
டி.எம்.இரத்தினவேல்
ஸ்ரீரங்கப்பட்டணத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1801 டிசம்பர் 18-இல் இந்தியா ஆபிஸ் லைப்ரரிக்கு ஒரு அதிசயத்துக்குரியதும், பார்ப்பதற்கு யாரும் விரும்புவதுமான ஒரு பெரிய அளவிலான புத்தகம் வழங்கப்பட்டது. அது திப்பு சுல்தான் தனது கையினால் எழுதப்பட்ட எட்டு பாகங்கள் கொண்ட தஸ்தாவேஜிகள்.
திப்பு அதில் தான் கண்ட கனவுகளையெல்லாம் அழகுபட எழுதி வைத்திருந்தார். நல்ல எழுத்தாளராகவும் திப்பு விளங்கினார் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. அவர் எழுதியவற்றை பீட்சன் என்பவர் தமது நூலில், "திப்பு சுல்தானுடன் நடத்திய போர்முறை' என்பதில் மொழிபெயர்த்திருக்கிறார்.
'சுல்தானின் கனவுகள்'' என்ற இந்த எட்டு பாகங்கள் கொண்ட நூல் அரண்மனையிலுள்ள சாய்வான மேஜையில் இருந்து மற்ற சில ரகசிய கடிதங்களுடன் மேஜர் கிரிக்பேட்ரிக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் திப்புவின் அந்தரங்கப் பணியாளராக இருந்த ஹபிபுல்லா என்பவர் உடனிருந்தார்.
'சுல்தானிடம் அவராகக் கைப்பட எழுதியுள்ள புத்தகம் இப்படி ஒன்று இருக்கிறது என்று பலருக்குத் தெரிந்திருந்தாலும், திப்பு அதைப் பார்க்கவோ, படிக்கவோ யாரையும் அனுமதித்ததில்லை. இதில், அவர் எழுதும்போதோ அல்லது இதைப் படிக்கும்போதோ வேறு யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்ற முறையிலேயே நடந்துகொள்வார். இதுபற்றி யாரிடமும் பேச மாட்டார்'' என்று ஹபிபுல்லா தெரிவித்திருந்தார்.
'அபூர்வமான திப்பு சுல்தானின் படைப்புகளில் ஆறு நூல்கள் மட்டும்தான் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அதில் பெரும்பாலும் மூலக் கருத்தாக அமைந்திருக்கிறது'' என்று டாக்டர் ஆர்.பெரி என்பவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ""அதில் கண்ட எழுத்துகள் ஆங்கிலேயர்களுக்கு உவப்பாக இல்லை.
இருந்தாலும், அதில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்த அபாயகரமான தீவிர எதிரியான திப்பு சுல்தானின் மனோநிலை நன்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆகவே, பொதுமக்களும் படிக்கும் வகையில், மொழிபெயர்த்து பிரசுரிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, திப்பு சுல்தானின் புத்தக சாலையில் பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களும் ஏராளமாக இருந்தன. அவைகள் பெரும்பாலும் விஞ்ஞானம், மருத்துவம், இசை, இலக்கணம், வேதாந்தம், போர்க்கலை முதலியவைகளைப் பற்றியதாகும். அதோடு, ஜோதிடக் கலை பற்றியும் "சாபர்ஜத்' என்ற நூலை திப்பு எழுதியிருந்தார்.
திப்புவின் புத்தகச் சாலையில் இருந்த புத்தகங்கள் நன்கு பைண்டு செய்யப்பட்டு அவற்றின் அட்டையில் அல்லது முகப்பின் மீது கடவுள் பெயரோ, முகமது என்ற பெயரோ, அவரது மகள் பாத்திமாவின் பெயரோ காணப்பட்டன.
பைண்டிங் செய்யப்பட்ட பல புத்தகங்கள் மீது திப்பு சுல்தானின் முத்திரை சின்னம் காணப்பட்டது. புத்தகங்களையெல்லாம் பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்தார் திப்பு சுல்தான்.
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.