'நெகிழிகள் அதிகபட்சம் முப்பது நிமிடங்கள் மட்டுமே அதன் வாழ்நாளில் பயன்பட்டிருக்கும். ஆனால் அவை பல தலைமுறைகளுக்கும் அழியாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். இவற்றைத் தவிர்ப்பதோடு, அப்புறப்படுத்துவதுதான் உலகுக்கு நாம் செய்யும் தொண்டு'' என்கிறார் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீன்வளப் பொறியியல் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் தே.கேசவன்.
அவருடன் ஒர் சந்திப்பு:
நெகிழிகளால் ஆபத்து என்ன?
இலைகள், காகிதங்கள் போன்றவை மண்ணில் எளிதாக மக்கும். ஆனால் நெகிழிகள் இயற்கையில் மக்குவது கிடையாது. இயல்பாகவும் விரைவாகவும் அழிக்க முடியாது.
நுண்நெகிழி எனப்படுவது 5 மி. மீ. குறைவான அளவுடைய மிகச் சிறிய அளவிலான நெகிழித் துகளாகும். அழகுசாதனப் பொருள்களால் உருவாகும் நெகிழிகள், ஆடைகள் உற்பத்தியில் உருவாகும் நுண்ணிய நூல்போன்ற இலைகள், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை இயற்கைச் சூழலில் சிதைவடைந்து பெரிய பொருள்களிலிருந்து நுண் நெகிழியாக மாறுகின்றன. இவ்வாறாக, உலகில் ஆண்டுக்கு சுமார் 12.7 மில்லியன் டன் நெகிழிகள் கடலுக்குள் செல்கின்றன என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஆராய்ச்சிகள் சொல்லும் முடிவுகள் என்ன?
பிரிட்டனில் 2017-இல் நடைபெற்ற ஓர் ஆராய்ச்சியில், ஒரு பாலிஸ்டர் சட்டையை ஒவ்வொரு முறை துவைக்கும்போதும் சராசரியாக சுமார் 5 லட்சமும், பாலியஸ்டர் காட்டன் கலந்த சட்டை எனில் 1,50 லட்சமும், அக்ரிலிக் சட்டை எனில் 7 30 லட்சமும் நுண்நெகிழிகளை வெளியிடுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
மும்பையில் உள்ள மத்திய மீன்வள கல்வி நிறுவனம் 2018-19-ஆம் ஆண்டில் ஆய்வு நடத்தி, சுமார் 80 நுண்நெகிழிகள் ஒவ்வொரு 100 கிலோ மீனிலும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
2019-ஆம் ஆண்டில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒரு கிலோ மணலுக்கு சராசரியாக மும்பையில் 3.5 மி. கி. , தூத்துக்குடியில் 2.7 மி.கி., தனுஷ்கோடியில் 1.05 மி.கி. என்ற எண்ணிக்கையில் நுண்நெகிழிகள் இருந்ததைப் பார்க்கும்போது மக்கள்தொகைக்கேற்ப அவை இருப்பது தெரிகிறது.
2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடி, மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள உப்பளங்களில் சேகரிக்கப்பட்ட உப்புகளில் நுண்நெகிழிகள் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது.
2016-ஆம் ஆண்டில் ஓர் ஆய்வகச் சோதனையில், பாலிஸ்டைரீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்பட்ட நுண்நெகிழியால் நீர்வாழ் உயிரினங்களுக்கு நச்சுத்தன்மை ஏற்படுவதோடு, வளர்ச்சி, இனப்பெருக்கக் குறைபாடு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2022, 2023-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில், பிறந்த குழந்தைகளும், கருவில் உள்ள குழந்தைகளும் கூட நுண்நெகிழிகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தொப்புள் கொடி, தாய்ப்பாலில் கூட நுண்நெகிழி இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.
நெகிழி பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?
நுண்நெகிழிகள் நீர், நிலம், காற்று என அனைத்திலும் பரவியிருப்பதால் நாம் அனைவரும் சூழப்பட்டிருக்கிறோம்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களின் தடைக்கு பிறகு பாலித்தீன் பைகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது.
'நான் நெகிழி அல்ல' அல்லது 'உயிர்ம நெகிழி' என்ற பைகள் புழக்கத்தில் வந்துள்ளது வரவேற்க வேண்டியதுதான். இவையும் எளிதில் மக்காது. அதற்கு பதிலாக இந்த உயிர்ம நெகிழிகள் குறிப்பிட்ட ஆய்வக சூழ்நிலைகளில் சுற்றுசூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் சிதைக்கப்படக் கூடியவை மட்டுமே.
நைலான் கைப்பைகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் பளபளப்பான பைகள், வெள்ளை நிறமுள்ள பாலிஸ்டைரீன் பைகள் போன்றவையும் எளிதில் மக்கும் தன்மையுடையவை அல்ல.
ரேடியம் பயன்படுத்திய பல லட்சம் மக்களும், அதை கண்டுபிடித்த மேரி கியூரியும் புற்றுநோயால் இறக்கும்போது, ரேடியத்தின் கதிர்வீச்சானது தீங்கு தரும் என்று தெரியவந்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றபோது, சேர்க்கப்பட்ட குப்பைகளில் பெரும்பகுதி சிறிய அளவிலான பிளாஸ்டிக் தேக்கரண்டிகள், காகிதக் கோப்பைகள் கண்டறியப்பட்டன. மூன்று அடி ஆழத்துக்குக் கீழும் இந்த மக்காத பொருள்களைக் காண முடிந்தது. இந்த நெகிழிகள் அதிகபட்சம் வெறும் 5 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே அதன் வாழ்நாளில் பயன்பட்டிருக்கும். ஆனால் அவை பல தலைமுறைகளுக்கும் அழியாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கும்.
புவியில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. அதிலும் பெரும் பங்கு கடலாக உள்ளது. மழை, காற்று, உப்பு, மீன்களில் கூட நுண்நெகிழி இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது அச்சத்துக்குரியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.