
பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108-ஆவது பிறந்த தினம் கடந்த செப். 11-இல் கொண்டாடப்பட்டது.
அதையொட்டி, அவரது இசை வாழ்க்கைக்கு உயிரூட்டும் வகையில் அவரது வாழ்க்கையை 'காற்றினிலே வரும் கீதம்'' என்ற மேடை நாடகமாக வழங்கியிருக்கின்றனர் லாவண்யா வேணுகோபால், எம்.வி.பாஸ்கர் நடத்திவரும் ஸ்ரீ நாடகக் குழுவினர். இவர்கள் இருவரும் எம்.எஸ். சுப்புலட்சுமி, அவருடைய கணவர் சதாசிவம் பாத்திரங்களில் மிக நேர்த்தியாக நடித்திருக்கின்றனர்.
ரசிகர்கள் மத்தியில் அபாரமான வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், லாவண்யா வேணுகோபாலிடம் பேசியபோது:
'எம்.எஸ். என்றால் மகத்தான சங்கீதம், மகோன்னத சங்கீதம், மயக்கும் சங்கீதம், மறக்க முடியாத சங்கீதம், மனசாந்தி தரும் சங்கீதம் என்றெல்லாம் சொல்லலாம்.
அவர் மீது எனக்கு என்றைக்குமே ஒரு பிரமிப்பும், ஈர்ப்பும் உண்டு. அப்படிப்பட்ட ஓர் இசை உலக ஆளுமையின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள்தான் எத்தனையோ? அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, வெற்றி பெற்றது அரும்பெரும் சாதனை. அவரது வாழ்க்கையை மேடையிலே நாடகமாக வழங்குவது எனது பாக்கியம்.
எம்.எஸ்.அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை "காற்றினிலே வரும் கீதம்'' என்ற தலைப்பில் நூலாக மூத்த பத்திரிகையாளர் வி.எஸ்.வி. ரமணன் எழுதியிருப்பதை அறிந்து, அதனை நாடகமாக மேடை ஏற்றும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அடுத்ததாக என் நினைவுக்கு வந்தவர் பாம்பே ஞானம் மேடம்தான். சங்கராச்சாரியார், பரமஹம்சர் என்று பல மகான்களது வாழ்க்கை வரலாறுகளை, பக்திப்பூர்வமாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் மேடை நாடகங்களாக வழங்கிய அனுபவசாலி. அவரிடம் நூலைக் கொடுத்து, திரைக்கதையை எழுதி, இயக்கும்படியும் கேட்டுக் கொண்டேன்.
சந்தோஷமாகச் சம்மதித்தார்.
எம்.எஸ்.அம்மாவின் நீண்ட, நெடிய திரையுலக, இசையுலக வாழ்க்கையை இரண்டரை மணி நேரத்துக்குள் ஒரு நாடகமாக உருவாக்குவது என்பது மிகவும் சவாலான பணிதான். ஆனால். விறுவிறுப்பான சம்பவங்கள் மூலமாக
கச்சிதமான முறையில் அவர் அதனைச் செய்து கொடுத்துவிட்டார். நாடகத்தில் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, ராஜாஜி, கல்கி உள்ளிட்ட ஐம்பது கதாபாத்திரங்களில் நாற்பது பேர் நடித்திருக்கின்றனர். சில கதாபாத்திரங்கள், ஓரிரு காட்சிகளில் மட்டுமே வரவேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு ஒரு சிலரே பல பாத்திரங்களாகவும் நடித்துள்ளனர்.
சதாசிவம் பாத்திரத்தைப் பொறுத்தவரை இளைஞராக ஒருவரும், முதிய வயதுக்கு ஒருவரும் என இரண்டு பேர் நடித்திருக்கின்றனர். எம்.எஸ். அம்மா பாத்திரத்தைப் பொறுத்தவரை சிறுமியாகவும், பதின்ம வயதுப் பெண்ணாகவும் இருவர் நடித்துள்ளனர். அதன் பின்னரே நான் எம்.எஸ்.அம்மாவாகத் தோன்றுகிறேன்.
இந்த நாடகத்தில் நடித்திருப்பவர்கள் சிலருக்கு இதுதான் முதல் மேடை அறிமுகம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தேடித் தேடி நபர்களைக் கண்டுபிடித்து நடிக்க வைத்திருக்கிறோம். இசை மேதை தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் பேரன் தட்சிண்தான் இசைப் பணிகளைச் செய்திருக்கிறார். இளம்வயதில் அவரது அசாத்தியத் திறமை வியக்கவைக்கிறது.
