மத நல்லிணக்கமே நாட்டை முன்னேறச் செய்யும்'' என்கிறார் ஸ்வாதி ஆத்மநாதன்.
பரநாட்டியம், கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு ஆகிய இரண்டிலும் வல்லவரான இவர், பல நிகழ்ச்சிகளையும் சங்கீதக் கச்சேரிகளையும் செய்திருக்கிறார். யோகா கலையில் வல்லவரான இவர், அக்கலையையும் பயிற்றுவித்து வருகிறார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், மகாகவி பாரதியாரின் வாரிசும் கூட! அவரிடம் பேசியபோது:
'வாரணாசியில் ஒரு சிறிய சந்துக்குள் பாரதியார் வாழ்ந்த இல்லம் இருக்கிறது. வீடு பெரிய வீடு. பாரதியார் மார்பளவுச் சிலையை இல்லத்தின் முன் காணலாம். இந்த இல்லத்தில் தன் தங்கை லட்சுமியுடன் பாரதியின் மாணவர் பருவம் கழிந்தது. லட்சுமியின் பேத்திதான் நான்.
பாரதியார் தனது வாழ்நாளில் தன் கவிதைகள் அதிகமான வாசகர்களைச் சென்றடையவில்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால் இன்றோ ஒவ்வொரு தமிழர்களின் கைகளிலும் "பாரதியார் கவிதைகள்' நூல்கள் தவழ்கின்றன.
"காணிநிலம் வேண்டும் பராசக்தி' என்று அன்னையிடம் வேண்டுகோள் விடுத்தார் பாரதியார். சுதந்திர இந்தியாவில் பாரதியாரின் மனைவி செல்லம்மாவுக்கு தமிழ்நாடு அரசு காணி நிலம் வழங்கிக் கௌரவித்தது.
சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த இல்லம் தனியார் வசம் இருந்தது. இப்போது அது "பாரதியார் நினைவு இல்லம்' என்று அரசுடைமையாகிவிட்டது என்பதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சிதான்.
பாரதியாரை நேரில் காணும் பாக்கியம் எனக்கு இல்லை. ஆனால், "கப்பலோட்டிய தமிழன்' படத்தில் மகாகவியாக மகா நடிகர் எஸ்.வி.சுப்பையா நடித்தபோது, பாரதியாரை நேரில் பார்த்த ஈர்ப்பு இருந்தது. உடலும் சிலிர்த்தது.
எனது 12-ஆம் வயதில் இருந்து மகாகவியின் கவிதைகளைப் பொருள் உணர்ந்து படித்து அனுபவித்தேன். பாரதியார் என் உயிரில், உதிரத்தில் கலந்தார்.
"மகாகவியின் மார்க்கம்' என்ற நடன நிகழ்ச்சியை சில மாதங்களாக நடத்தி வருகிறேன். புதிய ஆத்திச்சூடியில் கடவுள் வணக்கப் பாடலாக, "ஆத்திச்சூடி இளம்பிறை அணிந்து / மோனத்திருக்கும் முழு வெண் மேனியான் /
கருநிறங் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன் / மகமது நபிக்கு மறை அருள் புரிந்தோன் / ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்' என்று ஆரம்பித்து எல்லா மதங்களும் சுட்டும் இறைவன் ஒன்றே என்று முரசறைந்து இருப்பார். என் நடன நிகழ்ச்சிகளில் முதல் பாடல் இதுதான்.
தேச விடுதலை, பெண் விடுதலை பற்றிய பாடல்களும் இடம்பெறும். நாட்டின் மத நல்லிணக்கமே நாட்டை முன்னேறச் செய்யும்'' என்கிறார் ஸ்வாதி ஆத்மநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.