புதுமுக இயக்குநர் மாறன் இயக்கிய 'பச்சை விளக்கு' படத்துக்கு தமிழக அரசு சிறப்புக் காட்சிகளில் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சாலை பாதுகாப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதாலும், பள்ளி, கல்லூரி, மாணவ - மாணவியர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பிற சாலை பயணிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும் வேறு எந்தத் திரைப்படத்திற்கும் கிடைக்காத கெளரவமாக இந்தப் இத்திரைப்படத்திற்கு காலை 9 மணிமுதல் 11.30 மணி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்த் திரையுலக வரலாற்றில் இது போன்ற ஒன்றரை மாதம் சிறப்புக் காட்சியில் திரையிட ஒரு படத்திற்கு அனுமதி அளித்தது பெரிய கெளரவமாக திரையுலகினரால் பார்க்கப்படுகிறது.
படத்தின் இயக்குநரோடு ஓர் சந்திப்பு...
''ஒரு விபத்து, எத்தனை பேருடைய ஆசைகளை, கனவுகளை கலைத்துப் போடுகிறது என்பதுதான் ஒன்லைன். இது, சமூக விழிப்புணர்வு மிக்க திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய செய்தியான 'அதிவேகம்
ஆபத்து' என்ற செய்திதான் இந்தப் படமே. ஒரு விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும்தான். ஓர் உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது. ஒருசில நிமிட அவசரத்தால் ஏற்படும் விபத்து சிலரின் உயிரை குடித்து பலரை வாழ்நாள் முழுதும் பாதிக்கிறது என்பதை இயல்பான கதைகளுடன் சொல்ல வருகிறேன்.'' அக்கறையாக பேசுகிறார் டாக்டர் மாறன். வி.ஐ.டி.யில் எம்.டெக், எஸ்.ஆர்.எம். பல்கலையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து கடந்த ஆண்டு டாக்டரேட் உள்ளிட்ட பட்டயங்களை பெற்றவர்.
ஒவ்வொரு நிமிடமும் சாலை விபத்தை தடுப்பது எப்படி? என்ற சிந்தனையை மையப்படுத்தியே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார் மாறன். துபையில் உள்ள அமெரிக்கன் பல்கலையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து குறித்து ஆய்வறிக்கையை தாக்கல் செய்தவர், அது குறித்த விழிப்புணர்வாக இந்தப் படத்தை எடுத்துள்ளார்.
இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சத்து 30 ஆ யி ரம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். 4 லட்சம் பேர் படுகாயம் அடைகின்றனர், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக் கொண்டே போகிறது. இந்தியாவில் 2009-இல் 4,21,600 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் பலியானவர்கள் 1,26,896 பேர். காயம் அடைந்தவர்கள் 4,66,600- பேர். அதுவே 2013-இல் விபத்துகளின் எண்ணிக்கை 4,43,000 ஆக அதிகரித்து இறந்தவர்கள் எண்ணிக்கையும் 1,37,423 ஆக கூடிப் போயுள்ளது.
காயமுற்றோர் எண்ணிக்கை 4,69,900 ஆக அதுவும் அதிகரித்திருக்கிறது.2014-இல் தமிழகத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 67,250 வாகன விபத்துக்களாக நடந்திருக்கின்றன. அதில் 14,165 பேர் இறந்திருக்கிறார்கள். 77,725 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். 34 சதவீத விபத்துகள் டூ-வீலர் ஓட்டுன ர்களால் நிகழ்ந்திருக்கிறது. கார், ஜீப், டாக்சி, டெம்போ போன்ற வாகன விபத்துக்கள் 28 சதவீதமும், லாரிகளால் 14 சதவீதம்.
பஸ்களால் 11 சதவீத விபத்துகளும் நடந்திருக்கின்றன. விபத்து நடப்பதற்கு வாகன ஓட்டிகளே முக்கிய காரணமாக (96 சதவீதம்) இருக்கிறார்கள். சிக்னலை மதிக்காமல் செல்வது, குறுக்கே சென்று தவறுதலாகச் சென்று விட்டு திரும்புவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது போன்றவை விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கின்றன' என்று மேலும் அதிர வைக்கிறார் மாறன்.
வெளிநாடுகளைப் போல் இங்கே இன்னும் சாலை விதிகளை யாரும் பின்பற்றுவதில்லை என்ற குறை பெரிதாக இருக்கிறது... என்னதான் இதற்கு தீர்வு, உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்...
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்தால்தான் விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும். பள்ளிப் பருவத்தில் இருந்தே சாலைப் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வைப் பாடமாகப் பயிற்றுவித்து வந்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிடலாம்.
முழுக்கவே இதுதான் களமா....
காதலும் அதி முக்கியமாக இருக்கிறது. விதி மீறிய பயணமும், வரம்பு மீறிய காதலும் வாழ்க்கையில் வந்து சேராது என்பதுதான் கரு. எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. கடந்த 15 ஆண்டுகளில், காதலால் மாண்டவர்களின் எண்ணிக்கை 38,585.
இதே காலகட்டத்தில் தீவிரவாதச் செயல்களால் இறந்தவர்கள் 20,000. இதே வருடங்களில்தான் காதலுக்காக, காதலின் பெயரால் கடத்தப்பட்டவர்கள் 2.6 லட்சம் பேர். காதல் தற்கொலைகளில், மூழ்கித் தவிக்கும் முதன்மையான ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இந்த 15 ஆண்டு காலகட்டத்தில் மட்டும் 9,405 தற்கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி இருக்கின்றன என்கிறது அந்தப் புள்ளிவிபரம். இந்த ரத்தக்கறையை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் பிறமாநிலங்கள் ஆந்திரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிஸா, அஸாம். காதலும்தான் அவசியம் என இந்த மானிடர்கள் புரிந்துக் கொள்ளவேயில்லை. அதை இந்தக் கதையில் கடந்து போகிற சிலருக்கான அனுபவங்களும், துயரங்களும்தான் கதை. இதை இரண்டையும் இணைத்து ஒரே பு ள்ளியில் கொண்டு வந்திருக்கிறேன்.
நானே முக்கிய இடத்தில் நடிக்கிறேன். ஏற்கெனவே இயக்கிய குறும்பட அனுபவம் இதில் எனக்கு கைக் கொடுத்தது. அம்மணி, சூறையாடல் படங்களில் நடித்த ஸ்ரீமகேஷ், தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி என எல்லோரும் பரிச்சயமானவர்கள். உலகத்தில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் சாலையை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி சாலையை பயன்படுத்தும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பத கதை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.