மணியே.. மணியின் ஒளியே..!

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து, அபிராமி பட்டர் எழுதிய பக்திப் பாடல்களின் தொகுப்புதான் 'அபிராமி அந்தாதி'.
அபிராமி அந்தாதி
அபிராமி அந்தாதி
Published on
Updated on
1 min read

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து, அபிராமி பட்டர் எழுதிய பக்திப் பாடல்களின் தொகுப்புதான் 'அபிராமி அந்தாதி'. 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப் பாடலை ஒரு கோடி முறை பாராயணம் செய்யத் தீர்மானிக்கப்பட்டு, நான்கரை ஆண்டுகளில் அதை வெற்றிக்கரமாகச் செய்து காட்டியுள்ளனர் ஆன்மிகக் குழுவினர்.

கோவையைச் சேர்ந்த நந்தினி ராஜன், சுபா கல்யாணசுந்தரம், சென்னையைச் சேர்ந்த சித்ரா ஸ்ரீதர், மும்பையைச் சேர்ந்த முரளி சுப்பிரமணியன்,பெங்களூரைச் சேர்ந்த செளடேஸ்வரி, கண்ணம்மா உள்ளிட்டோரும், திருநெல்வேலி மதங்க சூளாமணியார் குழுவினரும் முக்கிய பங்காற்றியவர்கள்.

ஊர்கூடித் தேர் இழுந்ததன் விளைவு பாராயண நிறைவு திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்பாள் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி குறித்து கோவையைச் சேர்ந்த மேனகாதேவி கங்காதரன், சென்னையைச் சேர்ந்த உமா பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:

''உலக இயக்கத்தை நிறுத்தியது கரோனா காலம். அப்போது, உலக மக்களின் நன்மைக்காக, பல்வேறு தரப்பு மக்களும் தங்களுக்குத் தோன்றியதைச் செய்தனர். நாங்களும் ஏதாவது செய்யத் தீர்மானித்தோம்.

2020 ஜனவரி 21-ஆம் தேதி தை அமாவாசையன்று 'அபிராமி அந்தாதி' பாடலை ஒரு கோடி முறை ஆன்லைனில் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை கல்வியாளர் சுதா சேஷய்யன் தொடக்கிவைத்தார்.

நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, அபுதாபி, துபை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் பக்தர்கள் இணைந்தனர். இந்த வட்டம் விரிவடைந்து கொண்டே சென்றது. ஊர்

கூடித் தேர் இழுத்ததன் பயனாக இறுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் இணைந்தனர். தினமும் காலை 8.30 மணிக்குத் தொடங்கும் பாராயணம் இரவு வரை நீடித்தது. இதுதவிரத் தங்களால் இயன்றவரை சிலர் பாராயணம் செய்தனர்.

தினமும் ஒவ்வொருவரும் பாராயணம் செய்வது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. ஒவ்வொருவரும் எவ்வளவு நேரம் முடியுமோ அதைச் செய்தோம். ஓய்வு தேவைப்படும் நேரத்தில் அடுத்த குழு பாராயணத்தைத் தொடர்ந்தது. இப்படியே 30 மணி நேரம் தொடர்ந்து பாராயணம் செய்தோம்.

அதன்பின் சிறிது காலம் கழித்து 32 மணி நேரம், 34 மணி நேரம் என அதிகரித்து 39 மணி நேரம் வரை தொடர்ந்து பாராயணம் செய்தோம்.

சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் 29-இல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஒரு கோடி முறை பாராயணம் செய்ததன் நிறைவு விழா நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்காக திருப்பூரைச் சேர்ந்த கே.வி.எஸ்.வெங்கடாசலம்-நிர்மலா குடும்பத்தினர் திருக்கடையூர் அபிராமி அம்பாளுக்கு நல்முத்துகளால் செய்யப்பட்ட முத்தங்கி, காசுமாலை, திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினர். இவை தருமபுரம் ஆதீனம் சிறிலசிறி மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்று அம்பாளுக்கு சாத்தப்பட்டது'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com