ஆரோவில் ஆச்சரியங்கள்!

1930-இல் லட்சிய நகரத்தை உருவாக்க ஸ்ரீ அன்னை நினைத்ததை 1960-இல் "பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி' ஏற்க, ஆரோவில் நிர்மாணிக்கப்பட்டது.
ஆரோவில் ஆச்சரியங்கள்
ஆரோவில் ஆச்சரியங்கள்
Published on
Updated on
3 min read

1930-இல் லட்சிய நகரத்தை உருவாக்க ஸ்ரீ அன்னை நினைத்ததை 1960-இல் "பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி' ஏற்க, ஆரோவில் நிர்மாணிக்கப்பட்டது.

"ஆரோவில் மனித குல ஒருமைப்பாட்டுக்கு வடிவம் தருவதற்கும், ஆன்மிக ஆராய்ச்சிகளுக்குமான நிலையமாக விளங்கும்' என்றார் ஸ்ரீ அன்னை. இதை வடிவமைத்த கட்டட வடிவமைப்பாளர் ரோஜர் ஆங்கரோ, "பூங்காக்கள் உள்ளடக்கிய நகர் அல்ல; பூங்காவுக்குள் உள்ளடங்கிய நகர்' என்றார். இந்த நகரமைப்புத் திட்டத்தை 1966-இல் யுனெஸ்கோ பாராட்டியது.

தற்போது அந்த நகரம் 61 நாட்டவர்கள் வாழும் புண்ணிய பூமியாக, பசுமையின்அடையாளமாகியுள்ளது. புதுச்சேரி அருகே தமிழ்நாட்டு எல்லையில் அமைந்த இந்த சர்வதேச நகர் ஆன்மிக சுற்றுலாத் தலம் என்றாலும், அதில் நவீன கால அறிவியல் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவது உலகத்துக்கே முன்னோடியானதாகும்.

மத்திய அரசின் பங்களிப்புடன் ஆரோவில் உலகில் இயற்கையை நவீன தொழில்நுட்பத்தால் காக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. நீர், நிலம், காற்று, அக்னி, வானம் என ஐம்பூதங்களையும் பாதுகாக்கும் அரணாகவும் செயல்பட்டுவருகிறது. இங்கு மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் பாதுகாப்புத் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ஆரோவில் நகர் மேம்பாட்டு குழு உறுப்பினர் ஆர்.ஜோதிபிரசாத் கூறியது:

'ஆரோவில் மாத்ரி மந்திர், தோட்டம், ஏரிகள், உள்சுற்று வட்டச்சாலை, புறசுற்று வட்டச்சாலை என வட்டவடிவமாக அமைந்துள்ளது. தோட்டத்தை அடுத்துள்ள ஏரி பகுதியில் தற்போது நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையிலும்,மாத்ரி மந்திர் தீவுக்குள் அமையும் வகையிலும் சோதனை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஏரியானது 100 மீ. அகலத்திலும், 10 மீ. ஆழத்திலும் சதுரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் "மாத்ரிமந்திர்' பகுதியில் பெய்யும் மழைநீர் அனைத்தும் முழுமையாகச் சேமிக்கப்படுகிறது.

