தினம்தோறும் தேநீர் கடைகளில் கூடும் காது கேளாத, வாய்ப் பேச முடியாத மாற்றுத்திறன் இளைஞர்கள் மூவர், தங்களுக்குள் சைகை மொழியில் பேசிக் கொண்டு நட்பு பாராட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியை அடுத்த சின்னகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இருபத்தெட்டு வயதான அருள் பாண்டியன், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த புத்திரகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முப்பது வயதான ஜெயமுருகன், ஆத்தூரைச் சேர்ந்த முப்பது வயதான பெரியசாமி ஆகிய மூவரும்தான் அவர்கள்.
இவர்கள் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அண்மைக்காலத்தில் நண்பர்களாகிவிட்டனர். பிறவியிலேயே வாய்ப் பேச முடியாத, காது கேளாத மூவரும் தினம்தோறும் வேலைக்குச் சென்று திரும்பியதும் வாழப்பாடிக்கு வந்து தேநீர் கடைகளில் சந்தித்துகொள்கின்றனர்.
எந்தவித வார்த்தைகளையும் உதிக்காமலேயே, உதட்டு அசைவிலும், சைகை மொழியிலுமே பல்வேறு தகவல்களை அலசி ஆராயும் இவர்கள், மிகுந்த உற்சாகத்தோடு ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பகிர்ந்து நட்பைப் பாராட்டி மகிழ்கின்றனர்.
மூவர் குறித்து அங்கிருந்தோரிடம் பேசியபோது:
'நல்ல உடல் நிலையும், சிறந்த மனத்திறனும் கொண்டவ மூவரிடம் அவர்களுடைய உறவினர்களோ, நண்பர்களோ மனம் விட்டு பேச போதிய நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் இங்கு சந்தித்துகொள்கின்றனர்.
இயந்திரத்தனமான வாழ்க்கை நடத்துவோர் ஓய்வுநேரங்களில் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தாலும் கைப்பேசியிலேயே அதிக
கவனம் செலுத்துவதோடு, குணம் தெரியாதவர்களோடு இணையத்தில் பேசுவதிலேயே நேரத்தை வீணடிக்கின்றனர். இதனால், நட்பும், உறவும் தற்கால சமூகத்தில் பிணைப்பின்றி மனித குலத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகி வருகிறது.
இவர்களைக் காணும்போது, நல்ல திடகாத்திரமான உடல், மனநிலை கொண்டிருந்தும் பல்வேறு பிரச்சனைகளை மனதில் இருத்திக் கொண்டு மனக்குழுப்பத்தோடு சோகத்தில் வாழ்பவருக்கும் தெளிவு பிறக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவை உடல் கிடையாது. உண்மையான அன்பும், மகிழ்ச்சியான மனமும்தான்'' என்றனர்.
-பெ.பெரியார்மன்னன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.