சாம்பியனாவேன்...!

கார் ரேஸிங்கில் வெகு சில பெண்களே பங்கேற்றுள்ளனர்.
கார் ரேஸிங்
கார் ரேஸிங்
Published on
Updated on
2 min read

கார் ரேஸிங்கில் வெகு சில பெண்களே பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்றுள்ள ஒரே டீன் ஏஜர் நான் மட்டும்தான். தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வேன்' என்கிறார் பிரியங்கா.

ஆணாதிக்கம் மிகுந்த சாகச விளையாட்டுகளில் ஒன்றான கார் பந்தயத்தில் பங்கேற்பது என்பது பெரும்பாலானோருக்கு கனவாகவே இருக்கும் நிலையில், அதை நனவாக்கிக் காட்டியுள்ளார் நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட குன்னூரைச் சேர்ந்த மாணவி பிரியங்கா. 'பார்முலா 4' கார் பந்தயத்தில் பங்கேற்றுவரும் முதல் தமிழ்ப் பெண்ணும் இவர்தான்.

இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. ஹானர்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார். பதினேழு வயதான இவர், தனக்கு பதினான்கு வயது முடிந்தவுடனேயே தனது ஓட்டுநருக்கான உரிமத்தை சர்வதேச ஓட்டுநருக்கான உரிமமாக வெளிநாட்டில் பெற்றுள்ளார்.

அண்மையில் கோவை கரி மோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்ற ஜே.கே.டயர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தனது தந்தை விஜயுடன் கோவை வந்திருந்த அவரிடம் பேசியபோது:

குன்னூரைச் சேர்ந்த எனக்கு சிறு வயதிலிருந்தே கார் ஓட்டுவது பிடிக்கும். அதற்காக எனது நான்கரை வயதிலேயே எனது தந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு 50 சி.சி. சிறிய காரை வாங்கிக் கொடுத்தார். 2011-இலிருந்து எனது தந்தை வெளியே செல்லும்போதெல்லாம் நானும் அவருடன் சென்று கார் ஓட்டுவேன்.

எனக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். கரோனா காரணமாக நான் படித்து வந்த கோத்தகிரி ரிவர்ûஸடு பள்ளி மூடப்பட்டதால், குன்னூரில் உள்ள தேயிலை எஸ்டேட்டிலேயே தங்கியிருக்க நேரிட்டது. அப்போதிலிருந்து தொடர்ந்து கார் ஓட்டியதால் எனக்கு வேகமாக கார் ஓட்டுவதில் கூடுதல் ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது.

இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கார் ரேஸிங் அகாதெமியில் ஓராண்டு பயிற்சி முடித்தவுடன், கோவை எல்.ஜி.பி.யிலும், சென்னை ஈக்காட்டுத்தாங்கலிலும் கார் பந்தயங்களில் பங்கேற்பதற்காக கோகார்ட்டில் ஓராண்டு பயிற்சி பெற்றேன்.

2022-இல் எம்.ஆர்.எஃப். நிறுவனத்தின் சார்பில் 18 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான கார் பந்தயத்தில் முதலிடம் பிடித்தேன். அதையடுத்து பயிற்சிக்காக கோவை கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வேயில் சுமார் 3,500 சுற்றுகள் கார் ஓட்டி தகுதி பெற்றேன்.

நிகழாண்டில் அகுரா ரேஸிங் குழுவின் சார்பில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். கோவையில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப். தேசிய கார் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற ஒரே பெண் நான்தான். எனது கார் ஓட்டும் வேகம் மணிக்கு 160 முதல் 170 கி.மீ. ஆகும்.

சென்னையில் தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறையால் நடத்தப்பட்ட ஸ்டிரீட் சர்க்யூட் போட்டியில் பங்கேற்றேன். இதிலும் பங்கேற்ற ஒரே பெண் நான்தான்.

இதில் ஏழாவதாக வந்தாலும், வெற்றிகரமாக சுற்றுகளை முடித்ததோடு, முதலிடத்தைப் பெற்றவருக்கும் எனக்கும் 15 விநாடிகள்தான் வித்தியாசமாகும். வெற்றிக்கு அருகில் வந்த எனக்கு இப்போட்டியில் எம்.ஆர்.எஃப்பின் சிறந்த ஓட்டுநருக்கான "பெஸ்ட் ருக்கி' என்ற விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் மட்டுமே நடைபெற்று வரும் ஸ்டிரீட் சர்க்யூட் போட்டியை தமிழகத்தில் முதன்முறையாக, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி குளோஸ்டு சர்க்யூட் எனப்படும் கார் பந்தய மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு மிகவும் சவாலானது என்றாலும், மிகுந்த வர வேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இத்தகைய போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

கார் ரேஸிங்கில் வெகு சில பெண்களே பங்கேற்றுள்ளனர். அதில், தென் மாநிலங்களில் மிகக் குறைவாகும். தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றுள்ள ஒரே டீன் ஏஜர் நான் மட்டுமே. கார் ரேஸிங்கில் பங்கேற்பதற்க அதிக செலவாகும். இதற்காக ஸ்பான்ஸர்களையும் அணுகி வருகிறேன்.

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையும் கார் ரேஸிங்கிற்கு அதிக கொடுப்பதால் அரசின் சார்பிலும் ஸ்பான்ஸர் கிடைக்கும் என நம்புகிறேன். தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வேன்'' என்கிறார் பிரியங்கா.

படங்கள்: யு.கே.ரவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com