
மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முன்னதாக, தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருள்வது வழக்கம்.
அத்தகைய சிறப்பு வாய்ந்தது தமிழின் பாரம்பரிய மூலிகையான வெட்டிவேர் புல் வகையைச் சேர்ந்தது. இதன் பெருமையை, வாசனையை திரைப்படப் பாடலும் குறிப்பிடுகிறது. அத்தகைய வெட்டிவேரில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர் பாரம்
பரியத்தை, இயற்கை சார்ந்த அறிவியல் தொழில்நுட்பத்தை பரப்பிவருகிறார் முனைவர் சிகே. அசோக்குமார்.
கடலூரைச் சேர்ந்த இவர், சித்தர்கள் பூமியாம் திருவண்ணாமலையில் வசித்துவருகிறார். புதுச்சேரிக்கு அவ்வப்போது வருகை தந்து வெட்டிவேர் குறித்தும், அதன் அவசியத் தேவை குறித்தும் விளக்கிவருகிறார். அவருடன் ஓர் சந்திப்பு:
உங்களைப் பற்றி..?
நான் பி.ஏ., பி.எல். படித்துள்ளேன். தத்துவக் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.
எனது தந்தை சின்னிகிருஷ்ணன், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நாட்டிலேயே முதன்முதலாக பாக்கெட் ஷாம்பு விற்பனையை அறிமுகப்படுத்தியவர். கடலூரை ஷாம்புகளின் தலைநகராக்கி, "சாஷே' எனப்படும் பாக்கெட் ஷாம்புகள் விற்பனையில் உலகின் கவனத்தை ஈர்த்தவர். தொழில் ஆர்வத்தால் ஆசிரியர் பணியிலிருந்து அவர் விலகி, நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர்களை உருவாக்கினார்.
படிக்கும்போதே அப்பாவுடன் தொழிலில் ஈடுபட்டேன். அப்பாவின் திடீர் மரணம், அம்மாவின் தொழில் ஈடுபாடு, சகோதரர்களின் தொழில் ஆர்வம்... என பல அனுபவங்கள், ஆதரவுகள் எனக்குக் கிடைத்தன.
விவசாயிகளைத் தொழில் முனைவோராக்கவும், விவசாயிகள் கூட்டமைப்பு மூலம் நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் அறிமுகப்படுத்தவும் ஆலோசனைகளை வழங்குகிறேன். எனது சகோதரரின் இயற்கை சார்ந்த அழகு நிலைய வர்த்தகம் நாடெங்கும் கிளைகளைப் பரப்பியதில் எனது பங்கும் உள்ளது.
வெட்டிவேரின் பயன்கள் என்ன?
வெட்டிவேர் நறுமண எண்ணெய் சந்தன எண்ணெய்க்கு அடுத்தபடியாக உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், இந்தியா, ஹைத்தி, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் வெட்டிவேர் எண்ணெயை ஏற்றுமதி செய்துவருகின்றன.
மன அழுத்தம் போக்குதல், குளிர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் வெட்டிவேர் முக்கியமானதாக உள்ளதை ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் தெளிவுபடுத்தியுள்ளன.அதனால்தான் சர்பத் போன்ற பானங்களில் முக்கியமாக வெட்டிவேர் சேர்க்கப்படுகிறது.
காற்றில் கார்பன்டை ஆக்ஸைடை நீக்கி ஆக்சிஜனை அதிகப்படுத்தும் சக்தியும் வெட்டிவேருக்கு உள்ளதோடு, நீர், நிலம் உள்ளிட்ட அனைத்து இயற்கையையும் சுத்தப்படுத்தும் ஆற்றலும் உள்ளது.
