
- முத்துரத்தினம்
சுதந்திர மலேசியாவை உருவாக்கிய மூவரில் ஒருவர் என்ற பெருமையை பெறுகிறார் தமிழர் வி.டி.சம்பந்தன். தொழிலாளர்களின் நலனுக்காக, தனது 35 ஆயிரம் ஏக்கர் தோட்டங்களை தொழிலாளர்களுக்கே அளித்தவர்.
இவரது தந்தை எம்.எஸ். வீராசாமி, 1896- இல் மலேசியாவில் குடியேறி, ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்து, தோட்டங்களை வாங்கினார்.
1919- இல் சுங்கைசிபுட் என்ற இடத்தில் சம்பந்தன் பிறந்தார். பள்ளிப்படிப்பை மலேசியாவில் முடித்து, தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (பொருளாதாரம்) முடித்தார்.
படிக்கும் காலத்தில், மகாத்மா காந்தியின் அகிம்சை வழி, சத்தியாகிரக அரசியல் மீது சம்பந்தத்துக்கு ஈடுபாடு அதிகரித்தது. மலேசியா திரும்பிய நேரத்தில், தந்தை வீராசாமி இறந்தவுடன், ரப்பர் தோட்ட நிர்வாகத்தை சம்பந்தன் ஏற்று நடத்தினார்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் நேரம் காலம் பார்க்காமல் உழைத்ததும், படிப்பறிவு இல்லாததையும் கண்டு, அவர்களின் நலனில் அக்கறை கொண்டார் சம்பந்தன். தனது ஊரிலேயே, மகாத்மா காந்தி தமிழ்ப் பள்ளியைத் தொடங்கி, கல்வியறிவை புகட்டினார்.
பின்னர், மலேசியா எம்.ஐ.சி. கட்சித் தலைவராக பதவியேற்றார். 1956-இல் கூட்டணி அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சரானார். இதன்வாயிலாக, தொழிலாளர்களுக்கும், தன்னால் முடிந்த நலத் திட்ட உதவிகளைக் கொண்டு வந்தார். தொடர்ந்து, சுகாதாரம், தொழில், தபால், தொலைத்தொடர்பு அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இவரது பரந்த மனிதாபிமானத்தை நன்கு உணர்ந்து, ஃபிஜி நாட்டுக்குச் சமாதானத் தூதுவராக பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அனுப்பிவைத்தார்.
பல ஆண்டுகளாக, மலேசியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இருந்து வந்த பகையை 1966-இல் சம்பந்தன் தனது சாதுர்யமான திறமையினாலும், பேச்சுவார்த்தையினாலும்
ஜகார்த்தாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
தன் சொந்த முயற்சியின் மூலம், செளத் இந்தியன் தொழிலாளர் நிதி, கல்வி நிதித் திட்டங்களுக்கு தனது 35 ஆயிரம் ஏக்கர் தோட்டங்களை, பொது அறக்கட்டளை மூலம் தொழிலாளர்களுக்கே அர்ப்பணித்தார். இதனால், 85 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெற்றனர். தற்போது 'மலேஷியன் பிளாண்டேஷன் கோ- ஆஃபரேடிவ்' பொறுப்பேற்று நடத்துகிறது.
1979- இல் மறைந்த சம்பந்தன் தனது இறுதிக்காலம் வரை தொழிலாளர் நலனுக்கே தன்னை அர்ப்பணித்தார்.
இவரது மனைவி உமாசுந்தரி, 'நேஷனல் லேன்ட் ஃபைனான்ஸ் கோ- ஆஃபரேடிவ் சொசைட்டி'யின் தலைவராகப் பணியாற்றியவர். ஒரே மகள் தேவ குஞ்சரி, வழக்குரைஞராகப் பணிபுரிகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.