத்தது. அதை பதப்படுத்தி, கிடைக்கும் மூன்றரை கிலோ காய்ந்த மிளகை கிலோ ஒன்றுக்கு ரூ.800 வரை விற்பனை செய்தேன்.

மிளகு செடிகளை நடவு செய்து இரண்டுமுறை இயற்கை உரம் அளித்தால் போதும். வேறு இதர செலவுகள் செய்யத் தேவையில்லை.

எனது தோட்டத்தில் 400 மரங்களில் மிளகு சாகுபடி செய்து, கடந்த ஆண்டு அறுவடையில் ரூ.50 ஆயிரமும், நிகழாண்டு ரூ.1 லட்சமும் லாபம் சம்பாதித்துள்ளேன்.

டெல்டா பகுதியில் சாகுபடி செய்ய பன்னியூர் ரக மிளகே சிறந்ததாக உள்ளது. 12 வருடங்களாக மிளகு சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டிவருகிறேன்.

எனது வீட்டின் அருகில் 'ஈஷா காவிரி கூக்குரல் அமைப்பு' சார்பில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தேன். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடலாம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com