தமிழன் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டையே தன் தாய்நாடாகக் கருதி, வளமிக்க நாடாக மாற்றுவதில் முன்னோடியாக விளங்கினான் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.
இலங்கையில் முதன்முதலாக சிங்கள மொழித் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டியவர், தமிழ், சிங்கள மொழிகளில் திரைப்படங்களை உருவாக்கிய முதல் இலங்கைத் தமிழர், பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கியவர் என்ற பெருமைகளுக்குரியவர் தஞ்சாவூர் மண்ணைச் சேர்ந்த எஸ்.மதுரநாயகம் எனும் எஸ்.எம்.நாயகம். இதனால் 'இலங்கைத் திரையுலகின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.
இவரது பெற்றோர் சுந்தரம் பிள்ளை- வீரம்மா, கொழும்பு - கொட்டாஞ்சேனையில் குடியேறினர். பிரசவக் காலத்தில் வீரம்மா இந்தியா வந்தடைந்தார். 1906 செப்டம்பர் 26-இல் தஞ்சாவூரில் எஸ்.எம்.நாயகம் பிறந்தார்.
பின்னர், இவர் வளர்ந்தது, வாழ்ந்தது அனைத்தும் இலங்கையில்தான். கல்வி கற்றது கொட்டஞ்சேனை புனித பெனட்டிக் கல்லூரி. இளம் பருவத்தில் மகாத்மா காந்தியின் சுதேசிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், இலங்கையில் பல்வேறு தொழில்களைத் தொடங்கி முன்னோடியாகத் திகழ்ந்தார்.
முதன்முதலாக இலங்கையில் தீப்பெட்டி தொழிலை தொடங்கி, 'ஸ்வஸ்திகா தீக்குச்சிகள்' என்று பெயரிட்டார். இவரது உற்பத்தி தொழிற்சாலைக்கு 'சுதேசி இன்டஸ்டிரியல் ஒர்க்ஸ் லிமிடெட்' எனப் பெயரிட்டார். கொழும்பில் கந்தானை என்ற இடத்தில், இது பிரம்மாண்டமாக உருவானது.
'ராணி சந்தன சோப்பு' தயாரித்து விற்பனை செய்தார். இதற்கான மூலப் பொருளான சந்தனப் பௌடரை மைசூரிலிருந்து வரவழைத்தார். இதனைத் தொடர்ந்து, வேப்பிலையில் இருந்து 'கோம்பா ' சோப்பினையும் தயாரித்தார்.இந்த இரண்டு வகை சோப்புகளும் இன்றும் கூட இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கண்ணாடி பொருள்கள், பிளாஸ்டிக் பொருள், அலுமினியப் பாத்திரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள்.. என பல்வேறு பொருள்களைத் தயாரித்து, தொழிற்சாலைகளையும் அமைத்தார். வெளிநாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்த பெருமையும் நாயகத்துக்கு உரியதாகும்.
திரையுலகச் சாதனை...
பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் இவருக்கு, சிங்கள மொழியில் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள மதுரையில்,திருநகர் எனும் இடத்தில் 'சித்ரகலா மூவிடோன்' என்ற பெயரில் மிகப் பெரிய ஸ்டூடியோவை நிறுவினார்.
'கடவுன பொறந்துவ' (முறிந்த வாக்குறுதி) என்ற சிங்களப் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்தில் பிரபல தமிழ் நடிகை ருக்மணி தேவி, எடி ஜெயமான எனும் சிங்கள நடிகர் ஆகிய இருவரின் கதாபாத்திரங்கள் முக்கியமானவையாகும்.
1947 ஜனவரி 21-இல் கொழும்பு கிங்ஸ்லி பட மாளிகை, இலங்கை திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்தப் படத்தை இலங்கையின் அன்றைய பிரதமர் டி.எஸ் . சேனநாயக்கா உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கண்டு ரசித்தனர்.
இதே காலகட்டத்தில் 'குமரகுரு', 'தாய்நாடு' என்ற இரண்டு தமிழ்ப் படங்களையும் எஸ். எம்.நாயகம் தயாரித்து தமிழ்நாட்டில் வெளியிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டில் 'தாய்நாடு ' என்ற திரைப்படம் வெளியானது.
இதன்பின்னர், கொழும்புவில் 'நீர்கொழும்பு சாலை - கந்தானை என்னும் இடத்திலே 'ஸ்ரீ முருகன் நவகலா பிலிம்ஸ் லிமிடெட்' என்ற பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை (ஸ்டூடியோ) தொடங்கி, கலைச் சேவைக்கு வித்திட்டார்.
