உணர்வுகளை கிளறி விடும் கதையாக அழகு சேர்த்திருக்கிறது 'மெய்யழகன்'. கிராமங்களிலிருந்து சென்னை போன்ற பெரு நகரங்களில் குடியேறியவர்கள், தன் கிராமத்து சொந்த பந்தங்களை நினைவு கூறும் வகையில் திரையரங்குகளை ஆக்கிரமித்து இருக்கிறது படத்தின் வசனமும், காட்சிகளும்.
கார்த்தி போன்ற நாயக அந்தஸ்துடைய நடிகரை எந்த சமரசமுமின்றி அழகான பீல் குட் கதையில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.
இயக்குநர் நினைத்தது போலவே அத்தனை துல்லியமாக கதாபாத்திரங்களுக்கு கார்த்தியும், அரவிந்த்சாமியும் உயிர் கொடுத்திருந்தார்கள். 'மெய்யழகன்' பட உருவாக்கம் குறித்து இயக்குநர் பிரேம்குமாரிடம் உரையாடினோம். அதிலிருந்து....
'மெய்யழகன்' வெளியான பிறகு வரும் கருத்துக்கள் எவ்வளவு நிறைவை தந்திருக்கிறது...
'96', 'மெய்யழகன்'னு இரண்டு படங்களிலும் மக்களிடம் இருக்கிற அன்பு வெளிப்பட வேண்டும் என்றுதான் விரும்பினேன். '96' படத்துக்கு பலரும் 'இந்த படத்தை எடுத்ததுக்கு நன்றி' என்று சொல்லி சோசியல் மீடியாக்களில் தங்களது நிலைப்பாட்டை பதிவு செய்தார்கள்.
இப்போது 'மெய்யழகன்' படத்துக்கும் அதே மாதிரியான பதிவுகளை போட்டு வருகிறார்கள். நான் நினைத்தது நடந்து வந்திருக்கிறது. மக்கள் கிட்ட இருந்து அன்பு வெளிப்பட்டு வருகிறது.
பலர் படம் பார்த்து விட்டு ஊருக்குப் போய் வருகிறாகள் என்று சொல்லும்போது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், படத்தை நினைத்த மாதிரியே எடுத்து விட்டோம் என்று எனக்கு அப்போதே ஒரு நிறைவு வந்து விட்டது.
இப்போது ரிலீஸýக்கு பிறகு தமிழைவிட தெலுங்கில் பெரிய ஹிட். நாகார்ஜூனா சார் வரை நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
கதையில் என்னென்ன விஷயங்களெல்லாம் புனைவு... எதெல்லாம் உண்மையாகவே உங்க வாழ்க்கையில் நடந்தது...
படத்தில் தொடக்கத்தில் வருகிற ஃபிளாஷ் ஃபேக் காட்சி உண்மையாகவே எனக்கு நடந்தது. நிதர்சனமாகவும் உறவு முறைகளை மறந்திடுவேன்.
மறந்ததை சமாளிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்து விடுவேன். சில சமயங்களில் உறவு முறையை மாற்றி சொல்லி விடுவேன். இந்தப் படத்தில் வருகிற அருள்மொழி நான்தான். 'அசுரவதம்' திரைப்படத்தினுடைய இயக்குநரான மருது பாண்டியன்தான் 'மெய்யழகன்'.
நல்ல வாசிப்பு பழக்கம் இருக்கக்கூடிய மனிதர் அவர். ரொம்பவே வெள்ளந்தியான மனுஷன். சின்ன சின்ன விஷயங்களையும் அப்படி ரசிப்பார். அதே மாதிரி 'மெய்யழகன்' கதாபாத்திரம் மாதிரியே எங்க வீட்டிற்கு வருகிற பிளம்பர் ஒருத்தர் இருக்கிறார்.
