தமிழ் நாடக மேடை உலகத்துக்கு சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே தனி பாரம்பரியம் உண்டு. திரைத்துறைக்கு மட்டுமே ஜனரஞ்சகப் பொழுதுபோக்கு என்று இருந்த நேரத்தில், பல ஜாம்பவான்களை உருவாக்கியது.
அண்மைக்கால தொழில்நுட்பப் புரட்சியில் பெரிதும் பாதிப்புக்குள்ளானது தமிழ் நாடகங்கள்தான். இன்று தமிழ் நாடக உலகம் எப்படி இருக்கிறது? என்று மேடை உலகத்தினர் சிலரிடம் பேசியபோது:
சேகர், செயலாளர், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்:
பல ஆண்டுகளாக, தமிழ் நாடக உலகம் என்பது சபாக்களை நம்பியே இருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. சென்னையிலும், மற்ற ஊர்களிலும் சபாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. சபா உறுப்பினர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக, ஒரே நாடகத்தை ஒரே அரங்கத்தில் அடுத்தடுத்து இரண்டு நாள்கள் நடத்திய காலம் போய், சில சபாக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நாடகம் போடுவது என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
குறிப்பாக, கரோனா காலத்தில் மேடை நாடகங்கள் ஸ்தம்பித்துப் போனது. இருந்தபோதிலும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸில் கடந்த முப்பது ஆண்டுகளாக நாங்கள் "கோடை நாடக விழா' என்று சுமார் இரண்டு வாரங்களுக்கு நடத்துகிறோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விழாவில் ஒவ்வொரு குழுவும் போட்டி மனப்பான்மையோடு தங்கள் புதிய நாடகங்களை அரங்கேற்றம் செய்கின்றனர். நடுவர் குழுவின் மூலமாக சிறந்த நாடகம், நடிகர், நடிகை, இயக்குநர், நாடக ஆசிரியர் என்று பல்வேறு கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கிக் கெளரவிக்கிறோம். இது நாடகக் கலையின் வளர்ச்சிக்கு எங்களாலான சிறிய முயற்சி.
பாலசுந்தரம், தமிழரசன் தியேட்டர்ஸ்:
ஆர்.எஸ். மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸில், நான் பல ஆண்டுகள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். அவருடைய மறைவுக்குப் பிறகு, அவருடைய பாணியிலேயே திருவள்ளுவர், ஸ்ரீ நரசிம்மர், ராகு-கேது, சேக்கிழார், பட்டினத்தார்.. எனப் பல நாடகங்களைத் தொடர்கிறேன்.
இன்று சமூக நாடகங்களைப் போடும் குழுக்களே லாபம் பார்க்க முடியாத சூழ்நிலையில், பெரும் பொருள் செலவு செய்து, சரித்திர நாடகங்கள் போடுவது என்பது மிகப் பெரிய சவால்தான். இது பல குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்னை என்பதால், சமாளிக்கிறேன்.
ஒரு சரித்திர நாடகத்தை மேடை ஏற்ற வேண்டுமென்றால், சுமார் 80 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது. குழுவில் நடிக்கும் நடிகர், நடிகையரின் எண்ணிக்கையும் சமூக நாடகங்களைவிட மிக அதிகம். ஆனாலும், வெளியூர்களில், வெளிமாநிலங்களில் நாடகங்கள் போடும்போது, அவர்கள் எங்கள் சிரமத்தைப் புரிந்துகொண்டு சற்று கூடுதலாக சன்மானம் கொடுப்பதால் சமாளிக்க முடிகிறது.
திருவிழாக்களில் நாடகங்களைப் போடும்போது கூட திரளான மக்கள் வந்து பார்த்து ரசிக்கின்றனர். நரசிம்மர் நாடகத்தைப் பார்க்கிற பலர் சுவாமி ஆடுகின்றனர். நாடகம் நடத்துவதில் கிடைக்கும் ஆத்ம திருப்திதான் எங்களை சுறுசுறுப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறது.