பண்டா கம்ஸ் டு டவுன் (1952), பிரேம தரங்கைய (1953), புதும லேலி (1953), அஹங்கார ஸ்திரி, நலங்கன போன்ற பல திரைப்படங்கள் இலங்கை ரசிகர்களிடையே அழுத்தமான முத்திரை பதித்தன.
மிகவும் பிரம்மாண்டமான பொருள்செலவில் தயாரான , ' மாத்தலான்' என்ற சிங்களத் திரைப்படம் இன்றும் இவருடைய பெருமையைப் பறைசாற்றுகிறது.
இந்தப் படம் தமிழ்நாட்டில் ஏவி.எம். நிறுவனத் தயாரிப்பான 'மங்கம்மா சபதம் ' என்ற தமிழ்த் திரைப்படத்தின் சிங்களப் படைப்பாகும்.
எஸ்.எம்.நாயகத்தின் திரைப்படங்கள் அனைத்தும் 'ஸ்ரீ முருகன் நவகலா ஸ்தாபனத்திலேயே ' படமாக்கப்பட்டன. மாத்தலன் திரைப்படத்தின்அதிகப்படியான காட்சிகள் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்டன. ஸ்ரீமுருகன் நவகலா ஸ்டூடியோவில் புரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பெரும்பால ôனோர் தமிழ்நாட்டிலிருந்து கொழும்பில் தங்கி இருந்து பணியாற்றியவர்கள்.
இவரின் திரைப்படம் ஒன்றுக்காக, அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நடிகைகளான லலிதா, பத்மினி, ராகிணி ஆகிய மூவரும் இலங்கைக்குச் சென்று நடனமாடினர்.
எஸ்.எம்.நாயகத்தை தொடர்ந்து, தமிழர்களான ஸ்ரீமான் சித்தம்பலம் கார்டுனர், குணரத்தினம்,ரொபின் தம்போ,ஜாபிரே காதர் போன்ற பல திரைப்படத் தயாரிப்பாளர்கள் உருவாகினர். வரலாறாக வாழ்ந்த எஸ்.எம். நாயகம் 1972 பிப்ரவரி மூன்றாம் நாளன்று மறைவுற்றார்.
குடும்பம்
எஸ்.எம்.நாயகம் - தெய்வானை தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், நான்கு மகள்கள். இவரது குடும்பத்தினர் 1977, 1983 -ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இனக் கலவரத்தால் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு, தங்கள் சொத்துகளை அப்படியே விட்டு விட்டு இடம் பெயர்ந்தனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் எஸ்.எம்.நாயகத்தின் இளைய சகோதரி ஜெகதாம்பாள் சோமசுந்தரம் பிள்ளையின் மகள் சாந்தா ஜெயராஜ் கூறியது:
'நாயகத்தின் மகன் குமாரின் மனைவி இன்றும் கொடைக்கானலிலும், பேரன் சென்னையிலும் வசித்து வருகின்றனர். எஸ்.எம்.நாயகத்தின் கலைத்துறை தொடர்பை மூன்றாவது தலைமுறையில் புதுப்பித்துள்ளோம்.
எனது கணவர் ஜெயராஜ் இலங்கையில் 'காத்திருப்பேன் உனக்காக ' என்ற தமிழ் படத்தை 1977-இல் உருவாக்கினார். எனது மகள் செல்வி, ஆஸ்திரேயாவில் 'சாஸ்த்ரம்' எனும் ஒரு கலை நிறுவனத்தை உருவாக்கி, திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடுகிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் எஸ்.எம்.நாயகத்தின் கொள்ளுப் பேரன் சிவா பிரபு, சென்னையில் திரைத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
நாயகத்தின் சொத்துகளை மீட்டு, அவரது வாரிசுகள் ஒப்படைப்பது, இலங்கை அரசு, அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.
எஸ்.எம். நாயகம் தொடங்கிய 'சித்ரகலா ஸ்டூடியோ 1939-இல் மதுரை திருநகரில் சுமார் ஐந்து ஏக்கரில் நிறுவப்பட்டதாகும். இன்று இந்த ஸ்டுடியோ இருந்த இடம் முழுக்க வீடுகளால் நிறைந்துள்ளன. இங்கு ஸ்டுடியோ இருந்ததை நினைவுபடுத்தும் வகையில், வீடுகளுக்கு நடுவில் பழைமையான சித்ரகலா ஸ்டூடியோ கட்டிடம் மட்டும் இன்றும் சாட்சியாக உள்ளது. இந்த இடத்தை வாரிசுகளுக்கு ஒப்படைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் சாந்தா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.