புதிய சிந்தனை; புதிய வடிவம்...

திருக்குறளைச் சார்ந்து வந்திருக்கும் நூல்களில் முற்றிலும் மாறுபட்டதே திருக்குறள் களஞ்சியம்.
திருக்குறள் களஞ்சியம்
திருக்குறள் களஞ்சியம்
Published on
Updated on
3 min read

திருக்குறளைச் சார்ந்து வந்திருக்கும் நூல்களில் முற்றிலும் மாறுபட்டதே 'திருக்குறள் களஞ்சியம்'. ஒரே நூலுக்குள் பல அறிஞர்களின் கருத்துகளைக் கொண்டு பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. தனித்துவம் மிக்கதாக, இதுவரையில் எவருடைய பார்வையிலும் புலப்படாத ஒரு தகவலை சுமந்து கொண்டிருப்பதாக, புதிய சிந்தனையாக, புதிய வடிவமாக இருக்கிறது. திருக்குறளின் மகுடத்தில் ஒளிவிடும் ரத்தினமாக உருவாக்கம் செய்துள்ளதே எனக்குப் பெருமை. 133 ஆய்வறிஞர்களுக்கும் பெருமை. திருக்குறள் பற்றி பேசப்படும் இடத்தில் எல்லாம் இனி திருக்குறள் களஞ்சியம் இருக்கும்'' என்கிறார் சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் பாவரசு பாரதி சுகுமாரன்.

சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் செப். 15-இல் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், 133 அதிகாரங்களை மையப்படுத்தி 133 ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளை அறம், பொருள், இன்பம் என்று மூன்று தொகுதிகளாக, 1,600 பக்கங்கள் கொண்ட "திருக்குறள் களஞ்சியம்' எனும் நூல் வெளியிட்டப்பட்டது.

தமிழ்நாடு- புதுச்சேரி அரசுகளிடம் சிறந்த கவிஞருக்கான விருதாளர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், ஆன்மிகக் கட்டுரையாளர், தன்னம்பிக்கையாளர்.. என பன்முகப் பரிணாமங்களைக் கொண்ட சுகுமாரன், பாரதியார் மீதான பற்றுதலால் அவருடைய பெயரையும் அடைமொழியாக்கிக் கொண்டார். அறுபத்து எட்டு வயதிலும் தமிழ் மேடைகளில் இளைஞராக முழங்கிக் கொண்டிருக்கும் பாரதி சுகுமாரனிடம் பேசியபோது:

'விழுப்புரம் அருகேயுள்ள திருக்கோவிலூர் எனது சொந்த ஊர். மணம்பூண்டி தொடக்கப் பள்ளியில் பயிலும்போது, சுதந்திர நாள் விழாவை தலைமை ஆசிரியர் சின்னையன் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பார். மாணவர்களின் கையில் தேசியக் கொடியையும், பாரதியின் "சுதந்திரப் பள்ளு' நூலையும் வழங்கி வீதிகளில் பாரதியின் பாடல்களை முழங்கியபடி மாணவர்களை நடைபோட வைப்பார்.

அப்போது, பாரதியின் மீதான பற்று ஏற்பட்டது. நேசிக்க வைத்தது. பொதுவுடைமை இயக்கத்தில் இருந்த எனது தந்தையைத் தேடிவந்த கவிஞர்கள் வாயிலாக, கவிதையின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். வழியாக வெளிப்பட்டு மக்களை அவருடைய அரசியல் பக்கம் திசை திருப்ப வைத்தது. படைப்புக்கு, எழுத்துக்கு இத்தகைய சக்தி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டபோது மேலும் படைப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

1971-இல் என்னுடைய முதல் படைப்பு "பயணம்' என்ற இலக்கிய இதழில் பிரசுரமாகியது. பின்னர், பல்வேறு இலக்கிய இதழ்களிலும் வெளிவந்தன.

பாரதிக்காக விழாக்கள், அவருடைய கவிதைகளை மையமாகக் கொண்டு, நூல்களாக வெளியிட ஆரம்பித்தேன்.

