வருமுன் காப்போம்....

வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி, சென்னையிலும், வட மாவட்டங்களிலும் மழைப்பொழிவை அதிக அளவில் அண்மையில் ஏற்படுத்திவிட்டது.
வருமுன் காப்போம்....
Published on
Updated on
2 min read

வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி, சென்னையிலும், வட மாவட்டங்களிலும் மழைப்பொழிவை அதிக அளவில் அண்மையில் ஏற்படுத்திவிட்டது. மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் ஏற்படுவது இயல்பே. நோய்கள் வராமல் இருக்கவும், வந்தவுடன் அதற்கு தேவையான சிகிச்சை பெறுவது குறித்தும் மருத்துவர்களிடம் பேசியபோது:

எஸ்.அமுதகுமார், பொது மருத்துவர்:

நோய்களுக்கு அடிப்படை காரணமே தண்ணீர்தான். நாம் பயன்படுத்தும் தண்ணீரை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

வெந்நீரை குடிப்பது நல்லது. வாய் கொப்பளிக்கும்போது, முடிந்தவரையில் வெந்நீரைப் பயன்படுத்துவது சிறந்தது.

மழைநீரில் நனைந்துவிட்டால், உடனடியாகத் துணிகளை மாற்ற வேண்டும். உடலையும் டவலால் துவட்டி, ஈரம் உலர செய்தல் வேண்டும்.

துணிகளைத் தோய்த்துவிட்டு, அலசி எடுக்கும்போது நான்கு சொட்டு டெட்டால் போட்டு அலசி எடுத்தால் கிருமிகள் இருக்காது.

வீடுகளிலும், நம் அருகேயுள்ள இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் தண்ணீர் தேங்காமல் வைத்திருப்பது நல்லது. மழைவிட்டவுடன் இங்கிருந்துதான் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய்கள் பரவ காரணமாகின்றன.

வீட்டில் யாருக்கேனும் தொண்டை நோய்கள், சளி இல்லாத இருமல், ஜலதோஷம் போன்றவை ஏற்பட்டால், வீட்டில் உள்ள அனைவரும் சீரகம் கலந்த நீரைக் குடிப்பது நல்லது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மேசைக்கரண்டி சீரகம் போட்டு கொதிக்கவிட்டு, ஆறவைத்து காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும். நோய் வராமல் தடுக்கும் அருமருந்து இது.

நாள்தோறும் வைட்டமின் சி ஆயிரம் மில்லி சாப்பிட வேண்டும். இவற்றை நாம் சாப்பிடுகிறோமா? என்பதை கணக்கிடுவது சற்று சிரமம்தான். எலுமிச்சை, கிச்சிலி, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி

நிறைந்த பழங்கள். பழங்கள் சாப்பிட முடியாதவர்கள் 500 மில்லி அளவு கொண்ட வைட்டமின் சி மாத்திரைகளை நாள்தோறும் காலையிலும், இரவிலும் ஒன்று சாப்பிடலாம். இந்த மாத்திரையால் எந்தப் பக்கவிளைவும் கிடையாது. அதிக அளவு வைட்டமின் சி உடலில் சேர்ந்துவிட்டாலும், சிறுநீரில் வெளியே வந்துவிடும்.

மழைக்காலங்களில், எலுமிச்சை பழச்சாறு கலந்த நீரை சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதோடு, வைட்டமின் சி சத்தையும் உயர்த்தும்.

வேறு ஏதாவது நோய்கள் ஏற்பட்டால், உங்கள் குடும்ப மருத்துவரையோ அல்லது அருகேயுள்ள மருத்துவர்களையோ ஆலோசித்து, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சாப்பிடுவது சிறந்தது.

கே.எல்.சிவக்குமார் (பாரம்பரிய சித்த மருத்துவர்):

மழைக்காலங்களில் மிளகு சாதம், பூண்டு குழம்பு, பிரண்டை தொக்கு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம்.

அதிமதுரம் கஷாயம் தினமும் குடித்துவந்தால், நோய் வராமல் தடுக்கலாம்.

காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்ற மழைக்கால நோய்கள் வந்தால், நிலவேம்பு கஷாயம் சாப்பிடுவது சிறந்தது. இருமல் வந்தால், மிளகு- தனியா கஷாயம் குடித்தால் விரைவில் குணமாகும்.

தொண்டை வலி குணமாக, உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது நல்லது.

மழைக்காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறாது. அதனால், சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதற்காக, அச்சப்படத் தேவையில்லை.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும் உடலில் சற்று வீக்கம் காணப்படும். இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

மழைக்காலங்களில், கால்களில் உள்ள நகக் கண்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். கருப்பு நிற அழுக்குகள் ஏற்படாதவாறு பார்க்க வேண்டும். மழையில் நடந்து சென்றுவிட்டால், வீட்டுக்கு வந்தவுடன் கால்களை துணிகளால் துடைக்க வேண்டும்.

மழையாக இருக்கிறது என்று குளிக்காமல் இருப்பது தவறு. உடல் வெப்பம் தொந்தரவு செய்வதோடு, கிருமிகளும் உடலில் சேர்ந்து நோய்களை ஏற்படுத்தும். ஆகவே, மழைக்காலத்தில் முடிந்தவரையில் வெந்நீரிலாவது குளித்தல் நல்லது.

வாய்ப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் "ஆவி பிடித்தல்' முறையைப் பின்பற்றி, உடலை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்.

மலம், சிறுநீரை உடனுக்குடன் கழித்துவிட வேண்டும். மழையாய் இருக்கிறதே என்று சோம்பலாய், சற்று நேரம் அடக்கிவைத்தால் ஆபத்தில் முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com