வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா!

வாழ்வதற்கு எந்தத் தத்துவமும் தேவையில்லை. ஆழ்ந்து பார்த்தால் இதுதான் வாழ்க்கையின் தத்துவம்.
வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா!
Published on
Updated on
2 min read

வாழ்வதற்கு எந்தத் தத்துவமும் தேவையில்லை. ஆழ்ந்து பார்த்தால் இதுதான் வாழ்க்கையின் தத்துவம். எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலை சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக் கொண்டவர்களின் மூளைகள்தான்.

அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல் அறிவு தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை. அப்படி தங்களது தேவை

களுக்காக அறிவோடு ஆயுதங்களையும் பயன்படுத்தும் சிலரின் கதைகள்தான் படம். அவரவர் செயல்கள்தான், அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது என இந்தக் கதையை இப்படியும் சொல்லி விட்டுப் போகலாம்.

ஆழமாக பேசத் தொடங்குகிறார் அறிமுக இயக்குநர் தினேஷா ரவிச்சந்திரன். "அம்புலி', "ஒர் இரவு' உள்ளிட்ட படங்களை தந்த இரட்டை இயக்குநர்களான ஹரி -ஹரீஸ் ஆகியோரின் உதவியாளர். தற்போது "ரத்தமாரே' படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் பூனுகிறார்.

"ரத்தமாரே'...தலைப்பு எதன் குறியீடாக கதைக்குள் இருக்கும்....

எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை.அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து கதையைப் பிரிக்கவே முடியாது. கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் இப்படியொரு தலைப்பு.

ரத்தமாரே என்பது நாம் எல்லோருமே ஒரு விதத்தில் உறவுகள் என்பதன் அடிப்படைதான். ஆதாம் - ஏவாள் என்பது உண்மையானால் நாம் எல்லோருமே இங்கே உறவுகள்தான். இதுதான் இந்தக் கதையின் அடிப்படை. அதை எல்லோரும் உணரும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறேன். சொல்லப் போனால் உண்மையை கண்டால் பலரும் ஓடி ஒளிகிறோம். ஆனால் விசாரணை என வருகிற போது, எல்லாம் சவால்தான்.

என்னைக் கேட்டால் உண்மையை நேருக்கு நேர் நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு வருகிறது. அதை மூன்று கதைகளாகப் பரபரப்பாகி கொடுத்திருக்கிறேன்.

மூன்றும் வெவ்வேறு கதைகளா...

அச்சம், மடம், பயிர்ப்பு... இந்த மூன்று தலைப்புகளின் கதை உருவாகி வளரும். முதல் கதையின் திருநங்கை ஒருவரின் வாழ்க்கையை பேசியிருக்கிறேன். அவர்களின் வலியை, சமுதாய நெருக்கடிகளை இந்தக் கதை பேசும்.

வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்களுக்கு ஒரு பிரச்னை. அதன் தீர்வும், அதற்கான நிகழ்வுகளும்தான் கதை. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஒரு எளிய வாழ்க்கைதான் கதை இது. அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை அபத்தங்களையும் அடிச்சு நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற கதை.

இரண்டாவது கதையில் அப்பா - மகள் இருவருக்குமான உரையாடலை கதையாக்கியிருக்கிறேன். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் குழந்தைகளின் கோபத்தை சுமந்து கொண்டுதான் நிற்கின்றன.

இதை விட ஒரு கொடுமை.... ஒரு தகப்பனாக எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வைத்த சட்ட திட்டங்கள் தீர்மானிப்பதுதான். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறைய டீன் ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். மூன்றாவது கதையில் சுயசாதி பெருமை பேசும் இளைஞர்களை படம் பிடித்திருக்கிறேன்.

எத்தனையோ நாகரீக மாற்றங்கள். தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நாம், ஆவணக் கொலைகளை பற்றிய செய்திகளையும் படித்து வருகிறோம். அதை அடித்து நொறுக்குகிற மாதிரி இந்தக் கதை இருக்கும். மூன்று கதைகளும் தனித்தனியாக தெரியலாம். ஆனால் எங்கோ ஒரிடத்தில் அர்த்தப்பட்டு நிற்கும்.

முதல் படம் ஆசிட் டெஸ்ட் மாதிரி... இவ்வளவு அழுத்தம் தேவையா...

இந்த உலகம்... ஒரு மாயமான். கனவுக்கும் எதார்த்தத்துக்குமான பயணம். நான் இந்தச் சாலையில் பார்க்கிற மனிதர்கள், குழந்தைகள், பெண்கள் எல்லோரும் என் கதை வழியாக உங்களை வந்து சேருகிறார்கள். நான் கதைக்காக வேற்று கிரகம் போகவில்லை. இதோ இப்போது பேசும் போது கூட உங்களிடம் ஒரு விஷயம் தட்டுப்படுகிறது. அது என் கதை வழியாக உங்களின் பார்வைக்கே வரலாம்.

அது இல்லாமல், ஒரு படம் அந்த மொழி சார்ந்தவர்களை கவர வேண்டும். அப்படித்தான் என் அடுத்தடுத்த படங்கள் வரும். இந்தப் படம் கூட ஒரு கனவுதான். அந்த கனவில் இருந்து பிடித்த லைன்தான். ஒரு படம் என்பது ஒரு விளக்கு போல. மழை, புயல், வெள்ளம் என எது வந்தாலும், அதை அப்படியே பொத்தி பாதுகாத்து ரசிகனிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படித்தான் நான் இந்தப் படத்தைப் பார்க்கிறேன். வாழ்க்கை இங்கே மிகவும் எளிமையானது. ஆனால், பயங்கரமானது இதுதான் இந்தப் படம்.

நடிகர்களின் ஒத்துழைப்பு...

ஓரளவுக்கு எல்லோருமே தெரிந்தவர்கள்தான். பெரிய ஹிட் இல்லை. அதுதான் வருத்தம். லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி... இப்படி பல பேர் இப்படி எல்லோருமே ஒரளவுக்கு அறிமுகமானவர்கள்தான். அனைவரின் பங்கும் இதில் கை சேர்ந்ததில் மகிழ்ச்சி. வையாபுரியின் நடிப்பு இதில் அந்தளவுக்கு கரை சேர்ந்திருக்கிறது. விபின் இசைக்கு பொறுப்பு. சந்தோஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவில் இந்த வாழ்க்கையின் மறுபக்கம் உங்களுக்கு தெரியவரும். லட்சக்கணக்கான மக்களைச்சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.