
'இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம்' என்ற சமூக அமைப்பை பன்னிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஐம்பது வயதான பட்டயக் கணக்காளர் ச. கணேசன். இவர் மதுரையைப் பூர்விகமாகக் கொண்டவர்.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாதம்தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு கோயில்களுக்குச் சென்று உழவாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் முதல் முதியோர்கள் வரையில் ஈடுபாட்டுடன் இதுவரை 278 கோயில்களில் உழவாரப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
அவரிடம் பேசியபோது:
''நான் 2000-இல் எம்.காம். தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்கு காத்திருந்தேன். இந்த நேரத்தில் பெருங்கொளத்தூரில் வசித்த எனது நண்பர் புகழேந்தி வீட்டுக்குச் சென்றபோது, அருகில் இருந்த நெடுங்குன்றம் கோயிலுக்குச் சென்று தரிசித்தேன். பிரதோஷ தினமான அன்று பக்தர்கள் திரண்டிருந்தனர்.
நான் கோயிலை வலம் வந்தபோது, பிரகாரத்தில் இருந்த முதியவர் ஒருவர், தேவையற்ற செடி, கொடிகளை அகற்றி உழவாரப் பணி செய்து கொண்டிருந்தார். இத்தனை வயதில் அவர் இறைத் தொண்டு செய்யும்போது, 'நாமும் ஏன் உழவாரப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது?' என்ற கேள்வி என் மனதில் எழுந்தது.
2002 ஜனவரியில் 'இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினேன். முதலில், நெடுங்குன்றம் கோயிலில் பத்து தன்னார்வலர்களோடு சென்று சுத்தம் செய்தேன். இப்படித்தான் எங்கள் இறைப்பணி துவங்கியது.
உழவாரப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் எவரும் எங்கள் மன்றத்தில் உறுப்பினர் ஆகலாம். இதற்கு எந்தவிதமான சந்தாவோ, கட்டணமோ கிடையாது.
ஆரம்பத்தில் தன்னார்வலர்கள் இருசக்கர வாகனங்களில் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று பணி உழவாரப் பணியைச் செய்வோம். தன்னார்வலர்கள் எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்கவே, வேன்களில் செல்ல ஆரம்பித்தோம். எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே, ஒரு கட்டத்தில், அனைவருக்கும் கோயில் குறித்த விவரம் தெரிவித்து, நேரடியாக வரச் சொல்கிறோம்.
காலையில் ஆறு மணிக்குப் புறப்பட்டால், இரண்டு மணி நேரத்தில் சென்றடையும் வகையில் கோயில்களைத் தேர்ந்தெடுக்கிறோம். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் மாதம்தோறும் உழவாரப் பணியை செய்து வருகிறோம். தற்போது சராசரியாக ஒவ்வொரு மாதமும் நானூறு பேர் வரை வருகை தருகின்றனர்.
கோயிலுக்குச் செல்லும் எங்கள் அமைப்பின் தொண்டர்கள் தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுதல், குளத்தையும் சுற்றுப் புறத்தையும் தூய்மைப்படுத்துதல், ஒட்டடை அடித்தல், சிற்பங்களை சுத்தம் செய்தல், கருவறையில் இருந்து அபிஷேக நீர் வெளியேறும் தும்பின் வழியை சரி செய்தல், நந்தவனப் பராமரிப்பு உள்ளிட்ட 18 வகையான பணிகளைச் செய்கின்றனர். சில கோயில்களில் சுண்ணாம்பு அடித்திருக்கிறோம். இதுவரை நாங்கள் 278 கோயில்களில் உழவாரப் பணியை மேற்கொண்டிருக்கிறோம்.
உழவாரப் பணி தேவைப்படும் கோயில்கள் பற்றிய தகவல்களை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு, அந்தந்த கோயில் நிர்வாகத்தினரோடு தொடர்பு கொண்டு, உரிய அனுமதி பெற்று உழவாரப் பணி செய்வோம். குடிநீர், உணவு, காபி. டீ, மோர் போன்றவற்றுக்கான செலவுகளை எங்கள் மன்றமே பார்த்துக் கொள்கிறது.
கடந்த சிலஆண்டுகளாக, தொண்டர்கள் பலரும் நன்கொடைகளை வழங்குகிறார்கள். ஆரம்ப காலத்தில் ஒரு ஆலயத்தில் உழவாரப் பணி என்றால் ஐந்தாயிரம் ரூபாய் செலவாகும். இப்போது அடியார்கள் எண்ணிக்கை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
ஆண்டில் பத்து மாதங்கள் சென்னை , அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கோயில்களில் உழவாரப் பணி செய்தாலும் மே, டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று ஒரு நாளுக்கு பதிலாக சனி, ஞாயிறு என இரண்டு நாள்களாக ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களில் உழவாரப் பணி செய்வதை கடந்த எட்டு ஆண்டு
களாக கடைபிடிக்கிறோம். இதற்கான போக்குவரத்து, தங்குமிடம், போன்ற செலவுகளை அனைவரும் பகிர்ந்துகொள்கிறோம்.
திருவண்ணாமலை, சீர்காழி, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், ராமேசுவரம் என பல தலங்களுக்குச் சென்று உழவாரப் பணி செய்யும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.
சத்தியவேடு, ஸ்ரீசைலம், நந்தியால், காளஹஸ்தி, சுருட்டபள்ளி உள்ளிட்ட பிற ஆந்திர மாநிலக் கோயில்களிலுக்கும் சென்று உழவாரப் பணி செய்திருக்கிறோம்.
அந்தந்த ஊர்களில் உள்ள தொண்டர்கள் ஒன்றிணைந்து தங்கள் ஊர் கோயில்களைத் தூய்மையாகப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கச் செய்யும் வகையில் நிரந்தர ஏற்பாட்டை செய்வதும் எங்கள் நோக்கம். காவல் துறையின் அனுமதியைப் பெற்று கோயில்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டியது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு விழிப்புணர்வு திருவீதியுலாவும் நடத்துவோம். அப்போது, திருக்கையிலை வாத்தியங்கள் முழங்க, ஆலயத் தூய்மை விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தித் தொண்டர்கள் வருவர்கள்.
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயில் வளாகங்களில் மரக்கன்றுகள் நடுவதையும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மஞ்சள் பை விநியோகிப்பதையும் கூட நாங்கள் செய்து வருகிறோம்.
உலக நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனையும் கட்டாயமாக இடம்பெறும்.
சோளிங்கரில் உள்ள நரசிம்ம தீர்த்தத்தில் தண்ணீர் வரத்துக்குத் தடையாக இருந்த அனைத்தையும் வெட்டி, சீராக்கினோம், அடுத்து மழை பெய்தபோது, நரசிம்மத் தீர்த்தம் நிரம்பி வழிந்தது. ஒரு கடும் கோடையில் மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில் குளத்தில் மழை வேண்டி பதிகம் பாடியபடி உழவாரப் பணி செய்தோம். எங்கள் பணி நிறைவடையும் தருணத்தில் மழை கொட்டியது.
அனைத்து கோயில்களிலும் ஆண்டின் 365 நாள்களும் சுத்தமான சூழ்நிலை இருக்க வேண்டும், அதனை உறுதி செய்ய ஊருக்கு ஐம்பது பேரைத் தயார் செய்ய வேண்டும் என்பதை எங்கள் லட்சியம்'' என்கிறார் கணேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.