இந்த நேரத்தில் பாரதிக்காகவும், தமிழ்நாடு பொன்விழாவுக்காகவும், மதுரை, திருநெல்வேலி, புதுதில்லி போன்ற பகுதிகளில் படைப்பாளர்களை ஒருங்கிணைத்து நடத்திய மாநாடுகளைப் பார்த்த தமிழ் வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநர் கோ. விசயராகவன் என்னிடம், "திருக்குறளையும் உங்கள் கையில் எடுங்கள், உள்ளே சென்று வாசியுங்கள். அதுதான் உலகப் பொதுமறை, அதுதான் தமிழனின் பெருமை' என்று அழுத்தமாகக் கூறினார்.

வாழ்க்கைக்குரிய இலக்கணமாக, நீதி நூலாக திருக்குறள் எனக்குத் தெரிந்தது. உலக அளவில் அனைத்து மக்களுக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடின்றி அவர்கள் வாழ்க்கைக்கு நல்வழியை காட்டக்கூடிய ஒரு நூல்தான் திருக்குறள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, அக்காலத்துக்கேற்ற எழுத்து நடையில், புலமையில் வெளியான திருக்குறளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கில் காலம் காலமாய் ஒவ்வொருவரும் அவர்களுடைய கால மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பலரும் உரை எழுதியுள்ளனர்.

தனித்தனியே கதைகளை வடித்திருக்கின்றனர். ஒரு அதிகாரத்தைக் கையில் எடுத்துகொண்டு அதற்கு உரை எழுதியுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான இயல்களுக்கு எழுதியிருக்கின்றனர். அறம், பொருள், இன்பம் என்று ஒவ்வொரு அதிகாரத்தையும் தனியாகவும் எடுத்து விளக்கங்களை வழங்கியிருக்கின்றனர். ஒரு சிலர் திருக்குறளை பிற அறிஞர்களின் படைப்புகளுடன் ஒப்பீடு செய்துள்ளனர்.

பேராசிரியர் மு.வ. தொடங்கி, முன்னாள் முதல்வர் கருணாநிதி வரையில் 133 அதிகாரங்களையும் தாங்களே உள்வாங்கி தங்கள் சிந்தனைகளை அதில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

முன்னதாக, மகாகவி பாரதியாரின் ஆத்திசூடி வரிகள் 110-ஐயும் 110 தலைப்புகளாக்கி, கவிஞர்களை தனித்தனி நூல்களாக எழுத வைத்து வெளியிட்ட அனுபவம் எனக்கு உதவி புரிந்தது. இதன்படி, "ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒவ்வொரு ஆய்வாளர்' என்று 133 அதிகாரங்களையும் 133 ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டால் அது இதுவரை ஒருவரும் மேற்கொள்ளாத பணியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். இந்த நூலுக்கு "திருக்குறள் களஞ்சியம்' என்ற பெயரை வெளிப்படுத்தி, அதை உருவாக்குவதில் முனைப்பை உண்டாக்கியது.

அதற்காகவே 2020-இல் "வாட்ஸ் அப்' குழுவைத் தொடங்கி, ஆய்வாளர்களிடமிருந்து ஒவ்வொரு அதிகாரத்துக்கும் அவர்களுடைய பார்வையில் 10 பக்கங்களுக்கும் குறையாமல் கட்டுரைகளை ஆய்வு நோக்கில் எதிர்பார்க்கிறோம் என்ற தகவலை வெளிப்படுத்தினேன்.

குழுவில் முதன் முதலாக இணைந்தவர் அப்பொழுது காவல் துறை துணை ஆணையராக இருந்த முனைவர் இரா.திருநாவுக்கரசு. அவர் உடனடியாக முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துக்கு ஆய்வுரை வழங்க வைத்தது. தொடர்ந்து அவரது இணையர் லாவண்ய சோபனா ஒரு அதிகாரத்தை எடுத்துகொண்டார்.