சிறு வயது எம்.எஸ். அம்மா பாடும் பாடல்களைப் பாடியிருக்கும் ஓசூரைச் சேர்ந்த மஹன்யஸ்ரீயை, "குரல் பொருத்தம் பிரமாதம்' என அனைவரும் பாராட்டுகின்றனர். எம்.எஸ்.அம்மாவின் மற்ற பாடல்களை மூத்த கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி வேங்கடராகவன் பாடி அசத்தி இருக்கிறார்.
இசை அரசியின் வாழ்க்கை கதை என்பதால், இசை விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தினோம். எங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.
நாடகத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் தான் எத்தனை காட்சிகளில் வருகிறோம், எவ்வளவு வசனம் பேசுகிறோம் என்றெல்லாம் பார்க்காமல், தங்கள் பாத்திரத்தின் தன்மையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, அற்புதமாக நடித்திருக்கின்றனர். நாடக ஒத்திகை நான்கு மாதங்களுக்கு நடந்தது. அரங்கேற்றத்துக்கு முன்பாக தொடர்ந்து 16 தடவைகள் முழுமையாக ஒத்திகை பார்த்திருக்கிறோம். அனைவரும் முழுமையாக ஒத்துழைத்தனர்.
வழக்கமான நாடகங்கள் போல காட்சிகளுக்கு ஏற்ப சீன் செட்டுகளை மாற்றுவதற்குப் பதிலாக, மேடையில் ஒளி அமைப்பின் மூலமாக காட்சிகள் மாறும்படியாக வடிவமைத்திருப்பதும் ஒரு புதிய முயற்சிதான். கதாபாத்திரங்
களுக்கு ஏற்ப பல தரப்பட்ட வயதுடையவர்கள் நடிக்கின்றனர். எப்படியும் பாடல்களை ஒலிப்பதிவு செய்தாக வேண்டும். அதைவிட, பர்ஃபெக்ஷனாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வசனங்கள், பாடல்கள், பின்னணி இசை என அனைத்தையும் குரல் கலைஞர்கள், இசைக் கலைஞர்களைக் கொண்டு ஒலிப்பதிவுக் கூடத்திலேயே பதிவு செய்து, மேடையில் பயன்படுத்தி இருக்கிறோம். இதனால் எந்த ஒரு இடத்திலும் சிறு தவறோ, தடுமாற்றமோ இல்லாமல் நாடகம் நகர்கிறது.
எம்.எஸ்.அம்மா தெய்வீகப் பிறவி என்பதால், அவரைப் போன்ற மனிதர்களைப் பார்ப்பது மிக அபூர்வம். அவர் பங்கேற்ற கச்சேரிகளின் விடியோக்களைப் பார்த்தேன்.
அவருடைய புகைப்படங்களில் அவரது முகபாவனைகள், புன்சிரிப்பு போன்ற அம்சங்களை உன்னிப்பாகக் கவனித்தேன். ஸ்கிரிப்ட்டை அமைதியாக, ஆழமாகப் படித்து, அப்படியே உள்வாங்கிக் கொண்டேன். இதற்கு முன்பாக, பரமாச்சாரியார் குறித்த நாடகத்தில் பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியமாக நான் நடித்த அனுபவமும் எனக்குக் கைகொடுத்தது. எனது அந்த நடிப்பை பத்மா சுப்ரமணியமே பாராட்டினார்.
மதுரையில் எளிய குடும்பத்தில் பிறந்து பல சோதனைகளைச் சந்தித்து, சாதனைகளைப் புரிந்து அமெரிக்காவில் ஐ.நா.சபை வரை சென்று பாடிய சாதனைப் பெண்மணி. ஆனால் தனக்கும், அந்தப் பேர், புகழுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பது போல எளிமையே உருவாக வாழ்ந்த அதிசயமான ஆத்மா. "மீரா' படம் வெளியானபோது அவர் அகில இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக இருந்தார். ஆனால், அந்தத் தருணத்தில் சினிமாவைவிட்டு விலகி,
தன் பாதை கர்நாடக இசைதான் என தீர்மானித்த இசைவாணி அவர். "குறை ஒன்றுமில்லை' என்று அவர் வாயால் பாடியதுடன் நிற்கவில்லை. யாரிடமும் எந்தக் குறையும் காணாத அபூர்வ குணம் கொண்டவர். தன் மீதான விமர்சனங்களுக்குக் கூட அவர் பதிலேதும் சொன்னதில்லை. இந்தப் பூமி உள்ளவரை அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அத்தகைய ஒரு தெய்வப் பிறவியின் கதாபாத்திரமாக மேடையில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது பிறவிப் பயன்'' என்கிறார் லாவண்யா வேணுகோபால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.