பிறந்த நாளுக்கு ஓவியம் பரிசு..!

போட்ரெஸ்ட் வண்ணம் வரையும் ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஓவிய ஆசிரியர் தமிழேந்தி, தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பிறந்த நாளன்று அவர்களின் விருப்பப்படி, முகங்களை வரைந்து ஓவியத்தைப் பரிசாக வழங்குகிறார்.
ஓவியம்
ஓவியம்
Published on
Updated on
2 min read

போட்ரெஸ்ட் (முகங்கள்) வண்ணம் வரையும் ஓவியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஓவிய ஆசிரியர் தமிழேந்தி, தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பிறந்த நாளன்று அவர்களின் விருப்பப்படி, முகங்களை வரைந்து ஓவியத்தைப் பரிசாக வழங்குகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அவர், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'எனது தந்தை அ.மோகனம் ஓவிய ஆசிரியராக இருந்தார். பின்னர், அவர் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனது தாய் தனபாக்கியம் குடும்பத் தலைவி.

வங்கனூர் கிராமத்திலேயே பள்ளிக்கல்வியை முடித்தேன். எனது தந்தை ஓவியங்களை வரையும்போதெல்லாம் அருகே அமர்ந்து பார்ப்பேன். பள்ளிப் பருவத்திலேயே உருவ ஓவியங்களை வரைந்தேன்.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, பஞ்சாயத்து டி.வி.யில் "சித்திரப்பாவை' என்கின்ற தொடர் நாடகம் பார்க்கும்போது, ஆள்களை அமரச் செய்து மாடலாக வரைவதை அறிந்தேன். இந்த நாடகம் பாடமாக்கப்பட்டுள்ள சென்னை ஓவிய நுண் கலைக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து, அங்கு சேர்ந்தேன்.

ஓவிய நுண் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது, "பல்லாண்டு வாழ்க' திரைப்படம் எடுத்த மணியன் நடத்தி வந்த "இதயம் பேசுகிறது' இதழில் சிறுகதைகளுக்கான படங்கள் வரையும் வாய்ப்பு கிடைத்தது. இதைப் பாராட்டிய மணியன், "சங்கர விஜயம்' என்ற நெடுந்தொடருக்கு படங்கள் வரைய வாய்ப்புகளைக் கொடுத்தார். "ஞானபூமி' இதழிலும் வரைவதற்கான வாய்ப்புகளையும் அவரே தந்தார்.

ஓவிய ஆசிரியராகப் பணியில்
ஓவிய ஆசிரியராகப் பணியில்

மாலை நேரத்தில் வேலை பார்த்தே, படித்தேன். பின்னர், பல்வேறு நிறுவனங்களிலும், திரைப்படங்களிலும் கார்ட்டூன் டிசைனராக பணியாற்றினேன். அப்போது, பிளக்ஸ் பேனர்களின் வருகையினால் வேலை குறைந்தது.

இதன்காரணமாக, திருநின்றவூரில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தாசர் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர், தமிழ்நாடு அரசின் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.

வகுப்பறைகளில் மாணவர்களிடம் ஓவியம் வரைந்து காண்பித்து, அவர்களையும் வரையச் செய்து பயிற்சி அளிக்கிறேன். பள்ளியின் சுவர்கள், வகுப்புகள் என அனைத்தும் ஓவியங்களாலே அலங்கரித்துள்ளேன்.

தலைவர்கள் பிறந்த தினம், நினைவு தினங்களின்போது, அவர்களது வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை வரைந்து தலைவர்களின் பெருமையை மாணவர்களுக்கு விளக்குகிறேன்.

நான் வரைந்த படங்களில் இருந்து கேள்விகள் கேட்டு அதில் என்ன சேர்க்கலாம் என மாணவர்களிடம் கேட்டு வரையும்போது அனைத்து மாணவர்களிடம் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு, பள்ளியின் நுழைவு வாயிலில் காட்டு யானையின் படம் வரையவைத்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தினேன்.

மாணவர்களுக்கு பாடம் கசந்தாலும், படங்கள் இனிக்கிறது. எந்த விஷயமானாலும் படங்களை வரைந்து சொல்லும்போது, மாணவர்களின் மனதில் எளிதில் பதிந்து விடுகிறது. இதனால் எனது வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு ஓரே கலகலப்பு.

நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், பாரம்பரிய ஓவியங்களைக் கையால் வரையும் கலையை மாணவர்களிடம் கற்பிக்க வேண்டும். அழிந்து வரும் கலையைப் பாதுகாக்க வேண்டும். அதன் முக்கியத்துவத்தை அறியும் வகையில் அரசும் ஊக்கம் அளிக்க வேண்டும்'' என்கிறார் தமிழேந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com