எதார்த்தங்களிலிருந்து பிரிக்க முடியாத கதை!

அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும்.
எதார்த்தங்களிலிருந்து பிரிக்க முடியாத கதை!
Published on
Updated on
3 min read

அரசியலை விட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது.

அதே நேரத்தில் இப்போது எது தேவையோ, அதை அக்கறையாக முன் வைக்கிற படம். படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடித்து பரபர வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குநர் வாலி மோகன் தாஸ். "ரங்கோலி' படம் தந்து அறிமுகமானவர். இப்போது "மெட்ராஸ்காரன்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

மெட்ராஸ்காரன்... எப்படி கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது..

இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் சந்தித்த சில மனிதர்களின் வாழ்க்கைதான் இது. ஒருத்தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்தக் கதை. அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது...

நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.

எந்த மாதிரியான திரைப் பாணி வடிவம்...

மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தை கொண்டே இதை எழுதியிருக்கிறேன்.

மனிதர்களுக்கு சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்தச் சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் சிறுபான்மை என ஜாதிகளின் அடுக்குகளைக் கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை.

சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம்,

துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா.

கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை.

ஹீரோயின் தேடலுக்குதான் கேரளம் போவார்கள்... இந்த முறை கேரள ஹீரோவை அழைத்து வந்திருக்கிறீர்கள்...

"மெட்ராஸ்காரன்' கதைக்கு ஒரு புதுமுகம்தான் தேவை. ஆனால், அப்படி செய்யும் போது வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரும். ஏனென்றால், நான் ஏற்கெனவே புதுமுகங்களை வைத்து எடுத்த "ரங்கோலி' படத்தின் வியாபாரத்தில் ரொம்பவே சிரமப்பட்டோம்.

அதனால் அதையும் மனதில் வைத்து சு முடிவு எடுக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப் படத்தின் கதையை நான் முன்னாடியே எழுதி விட்டேன். அப்போது இந்தக் கதையை எழுதும்போதே ஷேன் நிகமை மைன்ட்ல வைத்துதான் எழுதினேன். ஷேன் நிகமை அவரின் கேரியர் ஆரம்பத்தில் இருந்து பார்த்துக்கொண்டு வருகிறேன். ரொம்ப எதார்த்தமாக நடிக்கக்கூடியவர்.

அதனால் அவரை மைன்ட்ல வைத்து எழுதினேன். இப்போது "மெட்ராஸ்காரன்' கதையை படமாக்கலாம் என்று முடிவு பண்ண சமயம்தான் அவரோட ஆர்டி எக்ஸ் படம் வெளியாகி ஹிட் ஆகி இருந்தது. நான் நினைத்த மாதிரி இந்தக் கதைக்கு ஏற்ற, தமிழுக்கு ஃப்ரஷ்ஷான முகமாகவும் இருந்தார். மலையாளத்தில் நல்ல படங்களைக் கொடுத்த நடிகராக இருப்பதால் வியாபாரத்திற்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும் என்று தோன்றியது.

அதனால் அவரை ரீச் பண்ணி, கதையும் சொன்னேன். முழுக்கதையும் தமிழில் தான் சொன்னேன். கேட்டுட்டு உடனே ஓகே சொல்லவில்லை. மூன்று வாரங்கள் கழிச்சு மறுபடியும் கூப்பிட்டு கதை சொல்ல சொன்னார். அந்த மொமன்ட்ல இருந்து இந்தப் படத்தை அவர் படமா நினைக்க ஆரம்பிச்சிட்டார். அவரே நிறைய ஐடியா கொடுக்க ஆரம்பித்து விட்டார்ர். இப்போது வரைக்கும் ஆர்வமாக இருக்கிறார்.

அவருக்கு தமிழில் இது முதல் படம்.... என்ன மாதிரியான எதிர்பார்ப்பில் இருக்கிறார்...

"இது நம்முடைய முதல் தமிழ்ப்படம். நமக்கு இது சரியா வருமா என்கிற யோசனை எல்லாம் அவருக்கு இருக்கிற மாதிரியே தெரியவில்லை. நாங்க இருவரும் தமிழில் தான் பேசிப்போம். அவருக்கு ரொம்ப நல்லாவே தமிழ் தெரிந்திருக்கிறது. படத்தின் டைட்டில் "மெட்ராஸ்காரன்' என்று இருப்பதால் இதில் அவர் மெட்ராஸ் ஸ்லாங் பேசுகிற மாதிரி இருக்கும் என்று நினைக்காதீர்கள்.

சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எல்லாரும் லீவுக்கு அவங்கவங்க ஊருக்கு போகும் போதும் அவங்களை "மெட்ராஸ்காரன்' என்று சொல்வதுண்டு. அந்த மாதிரி சென்னைக்கு வந்த ஊர்க்கார பையன் தான் ஷேன் நிகாம். இந்தக் கதை சென்னையில 10 சதவிகிதம் தான் நடக்கும். மத்தப்படி மதுரை, புதுக்கோட்டையில் நடக்குற கதை. அதுனால அவர் நார்மல் தமிழ் பேசுனாலே அது கதைக்கு சரியாக இருக்கும்."

படத்தில் கலையரசனும் இருக்காரே....

ஷேன் நிகம், கலையரசன் ரெண்டு பேருமே கதையின் நாயகர்கள்தான். இந்த இரண்டு பேருக்குள்ள இருக்கிற ஒரு சின்ன ஈகோ, இவர்களின் வாழ்க்கையை எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தோட ஒன் லைன். இதில் இவர் நல்லவர்; இவர் கெட்டவர் என்று பிரிக்க முடியாது. ரெண்டு பேருமே நல்லவர்கள்; ரெண்டு பேருமே கெட்டவர்கள். இவர்களின் உலகத்துக்குள்ளே தான் இந்தப் படம் பயணிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com