கல்வி: ஒவ்வொருவரின் ஏணிப்படி

மருத்துவ துறையில் தங்கப் பதக்கம் வென்ற இமயா டேன்சிங்
கல்வி: ஒவ்வொருவரின் ஏணிப்படி
Published on
Updated on
2 min read

ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்கிற பல துறைகளில் பெண்கள் நினைக்க முடியாத சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அதற்கு மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல.

வலி இல்லாத அறுவைச் சிகிச்சைக்கு அடித்தளமாக இருக்கும் மயக்க மருந்தியல் துறையில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார் மருத்துவர் இமயா டேன்சிங்.

அவரிடம் பேசியபோது:

'தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி எனது சொந்த ஊர். இளம் வயதிலேயே கல்வி மீதான எனது ஆர்வத்தைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்தியவர்கள் எனது பெற்றோர் டேன்சிங்- திரிவேணி. "படி, படி' என்று என்னை தொல்லைப்படுத்த மாட்டார்கள். ஆனால், படிப்புதான் பெண்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதை சொல்லி சொல்லி வந்தனர்.

படிப்பதில் ஆர்வம் என்றாலும், உயிரியல் பாடத்தில் தணியாத காதல் இருந்ததை உணர்ந்தேன். அதனால் உயிரியல் பாடத்தில் எதையாவது சாதிக்க நினைத்து, மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்தேன். சாதிக்கும் வரை உழைக்கத் தவறமாட்டேன். அதில் கொஞ்சம் பிடிவாதமாகவே இருப்பேன்.

"பெண்களால் சாதிக்க முடியாது' என்று கருதிய துறையில் மருத்துவமும் ஒன்று. மருத்துவத் துறை தோன்றி பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், முதல் பெண் மருத்துவரான எலிசபெத் பிளாக்வெல் 1849-இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். கடினமானது எதுவோ, அதை செய்ய வேண்டும் என்ற வேட்கை எலிசபெத் பிளாக்வெல்லுக்கு இருந்ததால், மருத்துவத் துறையைத் தேர்வு செய்தார்.

அதேபோல, மகாராஷ்டிரத்தில் உள்ள கல்யாண் நகரில் பிறந்த ஆனந்திகோபால் ஜோஷியே இந்தியாவின் முதல் மருத்துவரானார். பதினான்கு வயதில் திருமணமானவர் ஆனந்தி.

அவரது கணவர் கோபால்ஜோஷியின் அவரின் ஊக்கத்தால், அமெரிக்காவின் பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியில் தனது 19-ஆவது வயதில் மருத்துவப் பட்டம் பெற்று சாதனையைப் படைத்தவர் ஆனந்தி.

பெண்களுக்கு எளிதில் வாய்க்காத கல்வியை பயன்படுத்தி இருவரும் மருத்துவத் துறையில் சாதனை படைத்துள்ளனர். அதையே எனது பயணத்தின் அடிநாதமாகக் கொண்டேன்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன். அதன்பிறகு, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் படித்தேன். மருந்தியல், பொது அறுவைச் சிகிச்சை, கதிரியக்கவியல், மயக்க மருந்தியல் பாடங்களில் நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றேன். அதன்பிறகு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பில் இரு தங்கப் பதக்கங்களை வென்றேன்.

நவீன அறுவைச் சிகிச்சை முறையில் மயக்க மருந்தியலின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, தேசிய அளவில் சிறந்த துறைசார் மருத்துவர்களைத் தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் மருத்துவக் கல்விக்கான தேசிய தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் மயக்க மருந்தியல் பாடத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் தங்கப்பதக்கம் பெற்றேன். இது எனது கல்வியின் உச்சப்பட்ச வெற்றியாகவே கருதுகிறேன்.

மருத்துவப் படிப்பில் இதுவரை ஏழு பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். அடுத்தடுத்து மேலும் பல சாதனைகளை நிகழ்த்த ஆசைப்படுகிறேன். சாதனைகளைப் படைப்பது மனதுக்கு நிறைவையும், பெருமிதத்தையும் ஏற்படுத்துகிறது.

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தியாவில் வளர்ந்து வரும் நிலையில் இருக்கும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான தேவை அதிகரித்துள்ளது. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவைச் சிகிச்சைக்காக மக்கள் காத்திருக்கும் நிலையில், அவற்றைப் பாதுகாத்து, மற்றொருவருக்கு பொருத்தும் மாற்று அறுவைச் சிகிச்சை வேகமாக வளர்ந்து வருகிறது.

ஒவ்வொரு நிலையிலும் கல்வியில் சிறந்து விளங்கியதால், அரசின் உதவியுடன் என்னால் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் படிக்க முடிந்தது.

ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது. தற்போது கிடைத்திருக்கும் கல்வி, எனது வளர்ச்சிக்கு ஏணிப்படியாக மாறியுள்ளது. பெண்கள் தவிர்க்கக் கூடாதது கல்வியைதான். கல்வியே பெண்களுக்கு பலத்தை தரும். அது எல்லா துறைகளிலும் பெண்களை சாதிக்க உறுதுணையாக இருக்கும். நிமிடத்துக்கு நிமிடம் மாறி வரும் துறை மருத்துவம். எனவே, மருத்துவத் துறையில் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட ஆர்வமாக இருக்கிறேன்'' என்றார்.

இமயாவின் தந்தை டேன்சிங்

'எனது மகள் இமயாவை அதிசய குழந்தை என்றே சொல்ல வேண்டும். இயல்பாகவே கல்வி மீது இமயாவுக்கு அளவிலா ஈடுபாடு இருந்ததை கண்டறிந்து, ஊக்கப்படுத்தினோம். தனது சொந்த உழைப்பு, முயற்சியால் தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். பெற்றோரான எங்களுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். எதையும் சாதிக்கும் பிடிவாதம் இமயாவுக்கு உண்டு. அந்த வகையில், மருத்துவத் துறையில் சாதித்து வருகிறார். மருத்துவக் கல்வியை படித்தது அரசுக் கல்லூரியில் என்பதால், எங்களுக்கு எந்தச் செலவும் இல்லை. கல்வி, ஒவ்வொருவரின் ஏணிப்படி என்பதை எனது மகளின் கல்வி முயற்சி உணர்த்தியுள்ளது'' என்கிறார் டேன்சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com