மதுரையின் முதல் பெருமை மீனாட்சி அம்மன் கோயில். இரண்டாம் பெருமை காந்தி அருங்காட்சியகம். நாட்டிலேயே முதன்முதலாக அமைந்த காந்தி அருங்காட்சியகமும், தென் இந்தியாவில் அமைந்த ஒரேயொரு காந்தி அருங்காட்சியகமும் இதுவே!
354 வயதாகும் இந்தக் கலை அழகுள்ள கட்டடத்தை 1670இல் ராணி மங்கம்மா, தமுக்கம் மைதானத்தில் தனக்கான கோடைக்கால அரண்மனையாகக் கட்டினார். நாயக்கர் ஆட்சி முடிந்ததும் கர்நாடக நவாப் ஆளுகைக்கும், அதன் பிறகு ஆங்கிலேயரின் ஆளுமைக்குள்ளும் இந்த அரண்மனை வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியில் நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர்களின் இல்லமாகவும் மாற்றப்பட்டது. பதிமூன்று ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த அரண்மனையை தமிழ்நாடு அரசானது அகில இந்திய காந்தி நினைவு' நிதியகத்திடம் காந்தி அருங்காட்சியகம் அமைக்க ஒப்படைத்தது. பின்னர், 1959இல் அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு அமைக்க காரணம் என்ன?
மகாத்மா காந்தி 1896 முதல் 1946 வரை இருபது முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அதில் ஐந்து முறை மதுரைக்கு வந்துள்ளார்.
மகாத்மா காந்தி தலைப் பாகை, சட்டை, வேட்டியைத் தவிர்த்து அரையாடையை முதல் முறையாகவும் நிரந்தரமாகவும் ஏற்றது மதுரை பொட்டல் மைதானத்தில் 1921 செப்டம்பர் 22இல் நடைபெற்ற கூட்டத்தில்தான். அந்த மைதானம் இன்றைக்கும் "காந்தி பொட்டல்' என்றே அழைக்கப்படுகிறது. இங்கு காந்தியை காமராஜர் முதன்முதலில் சந்தித்தார்.
காந்தி பாரம்பரிய குஜராத்தி முழு ஆடையைத் தவிர்த்து அரையாடைக்கு மாறிய "ராம்ஜி கல்யாண்ஜி இல்லம்' காதி கிராஃப்ட் விற்பனை நிலையமாக மாறியுள்ளது.
தோளில் துண்டு, திறந்த மார்பு, இடுப்பில் மடித்துக் கட்டிய வேட்டி என அரை நிர்வாணக் கோலத்தை மதுரையில் ஏற்ற காந்தி அதே கோலத்தில் பல வைஸ்ராய்களையும் தலைவர்களையும் எந்தத் தயக்கமும் இன்றி சந்தித்துப் பேசினார்.
மதுரை அருங்காட்சியகத்தில், காந்தியின் வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காந்தி பயன்படுத்திய பல பொருள்கள், ஹிட்லர் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களுக்கு காந்தி எழுதிய கடிதங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கோட்ஸேயால் காந்தி சுட்டு கொலை செய்யப்பட்டபோது, அவர் அணிந்திருந்த உடை ரத்தம் தோய்ந்த நிலையில் இங்கு பாதுகாக்கப்பட்டுவருகிறது. காந்தியின் அஸ்தியில் ஒரு பகுதி இந்த அருங்காட்சியகத்தில் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கர் 1636இல் கட்டிய அரண்மனையான நாயக்கர் மகாலில் திருமலை நாயக்கரின் சந்ததிகள் வாழ்ந்து, ஆட்சி செய்தனர். அந்த அரண்மனையின் பல பகுதிகள் சிதைந்து போனாலும் ராணி மங்கம்மாள் கட்டிய "தமுக்கம் கோடை கால அரண்மனை' இன்றைக்கும் பொலிவு குலையாமல் இருக்கிறது.
இந்த அருங்காட்சியகத்தை அறக்கட்டளை ஒன்று நிர்வகித்து வருகிறது. தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.6 கோடி நிதியில், காந்தி நினைவு அருங்காட்சியகமானது பழமை, கலை நயம் மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுதந்திரப் போராட்டங்களை விவரிக்கும் 'தொடுதிரை', காந்தியின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ள "ஒலிஒளி' காட்சி அரங்கம் ஆகியவை பயன்பாட்டிற்குத் தயார் நிலையை அடைந்துவிட்டன.
சுதந்திரத்துக்கு முன், காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இத்தாலியப் பெண் ஒருவர், இந்தியா வருகை தந்து காந்தியை சந்தித்தபோது, காந்தியின் மார்பளவுத் தோற்றத்தை ஏழு சிலைகளாக வடிவமைத்து, காந்தியிடம் ஒப்படைத்தார். ஏழு சிலைகளிலும் காந்தி கையெழுத்திட்டார். காந்தியவாதியான ஜே.சி. குமரப்பா, ஒரு சிலையை பெற்று, மதுரைக்கு அருகில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியில் நிறுவியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.