பசித்தோர்க்கு உணவு

நாளொன்றுக்கு 25 கிலோ அரிசி, காய்கனிகள் தேவைப்படுகின்றன. சமைப்பதற்கு விறகு அடுப்பையே பயன்படுத்தி வருகிறோம்.
பசித்தோர்க்கு உணவு
Published on
Updated on
2 min read

- சி. சுரேஷ்குமார்

""வயிற்றுக்கு சோறிட வேண்டும்; இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்..'' என்றார் மகாகவி பாரதியார். இந்த வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட கருங்கல், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில், பசித்த மக்களுக்கு ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் மதிய உணவை வழங்கிவருகிறார் "பசித்தோர்க்கு உணவு' அமைப்பின் தலைவர் கருங்கல் ஆர். ஜார்ஜ்.

எம்.ஏ. பட்டதாரியான இவர், அறுபத்து ஆறு வயதானவர். தனது தனித்த அடையாளமாக சிவப்புத் துண்டை கழுத்தில் அணிந்து நிமிர்ந்து நடக்கும் மனிதம் நிறைந்தவர். அவரிடம் பேசியபோது:

""எனது சிறு வயதிலேயே சமூகச் சேவைகளில் அதிக ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறேன்.

வெளியூர்களுக்கு செல்லும் வேளையில் மதிய உணவுக்கு கூட கையில் பணம் இல்லாத நிலை ஏற்பட்டதுண்டு. ரூ. 40, ரூ. 50}க்கு மதிய உணவு வழங்கும் சின்ன பட்ஜெட் உணவகங்களைத் தேடி அலைந்து, சாப்பிட்ட நாள்கள் பல உண்டு. வெளியே சொல்ல முடியாத இந்த நிலையை உணர்ந்தேன்.

"குறைந்தது பத்து ஏழைகளுக்கு மதிய உணவு கொடுக்க வேண்டும். கையில் பணமின்றி மதிய உணவுக்கு நான் பட்ட கஷ்டங்கள் போல வேறு எவரும் கஷ்டப்படக் கூடாது ‘ என்ற எண்ணத்தில் 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் "பசித்தோர்க்கு உணவு' என்ற அமைப்பை துவங்கினேன்.

தற்போது கருங்கல் பகுதியிலிருந்து 4 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கருமாவிளை, வெள்ளியாவிளை, காட்டுக்கடை, சுண்டவிளை, அணஞ்சிக்கோடு, கண்ணன்விளை, பாலூர், மூசாரி, கொல்லன்விளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 150 பேருக்கு நாள்தோறும் அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக ஒருநாள் கூட தடைபடாமல் உணவு வழங்கப்படுகிறது. கரோனா பரவல் காலத்திலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று மதிய உணவு தடைபடாமல் வழங்கினோம்.

கணவரை இழந்த பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள், முதிர்கன்னிகள், மூளைவளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், சாலையோரம் யாசகம் பெறுபவர்கள் உள்ளிட்டோருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. உணவு கொண்டு செல்லும் வழியில் யாரேனும் உணவு கேட்டாலும், அவர்கள் யார் என்பது குறித்தெல்லாம் கேட்காமல் உணவுப் பொட்டலத்தை வழங்குவோம்.

நாளொன்றுக்கு 25 கிலோ அரிசி, காய்கனிகள் தேவைப்படுகின்றன. சமைப்பதற்கு விறகு அடுப்பையே பயன்படுத்தி வருகிறோம். தினசரி செலவாக ரூ. 3,500 வரை செலவாகிறது. மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரை தேவைப்படுகிறது.

மதிய உணவில் அரிசி சாதம், முட்டைக்கோஸ், பயறு, பீட்ரூட், கேரட், வெண்டைக்காய் பொரியல் இவற்றில் ஏதேனும் ஒரு கூட்டும், சாம்பார் அல்லது ரசம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு கறியும் வழங்கி வருகிறோம். சில முக்கிய நபர்கள் அசைவ உணவுகளை வழங்கவும் உதவி செய்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்யும் உணவுகளில் ஒரு பகுதியை தந்து உதவுகிறார்கள்.

விசேஷ நாள்களை கருத்தில் கொண்டு, நல்லுள்ளம் கொண்ட பலர் பணமாகவும், பொருளாகவும் உதவிகளை செய்கின்றனர். அரிசி, பருப்பு, காய்கனி, விறகு.. என எந்தப் பொருளானாலும் அழைப்பின் பேரில் உதவுபவரின் இருப்பிடத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வாங்கி வருவதும் உண்டும்.

எனது இறுதி காலம் வரை எந்த தடங்கலும் இன்றி இந்த மதிய உணவு சேவை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறேன். எனக்குப் பிறகும் சேவை தொடர வேண்டும் என கருங்கல் லயன்ஸ் கிளப் ஆஃப் சஷோன் அமைப்பினர், நாஞ்சில் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடி நின்றேன்' என்று பயிர்களுக்கும் இறங்கிய வள்ளலார் ஏற்றிவைத்த அடுப்பு நூற்றாண்டை கடந்தும் இன்றும் அணையாமல் எரிகிறது. நம் எல்லோர் மனதிலும் அவருடைய லட்சியம் இடம்பெற்று, பசிப்பிணி போக்கும் வண்ணம் நாம் செயல்பட வேண்டும்.

பல ஆண்டுகள் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த நான், 1989-94 வரையில் 5 ஆண்டுகள் சட்டப்பேரவையில் பத்திரிகையாளராகச் செயல்பட்டுள்ளேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com