கர்நாடகத்தில் "ஸ்லோகா' எனும் பெயரில் புதியதாக சம்ஸ்கிருத மொழியில் திரைப்படம் தயாராகிறது.
இந்தப் படத்தை திரைக்கதை எழுதி, இசை அமைத்து இயக்கும் ஜனார்த்தன மகரிஷி கூறியது:
'சம்ஸ்கிருதம் படித்துள்ளேன். சம்ஸ்கிருதப் படங்களை உலகப் புகழ் பெறும்படியாகத் தயாரிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். எனது தெலுங்குப் பட அனுபவம் "ஸ்லோகா' படத் தயாரிப்புக்கு உதவுகிறது. நாயகியாக நடிப்பவர் ராகினி திவேதி. இயற்கையை வெகுவாக நேசிக்கும் இளம் பெண்ணாக ராகினி வருகிறார்.
எனது மகள்களே படத்தைத் தயாரிக்கின்றனர். படம் இந்த ஆண்டு வெளியாகும்'' என்கிறார் ஜனார்த்தன மகரிஷி.
கர்நாடகத் திரைத் துறை வட்டாரங்கள் கூறியது:
'தமிழ்நாட்டில் தமிழிலும், கேரளத்தில் மலையாளத்திலும், ஆந்திரம், தெலங்கானாவில் தெலுங்கிலும், கர்நாடகத்தில் கன்னடத்திலும், ஒடிஸாவில் ஓடியாவிலும், மேற்கு வங்கத்தில் வங்க மொழியிலும், குஜராத்தில் குஜராத்திய மொழியிலும், மஹாராஷ்டிராவில் மராத்தியிலும், பாலிவுட்டில் ஹிந்திப் படங்களும் தயாராகின்றன.
கர்நாடகத்தில் சம்ஸ்கிருத மொழித் திரைப்படங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. கேரளத்தில் நான்கு சம்ஸ்கிருதத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவரை 17 சம்ஸ்கிருதத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் தியேட்டர்களில் வெளியானவை 16. ஒ.டி.டி.யில் வெளியானது ஒன்று. சிறார்களுக்கான படம் ஒன்று அனிமேஷன் படமாகத் தயாரானது.
முதல் சம்ஸ்கிருதத் திரைப்படம் 1983-இல் ஜி. வி. ஐயர் இயக்கிய ‘ஆதி சங்கராச்சாரியார்' ஆகும். இந்த திரைப்படம் 31-வது தேசிய விருதுகளில் திரைக்கதை, திரைப்படம், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு ஆகிய நான்கு பிரிவுகளில் சிறந்தப் படம் என விருதுகளை வென்றது.
இரண்டாவது திரைப்படம் 1992-இல் ஜி. வி. ஐயர் இயக்கிய "பகவத் கீதை' யும் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது.
மூன்றாவது படமான "பிரியமனாசம்' 22 ஆண்டுகள் இடைவெளிவிட்டு 2015-இல் வெளியானது. 2015 - 2017 காலகட்டத்தில் அடுத்தடுத்து 4 சம்ஸ்கிருதப் படங்கள் கேரளத்தில் தயாராயின. இந்தப் படங்கள் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டன'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.