ராஜகோபால பீரங்கி...

வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பெரிய கோயில், ஐநூறு ஆண்டுகால அரண்மனை, சரசுவதி மகால் நூலகம் போன்ற பெருமைக்குரிய நினைவு சின்னங்கள் ஏராளம்.
ராஜகோபால பீரங்கி...
ராஜகோபால பீரங்கி...
Published on
Updated on
2 min read

வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகள் கடந்த பெரிய கோயில், ஐநூறு ஆண்டுகால அரண்மனை, சரசுவதி மகால் நூலகம் போன்ற பெருமைக்குரிய நினைவு சின்னங்கள் ஏராளம். இந்த வரிசையில் நாயக்கர் காலத்தைச் சார்ந்த ராஜகோபால பீரங்கியும் ஒன்று.

தஞ்சாவூர் அரண்மனையைச் சுற்றி மன்னர் காலத்தில் பெரியக் கோட்டை இருந்தது. நான்கு புறமும் மதில் சுவரால் எழுப்பப்பட்டிருந்த இந்தப் பெரியக் கோட்டையின் கிழக்குப் பகுதியில் (இப்போதைய கீழ அலங்கம்) கிழக்கு வாசலையொட்டி, ஏறத்தாழ 25 அடி உயரத்தில் மேடை உள்ளது. அதில் பெரிய பீரங்கியும் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் மூன்று அடி உயரமுள்ள மூன்று தூண்களில் தாங்கி நிற்கும் இந்தப் பீரங்கியின் நீளம் 26 அடி. ஏறத்தாழ 22 டன்கள் (22 ஆயிரம் கிலோ) எடையுடையது. 400 ஆண்டுகளைக் கடந்துள்ள இந்தப் பீரங்கி மழையையும், வெயிலையும் தாங்கிக் கொண்டு இப்போதும் துரு பிடிக்காமல் உறுதியாக இருக்கிறது. கி.பி. 1600 - 1645 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கர் காலத்தில் கிழக்கு கோட்டை வாசலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், கல்வெட்டு அறிஞருமான முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியது:

'பீரங்கிகள் வார்ப்பு இரும்பால் வார்க்கப்படும். ஆனால், இந்தப் பீரங்கி தேனிரும்புப் பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பீரங்கி 26 அடி நீளமும், 300 மி.மீ. உருட்டு உருளையும், 150 மி.மீ. உட்சுவர் கனமும் கொண்டது. இதன் உடலமைப்பு இரு பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளது. நீண்ட இரும்புப் பட்டைகளால் பக்கவாட்டில் இணைத்து உட்குழாய் வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மீது தொடராக வளையங்களைப்

பக்கவாட்டில் இணைத்து மேல் குழாய் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் ஒன்றையொன்று பாதுகாக்கும் வகையில் மிக இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.

உள்குழாயின் பட்டைகள் பீரங்கி வாயின் வெளிப்புறமாக மடக்கி விடப்பட்டுள்ளது. மறுபுறம் பீரங்கியின் தலை உள்ளது. மேல் குழாயின் மேல் 5 இடங்களில் இறுக்க இணைப்பு வளையங்கள் பிதுக்க அமைப்புடன் உள்ளன. அவற்றில் இரு இடங்களில் பீரங்கியை மேலே உயர்த்துவதற்காக வளையங்கள் துளையிட்டு மாட்டப்பட்டுள்ளன.

இதன் வடிவமைப்பு அக்கால தொழில்நுட்பத்தின் சிறந்த சாதனையாகப் போற்றப்படுகிறது. கேஸ் வெல்டிங், ஆர்க் வெல்டிங் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்தப் பீரங்கியில் இணைக்கப்பட்டுள்ள செய்திறன் வியப்பூட்டுகிறது. மிக அழுத்தமான வெடிமருந்து வெடித்து, குண்டுகளுடன் பீறிட்டு எழும் நெருப்பையும், அழுத்தத்தையும் தாங்கும்படியாக இரும்புப் பட்டைகளைக் இணைத்துள்ள திறன் வியப்புக்குரியது.

அக்காலத்தில் தஞ்சாவூர் மானோஜிப்பட்டி பகுதியிலுள்ள கொல்லுமேட்டில் இரும்புத் தொழில் மிகவும் சிறந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. எனவே இப்பீரங்கி தஞ்சாவூரிலேயே உருவாக்கப்பட்டிருக்கலாம். இந்தியாவில் உள்ள பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்று.

தஞ்சாவூர் நாயக்கர்களுக்கும், ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டேனிஷ் வணிகர்களுக்கும் நல்ல நட்புறவு இருந்தது. தரங்கம்பாடியில் இருந்த டேனிஷ் வர்த்தக மையம் தஞ்சாவூர் நாயக்கர்களின் அரவணைப்பால் உருவானது. எனவே, இந்தப் பீரங்கி டேனிஷ் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது, டேனிஷ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இங்குள்ள கொல்லர்களைக் கொண்டு தஞ்சாவூரிலேயே தயாரிக்கப்பட்டது'' என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com