பொய்த் ஆஃப் பித் தீவு: மக்களின் பண்பாட்டை மீட்போம்...

பண்பாட்டை மீட்கும் பிரட்நெக்ரிட் பயணம்!
பொய்த் ஆஃப் பித் தீவு: மக்களின் பண்பாட்டை மீட்போம்...
Published on
Updated on
2 min read

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள 'பொய்த் ஆஃப் பித்' தீவானது சுமார் 4.50 லட்சம் மக்கள்தொகை கொண்டது. அது புவியியல் ரீதியில் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்தாலும், பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வசிப்போரில் மேற்கு வங்கம், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய வம்சாவளியினர்தான் பெரும்பான்மையினர். இவர்களின் பெயர்கள் துர்க்கி, குப்பம்மாள்.. என்று பிரான்ஸ் நாட்டுப் பெயருடன் சேர்த்து அடையாளப்படுத்தப்படுகிறது.

அந்த அடையாளத்தை கண்ட அங்குள்ள மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிரட்நெக்ரிட் திருமணமே செய்துகொள்ளாமல் பண்பாட்டு, கலாசார ஆய்வில் ஈடுபட்டார்.

ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டவரான தியோபில் நெக்ரிட்ட- புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட நெக்ரிக் குப்பம்மாள் வழிவந்தவர்கள் என்பது தெரிந்தது. இதையடுத்து, புதுச்சேரியில் தனது மூதாதையர் வாழ்விடம் தேடி வந்த அவரிடம் பேசியபோது:

'பள்ளிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தீவில் வசிப்போரின் பூர்வீகத்தை அறியாமலிருக்கும் மக்களுக்கு அவர்களை அடையாளப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன்.

1854- ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக் கப்பல் தனது நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட டிரியூனியன் தீவு, மேற்கிந்திய தீவுப் பகுதிகள், கொல்கத்தா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதியிலிருந்து தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு, 'பொய்த் ஆஃப் பித்' தீவுக்கு அழைத்து வந்தது. அங்கு கடந்த ஐந்து தலைமுறைகளாக வாழும் அம்மக்களுக்கு தாங்கள் இந்தியர்கள் என்பது மட்டுமே தெரிகிறது.

ஹிந்தி, பெங்கால், தமிழ் பேசுவோர் தங்களுக்குள் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதால் தங்களது தனி மொழி, கலாசார அடையாளத்தை இழந்தனர். இவர்களுடன் பிரான்ஸ் நாட்டவருடனும் அவர்கள் திருமண உறவை கொண்டதாலும் பூர்வீக அடையாள தேசத்தை தொலைத்துவிட்டனர்.

எனது பாட்டியின் பெயர் துர்க்கி குப்பம்மா. கொல்கத்தாவின் துர்க்காவையும், தமிழின் குப்பம்மாவையும் சேர்த்து வைக்கப்பட்ட பெயர்.

அதையடுத்தே எங்கள் தீவு மக்களிடம் இந்திய கலாசார, பண்பாட்டு ரீதியிலான தொடர்பை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடும் ஆர்வமும் பிறந்தது. முதலில் இந்தியர் என்ற அளவுகோலை வைத்தும், அதன்பின் தமிழர்கள் என்ற நிலையிலும் பணி தொடர்கிறது.

பொய்த் ஆஃப் வித் தீவில் வாழ்வோரில் 55 சதவிகிதம் பேர் தமிழர்கள். ஆனால், அவர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. அவர்களது பெயர் பிரான்ஸ் மொழியில் தொடங்கி குப்பன், ராமசாமி, குப்பம்மாள், வள்ளி.. என முடியும். அவர்கள் கோயில் கட்டி மதுரைவீரன், மாரியம்மாளை வணங்கிவருகின்றனர். அங்குள்ள இந்தியப் பெண்கள் மேற்கத்திய உடையில் இருந்தாலும் கோயில் திருவிழாக்களின்போது சேலை உடுத்தி, தலையில் மல்லிகைப்பூ வைக்கும் பழக்கத்தை மட்டும் விடாமல் தொடர்கின்றனர்.

தற்போது அங்குள்ள குழந்தைகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம், காஞ்சி மாமுனிவர் தமிழ் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இணைய வழி தமிழ் கற்பித்தல் முறையும், புதுதில்லி ஹிந்தி பிரசார சபாவுடன் இணைந்து ஹிந்தியையும் கற்றுத் தருகிறேன்.

இந்திய நாட்டின் சுதந்திர, குடியரசு தினங்கள், தீபாவளி, பொங்கல், சித்திரைத் திருநாள், ஹோலி, சங்கராந்தி உள்ளிட்ட விழாக்களை நடத்திவருகிறேன். இந்திய வானொலி உரைகளும் அங்குள்ளவர்களுக்கு ஒலிபரப்பட்டுவருகின்றன. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தமிழர்கள் என அனைத்துத் தரப்பினரின் பூர்வீகத்தை நினைவூட்டி, அவர்களது பண்பாடு, கலாசார ஆணிவேரை அடையாளப்படுத்துவதற்கு தற்போதைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதும் பாராட்டத்தக்கதாக உள்ளது. அந்நிய மண்ணில் இந்திய கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீட்டெடுத்துவருவதால், எனக்கு 'பத்மஸ்ரீ'; விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அண்மையில் வழங்கினார்.

புதுச்சேரியில் எனது பூர்வீகத்தைத் தேடி கண்டறிவது கடினமான முயற்சியாக உள்ளது. தமிழை சரளமாக பேசி, எழுத கற்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன். அதன்படியே எனது பூர்வீகத்தை இடைவிடாது தேடி அடைவேன். பிரான்ஸ் தீவில் உள்ள இந்திய வம்சாவளியினரும் தங்கள் பூர்வீகத்தை அறியவும், அதனை மீண்டும் அடைந்து தங்கள் உறவுகளுடன் சேரவும் ஆர்வமாகவே உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உதவியோடும் மக்கள் துணையோடும் எங்களது பூர்வீகத்தை நிச்சயம் அடைவோம். இதற்கு காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி மைய இயக்குநர் எம்.செல்வராஜ் உள்ளிட்ட பலர் உதவுகின்றனர்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com