எல்லா விஷயத்தையும் ரொம்பவே விளக்கி சொல்லி சிலாகிக்க வைப்பார். எங்கேயாவது வேலையாக அவசர அவசரமாக பயணமாகும் போது வந்து ஒரு விஷயத்தை சொல்வார். நானும் இருக்கிற வேலையை விட்டு விட்டு அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்தளவுக்கு சுவாரஸ்யமாக சொல்வார். இது எல்லாம் கலந்ததுதான் மெய்யழகன்.
ராஜ்கிரண் நடிப்பும் உணர்வுகளை அப்படி வெளிப்பட்டிருந்தது... அதற்கான தொடக்கப் புள்ளி பற்றி...
அந்த கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் என்னுடைய தாய் மாமாதான். அவர் பெயர் ராமசந்திரன். அவருடைய பெயரைதான் '96' படத்தில் வைத்திருந்தோம்.
ரொம்பவே முரட்டுதனமாக இருப்பார். அப்படியானவர்கள் நம்மை அடித்து, கிள்ளிதான் கொஞ்சுவாங்க. ஆனால் அவங்களுக்குள்ள ஒரு மனசு இருக்கும். அந்த மாதிரிதான் ராஜ் கிரண் சார் கதாபாத்திரம். அந்த மாதிரியான மனுஷங்க சின்னதாக ஒரு காமெடி பண்ணினாலும் நமக்கு சிரிப்பு அதிகமாக வரும்.
ராஜ் கிரண் சார் எமோஷனல் காட்சிகளில் நடிக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அத்தனை பேரையும் கலங்க வைத்து விடுவார். மற்ற கதாபாத்திரங்களை திட்டுகிற மாதிரி ஒரு சின்ன வசனம் இருந்தாலும் 'தம்பி இப்படி ஒன்னு இருக்கு'னு என்னிடம் வந்து சொல்வார். அவர்கூட வேலை பார்த்தது சுகமான அனுபவம்.
18 நிமிட காட்சிகளை நீக்கிவிடலாம் என எதற்காக முடிவு செய்தீர்கள்...
படத்தை பற்றி இரண்டு வகையிலான விமர்சனத்தை சொன்னார்கள். ஒரு சமூக பிரச்னையை கண்டுக்காமல் அதை அப்படியே கடந்து போகிறவர்கள் முதல் வகை. இரண்டாவது வகை அந்த சமூக பிரச்னையை கடந்து போக முடியாமல் இருக்கிறவர்கள்.
பலர் இது இரண்டு நபர்களை பற்றிய கதை, இந்த இரண்டு பேர்களிடமும் எதற்கு இந்த விஷயங்களெல்லாம் வர வேண்டும் என்று விமர்சனம் முன் வைத்தார்கள். நான் இரண்டு பேருக்கு இடையிலான கதை என்று சொல்லவில்லை.
ஆனால் அப்படி கிடையாது. ஒரு போர் பற்றி நினைக்கும் போது, மனைவி, மாடு, பாம்பு என்று அத்தனை விஷயங்கள் பற்றியும் அவன் நினைக்கிறதால்தான் அவன் மெய்யழகன்.
இந்த மாதிரியான படங்கள் வெற்றி நிலையை அடைந்தால்தான் அடுத்த அந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இதே மாதிரி மற்றொரு திரைப்படம் வரும். படத்தின் நடிகரும் 'நல்ல படம் பண்ணினோம். ஆனா சரியாகப் போகல'னு நினைச்சிடக் கூடாது. அதனால்தான் மக்களுடைய குரலுக்கு செவி சாய்த்தோம். 18 நிமிட காட்சிகளை
நீக்கிய பிறகு வலுவான கண்டனக் குரல்கள்
வருகிறது. நீக்கிய காட்சிகளைதான் அதிகமாக ரசிக்கிறோம் என்று சொல்கிறார்கள். அந்த காட்சிகளெல்லாம் இப்போது டெலீடட் காட்சிகளாக இணையங்களை ஆக்கிரமித்து இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.