மலைப்பகுதியில் மண் சரிவைத் தடுக்கும் சக்திவாய்ந்ததாக வெட்டிவேர் உள்ளது. வெட்டிவேர் பயிரிட்டிருந்தால் கேரளத்தில் மண் சரிவைத் தடுத்திருக்கலாம். கடற்கரையோரம் வெட்டிவேர் பயிரிடப்பட்டால் கடல் அரிப்பு தவிர்க்கப்படும். நீர் நிலைகளில் நச்சுத்தன்மையை போக்கி, சுத்தப்படுத்தும் சக்தி வெட்டிவேருக்கு உள்ளது. இதனாலேயே நீர்நிலைகளைச் வெட்டிவேர் மிதவைகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்திவருகிறது.
மேற்குவங்கத்தில் ஹூக்ளி ஆற்றின் இரு கரையோரமும் சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு வெட்டிவேரை பாபுலால் மகதோ என்பவர் பயிரிட்டு மண் அரிப்பைத் தடுத்துள்ளதால், அவருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
வெட்டிவேர் பாதுகாப்பதில் உங்கள் பங்களிப்பு என்ன?
2019-இல் "உலக மூத்த குடி' எனும் அமைப்பைத் தொடங்கினேன். தொழில், ஆன்மிகத்தை இணைத்து சமுதாயச் சேவையைத் தொடர்கிறேன். சிறு, குறுந்தொழிலில் ஈடுபடுவோருக்கு உலகளாவிய வர்த்தகத் தொடர்புகளைஏற்படுத்தித் தருகிறேன். அதனை மையப்படுத்தியே "வெட்டிவேர் மூலிகை' எனும் அமைப்பை ஏற்படுத்தினேன்.
வெட்டிவேர் எங்கெங்கு பயிரிடப்படுகிறது?
தமிழ்நாட்டின் தொன்மைத் தாவரமான வெட்டிவேரானது தமிழர்களால் சுற்றுச்சூழலைக் காக்க வளர்க்கப்பட்டு, பல்வேறு நிலைகளிலும் அதை பயன்படுத்தியது குறித்து
ஆயிரக்கணக்கான ஆய்வுகள் மூலம் அறியலாம். தற்போது நாட்டில் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் வெட்டிவேர் பயிரிடப்படுகிறது. அதில் 2 ஆயிரம் ஏக்கர் வெட்டிவேர் தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டுள்ளது.
வெட்டிவேரின் சிறப்புகள் என்ன?
தமிழ்நாட்டின் காவிரி படுகை உள்ளிட்ட இடங்களில் அதிகம் காணப்படும் வெட்டிவேர் தாவரமானது "வெட்டிவேரா சிசானியோடஸ்' எனும் தாவரப் பெயரில் தமிழ் பெயருடன் அழைக்கப்படுவது உலகில் அறிவியலில் தமிழுக்குரிய அங்கீகாரத்தை அளிப்பதாக உள்ளது.
வெட்டிவேருக்கு வெளிநாடுகளில் உள்ள சிறப்புகள் என்ன?
தாய்லாந்து நாட்டில் வெட்டிவேர் பயிரிடுவோரைப் பாராட்டி அரச குடும்பத்தினர் விருதும், பரிசும் வழங்குகின்றனர். அதற்காகவே 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கு சர்வதேச அளவிலான வெட்டிவேர் மாநாடும் நடத்தப்பட்டுவருகிறது.
வெட்டிவேர் அருமை, பெருமையை வெளிநாட்டவர்கள் உணர்ந்த அளவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் உணராமலிருப்பது கவலையளிக்கிறது.அவர்களுக்கு வெட்டி வேர் பெருமையின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணைந்து வெட்டி வேர் பயிரிடும் விவசாயிகளுக்கு விருது வழங்கவுள்ளோம்.
தமிழையும், தமிழரின் பாரம்பரிய அறிவியல் கண்ணோட்டத்தையும் உலகில் பிறர் அறிவதற்கு காரணியாகவே வெட்டிவேர் உள்ளது. இயற்கையைக் காக்கவும், இயற்கை வழியாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைத் தக்க வைக்கவும் வெட்டிவேர் போன்ற பல மூலிகைகள் தமிழர்களிடம் உள்ளன. அவற்றை நாம் முறையாக உலகுக்கு எடுத்துச்செல்வது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.