எம்.பி.மூர்த்தி, நாடக இயக்குநர்:
சபாக்களின் எண்ணிக்கை குறைந்தாலும், நாடகக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புதிய திறமைசாலிகளும் வந்துகொண்டே இருக்கிறார்கள். புதிய கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து, நன்றாக எழுதுகிறார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் கோடை நாடக விழாவில் மேடை ஏற்றப்படுகிற நாடகங்களே இதற்கு சாட்சி. வழக்கமாக நாடகங்களுக்கு அரங்கத்தில் பாதி இருக்கைகளே நிரம்பும் பொதுவான சூழ்நிலையில் இந்த விழாவின்போது அரங்கு நிறைவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆனால் சபாக்களில் ஆண்டுக்கு பத்து, பன்னிரெண்டு நாடகங்கள்தான் போடுகிறார்கள். எனவே, பல நாடகங்களுக்கு சபா வாய்ப்பு கிடைப்பது குறைந்துவிட்டது. சபாக்களையே நம்பி இருக்க முடியாத சூழ்நிலையில், ஆங்கில நாடகங்கள், மெல்லிசை நிகழ்ச்சிகள் போல டிக்கெட் வாங்கிக் கொண்டு நாடகங்கள் பார்க்கும் கலாசாரமும் இங்கே இல்லை. நாடகங்கள் என்றால் "அனுமதி இலவசம்' என்கிற கலாசாரம் வந்துவிட்டது. வீட்டுக்குள்ளே இருந்தபடியே கண்டு, களிக்க எண்ணற்ற தொலைக்காட்சி சேனல்கள், ஓ.டி.டி. தளங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் நாடகங்கள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன.
பணிச்சுமையால் மன அழுத்தமுடைய இளைய தலைமுறையினர் மாறுதலுக்காக வார இறுதி நாள்களில் நாடகம் பார்க்க வரும்போது ஜாலியாக சிரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, தில்லி போன்ற நகரங்களில் நாடகங்களைப் பார்க்கவும் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். டிக்கெட் விற்பனை மூலம் கணிசமான தொகை வசூலாகிறது. அதுபோல இங்கேயும் நாடகங்களை மக்கள் வரவேற்றால் தமிழ் நாடகங்கள் வளர்ச்சி பெறும்.
தாரிணி கோமல், கோமல் தியேட்டர்ஸ் :
என் அப்பா கோமல் சுவாமிநாதன் எழுதியுள்ள டைரியில் அன்று சென்னையில் இயங்கி வந்த 150-க்கும் அதிகமான சபாக்களின் பட்டியலை எழுதி வைத்திருக்கிறார். இன்று பத்து, பன்னிரெண்டு சபாக்கள் கூட இல்லை. அதை மீறி, நடத்தப்படுகிற நாடகங்களுக்கும் அனுமதி இலவசம் என்று போடுகிறார்கள். ஆனாலும் அதிக அளவில் கூட்டமும் வருவதில்லை.
நான் என் தந்தைக்குப் பின்னர், 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நாடக உலகில் நுழைந்தபோது ரசிகர்களின் ரசனை மாறி இருப்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நாடகங்களை உருவாக்கினேன். அரங்கத்தை வாடகைக்கு எடுத்து, டிக்கெட் விற்பனை செய்து, எனது நாடகங்களை நடத்துகிறேன்.
ரசிகர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு பார்க்க வருகிறார்கள். விஷயம் சிறப்பாக இருந்தால், வாய்மொழி விளம்பரம் மூலமாகவே ரசிகர்கள் நாடகம் பார்க்க திரண்டு வருவார்கள். எங்கள் குழுவின் பிரம்மாண்டமான தயாரிப்பான "திரெளபதி' நாடகம் இந்தியாவில் மட்டுமின்றி, துபை போன்ற வெளிநாடுகளில் கூட வெற்றிகரமாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.