ஏழாவது வயதிலேயே ஆன்மிகச் சொற்பொழிவாற்றுகிறார் சென்னை கிருகம்பாக்கத்தைச் சேர்ந்த வைபவ் மகேஷ். மகேஷ் சுப்பிரமணியன்-பரணி தம்பதியின் மகனான இவர், பி.எஸ்.பி.பி. மில்லெனியம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் அண்மையில் சொற்பொழிவு செய்த வைபவ் மகேஷை பாராட்டிய காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், 'ஆன்மிகத்தை அற்புதமாகச் சொல்கிறாய். எனது ஆசிகள். இது மட்டும் போதாது. இன்னும் நிறைய கற்று சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து வைபவ் மகேஷின் தந்தை மகேஷ் சுப்பிரமணியனிடம் பேசியபோது:
'ஒரு வயது இருக்கும்போதே வைபவ் மகேஷ் சொந்தமாகக் கதைகள் சொல்ல ஆரம்பித்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அந்த வயதிலேயே இவனது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவனது தாயார் பரணி, ஆன்மிகக் கருத்துகளையும், பாடல்களையும் சொல்லித் தந்தார்.இதை கேட்கும் வைபவ் மகேஷ் அதை அப்படியே,அப்போதே அவனது பாணியில் சொன்னது எங்களுக்கு மேலும் வியப்பாக இருந்தது. இது அன்னை சரஸ்வதியின் அருளின்றி வேறில்லை என்பதை உணர்ந்தோம். தொடர்ந்து இந்த ஆர்வத்தை வளர்க்கத் தொடங்கினோம்.
எந்த ஆன்மிகக் கதையையும் முதலில் என்னிடம் தான் சொல்லுவார். நான் தான் முதல் ரசிகன். என்னிடம் முன்ஒத்திகை பார்த்து விட்டுத் தான் மேடை ஏறுவார். நான் முதல் முதலாக ரசிகனாக இருந்தாலும் அவனது தாயார் பரணியே குருநாதர். எந்த மேடையிலும் மகனுடன் அருகில் இருந்து வைபவ் பாடல்களைப் பாடப்பாட தாயாரும் உடன் சேர்ந்து பின்னணிப்பாட்டாக வாய்ப்பாட்டு பாடுவார். உடன் நண்பர் உமாசங்கரின் மிருதங்க வாசிப்பும் இணைந்து கொண்டு மூவருமாக பார்வையாளர்களைப் பாடல்களாலும், இசையாலும் பரவசப்படுத்துவார்கள்.
கோதை ஆண்டாளான கதை, மாயக்கண்ணன், மீனாட்சி திருக்கல்யாணம், ஞானப்பழம், கருணையின் வடிவம் கந்தன், சர்வம் சக்தி மயம், ஸ்ரீராமருக்கு உதவிய அணில், பாண்டுரங்கனின் பாசம் என்ற எட்டு விஷயங்களை கற்று ஆன்மிகச் சொற்பொழிவுகளைச் செய்து
வருகிறார். மழலைமொழிக் கதையும்,இசையும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும்.
சென்னை மியூசிக் அகாதெமி,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், சங்கர மடம்,திருமலை திருப்பதி தேவஸ்தானம், மயிலாப்பூர் பாரதீய வித்யா பவன்,தஞ்சை பெரிய கோயில்,திருச்சி செல்வ விநாயகர் கோயில்,காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி,திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் "கலை இளமணி' என்ற விருது, சென்னை மாம்பலம் ரோட்டரி சங்கம் சார்பில் "இளம் சாதனையாளர் விருது' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
.வைபவ் மகேஷின் மழலை மொழிக்கு மயங்கி வரும் கைதட்டல்கள் தான் அவனது மேடை நிகழ்ச்சிகள் தொடரக் காரணம். பள்ளிப்படிப்பு படிக்காதவாறு கோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்து பக்தி நெறியை பரப்புவார்'' என்கிறார் மகேஷ் சுப்பிரமணியன்.