கோடைக் காலத்தில் இந்த ஏரிக்கு பொம்மையர்பாளையம் பகுதியிலிருந்து கடல்நீரை எடுத்துவருவதற்கான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு ஆரோவில் பரிசோதனை ஏரிக்கு கொண்டுவரப்படும். கடல்நீர் சுத்திகரிக்கப்படுவதால் அதில் தாதுக்கள் இல்லாத நிலை ஏற்படும் என்பதால், ஏரியில் இயற்கைத் தாதுக்கள் கலக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது சோதனை ஏரியில் 7 மீ. உயரத்துக்கு மழைநீர் நிரப்பப்பட்டுள்ளது. அந்த நீர் நாளைடைவில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில் பூமிக்குள் செல்லும். அதன்படி கடல் நீர் நிலத்தடிக்குள் வருவது தடுக்கப்படும். தற்போதைய பரிசோதனை ஏரியானது 250 மீ. அளவுக்கு மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அத்துடன் மாத்ரி மந்திர் அமைப்பை சுற்றிலுமாக அந்த ஏரி படிப்படியாக அமைக்கப்படும். ஏரியில் நீர் அதிகமானால், அவை சுற்றிலுள்ள கிராம ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படும் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. தற்போதைய சோதனை ஏரிக்கு ஏராளமான பறவைகள் வருகின்றன. மீன்கள் உள்ளிட்டவை பெருகிவிட்டன. இந்தப் பகுதியே பல்லுயிர் பெருக்கப் பகுதியாகிவருகிறது.

சோதனை ஏரியில் கோடைக் காலத்தில் நீர் கசிவைத் தடுக்கும் வகையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஹெச்.டி.பி.இ. சீட் விரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீரை சேமிக்கவும், ஏரியிலிருந்து நீர் வெளியேறாமல் தடுத்து நிறுத்தவும் ஜெர்மன் தொழில்நுட்ப செயற்கை சதுர அமைப்பு கான்கிரீட் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீர் நிறைந்த ஏரி மூலம் நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பது தடுக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் குடிநீர் தர நிலைக்கு மாற்றப்படுகிறது. ஏரி முழுவதும் 10 லட்சம் கியூபிக் மீட்டர் நீர் சேமிக்கப்படவுள்ளது.

ஆரோவில் பசுமைப் பகுதியில் உள்ள கால்வாய்களில் பத்துக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் சேமிக்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு சாலை- ஆரோவில் புறவளைவுச் சாலையில் 4.03 கி.மீ.க்கு தற்போது மழைநீர் சேகரிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. சாலையோரத்தில் உள்ள அமைப்பின் துளைகளில் மழைநீர் முழுமையாகச் சென்று சிறிய கால்வாய் வழியாக ஏரியை அடையும் வகையில் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல தேசிய நெடுஞ்சாலைகள், நான்கு வழிச் சாலைகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டால் நாட்டில் தண்ணீர் பஞ்சமே ஏற்படாது.

ஆரோவில்லில் கிரீடச் சாலையான ராஜபாதையில் மின் ஆட்டோ, மின் இருசக்கர வாகனங்கள், மின்சார கார் ஆகியன இயங்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுவருகிறது.

ஏரியை உருவாக்கும்போது கிடைத்த மண்ணால் ஏற்படுத்தப்படும் சுமார் 50 மீட்டர் உயரமுடைய செயற்கை மலையானது மரங்கள், செடிகள், கொடிகளுடன் எதிர்காலத்தில் இயற்கையான வனப்பகுதியாகும். இந்த மலையில் செயற்கை முறையில் அருவியும், சிறிய அணையும் உருவாக்கப்படுகிறது. அந்த அணைக்கு பகலில் சூரிய மின்சக்தி மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்படும். இரவில் அணை நீர் கீழே வரும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அப்படி வரும்போது அதில் மின்சார உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரோவில் உள், புற வழிச்சாலைகளை இணைக்கும் வகையில் 12 ரேடியல் (கதிர்) சாலைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. அவற்றின் இருபுறமும் நவீன சுற்றுச்சூழல்

பாதுகாப்பு அம்சங்களுடன் குடியிருப்புகள் கட்டப்பட்டு, நகரங்கள் அமையவுள்ளன. அந்த நகரில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை வசிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. முழுமையான அறிவியல் தொழில்நுட்பத்தால் இயற்கை பாதுகாப்புடனான பசுமை ஆரோவில் சர்வதேச நகரானது ஏற்படுத்தப்படுவதே அன்னையின் கனவை நனவாக்குவதாக அமையும்'' என்கிறார் ஜோதிபிரசாத்.

படங்கள்-கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com