களஞ்சியத்தில் பங்கேற்க எந்தவொரு கட்டணமும் இல்லை என்ற தகவல் வெளியானதும் நிறைய ஆய்வாளர்கள் தாங்கள் எழுதுவதாகப் போட்டியிட்டு, தங்கள் பெயரை வழங்கினர். 133 அதிகாரத்தையும் தனித்தனியாகப் பிரித்து அதில் பங்கேற்க விருப்பம் உடையவர்களுடைய பெயர்களை எல்லாம் இணைத்து அவர்களுக்கு குறிப்பிட்ட நாள்களை பதிவு செய்தனர் கட்டுரைகளை எதிர்பார்த்தோம். அப்போது, பலர் அவர்களால் இயலாமல் வெளியேறிய நிலையும் ஏற்பட்டது. இருந்தாலும் ஒரு விடாமுயற்சியாக எனக்குள் இருந்தது.

"பத்து கட்டுரைகளுக்கு மேலாக வந்து சேர்ந்து விட்டது. கையில் வாங்கியதை விட்டு விடக்கூடாது. அதைத் தொடர வேண்டும், எந்தக் காரணம் கொண்டும் இந்தச் செயலில் இருந்து பின்வாங்கி விடக்கூடாது' என்ற உறுதியுடன் பயணித்தேன்.

மென் மேலும் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருந்த போது இடையில் கரோனா காலமும் வந்தது. அந்தக் காலம் திருக்குறளுக்குள் ஆழமாகச் சென்று ஒரு சிலருக்கு கட்டுரை எழுதுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. கட்டுரைகள் ஒவ்வொன்றாக வந்து சேர ஆரம்பித்தது. அப்படியும் அது நிறைவேறவில்லை.

கடைசி நேரம் வரையில் தலைப்பைத் தேர்வு செய்த சிலரால் தங்கள் கட்டுரையை முடிக்க முடியவில்லை என்பதைத் தெரிந்து அந்தத் தலைப்புகளுக்காக மீண்டும் கட்டுரைகள் வேண்டினேன். இறுதி வடிவத்தை நெருங்கிய நிலையில் கூட சிலரால் கட்டுரைகளை வழங்க முடியாமல் போனது. அந்த நிமிடத்தில் மீண்டும் வேறு ஆய்வாளர்கள் முன்வந்தனர்.

கட்டுரைகளை அனுப்பியவர்களில் சிலருடைய கட்டுரைகள் போதுமான அளவுக்கும், எதிர்பார்த்த அளவுக்கும் கருத்துகளை உள்கொண்டதாக இல்லாத காரணத்தினால் அவற்றை எல்லாம் நிராகரிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மிகப் பெரிய உழைப்பும், தொய்வில்லா தொடர் முயற்சியும் நீடித்துக் கொண்டே இருந்தது.

நான்கு ஆண்டுகளில் ஒரு நாள் கூட எதற்காகவும் பின்வாங்கியதில்லை. எவரிடத்தும் கடுஞ்சொல் பேசியதில்லை. விலகிச் சென்றவர்களை மீண்டும் அழைக்கவும் இல்லை. அந்த இடத்துக்குப் புதியவர்களை கொண்டு வந்து சேர்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அதிகாரத்தின் மீது ஆர்வம் இருந்த நிலையில் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்க முடியாத நிலை. அதற்கு முன்னதாகவே அந்தக் கட்டுரைகள் வந்து சேர்ந்திருந்தது. அதன்பின்னர், வேறு அதிகாரம் வழங்கி அவர்களை எழுத வைத்து இந்தப் பணியானது மாற்றம் பெற்றுக் கொண்டே இருந்து ஒரு நிறைவுக்கு வந்து சேர்ந்தது.

அதை தட்டச்சு செய்து, அதன் பிறகு மெய்ப்பு பார்த்து உறுதுணையாக இருந்தவர் காவல் துறை முன்னாள் தலைவர் திலகவதி. பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் பொன். குமார், காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா.

சிவகுமார், மதுரை காமராசர் பல்கலை. தமிழ்த் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலரும் உதவிகளை வழங்கினர்.

"திருக்குறள் களஞ்சியம்' உலகமெங்கும் செல்ல உதவியாக இருப்பதாக விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் தெரிவித்தது எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. அவர் 160- க்கும் மேற்பட்ட இடங்களில் திருவள்ளுவர் சிலைகளை உலகின் பல பகுதிகளில் நிறுவியவர்' என்கிறார் பாரதி சுகுமாரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com