முந்நூறுக்கும் அதிகமான அரிய வகை காய்கறி, கீரை விதைகளைச் சேகரித்துள்ளார் முப்பத்து இரண்டு வயதான இயற்கை விவசாயி "சாலை' அருண்.
திருச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட முசிறி அருகேயுள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இவர், இதற்காக நாடு ழுழுவதும் பயணித்திருக்கிறார். விதைகளைச் சேகரித்ததுடன் நட்பு வட்டத்தையும் உருவாக்கி, தென்னக விதைகள் வடக்கேயும், வட இந்திய விதைகள் தென்னகத்துக்கும் "பண்ணை மாற்றம்' கண்டுள்ளன.
"கற்பகதரு" என்ற பெயரில் விதை வங்கியைத் தொடங்கி விதைகளை விற்கவும், பகிரவும், பரிமாறிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரிடம் பேசியபோது:
'தாத்தா, பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன். விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தாத்தாவைப் பார்த்து வளர்ந்தேன். அவர் விவசாயப் பணிகளில் பங்கேற்க என்னை அனுமதிக்கவில்லை. தாத்தாவின் இந்தக் கட்டுப்பாடு எனக்கு விவசாயத்தின் மீதான ஆர்வத்தையும் மேலும் தூண்டியது.
2011-இல் ஒரு புத்தகக் கண்காட்சியில் நம்மாழ்வாரை சந்தித்தபோது, எனக்குள் ஒரு திருப்பத்தை விதைத்தது. நம்மாழ்வாரின் வானகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனுபவம் மூன்று ஆண்டுகளுக்கு இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த உதவியது.
நாட்டு நெல்வகைகளின் வித்துகளை மறைந்த "நெல்' ஜெயராமன் சேகரித்து வந்தார். அவரது வழியில் காய்கறி - கீரை வகைகளின் விதைகளைப் சேகரித்துப் பகிர்ந்து கொள்ள தமிழ்நாட்டுக்குள் பயணம் செய்து நாட்டு காய்கறி விதைகளை சேகரித்தேன்.
பாக்கு வகைகளில் 15, அகத்திக்கீரை வகைகளில் 20, தக்காளி, மிளகாய், முருங்கை வகைகளில் தலா 10 வகை விதைகளைச் சேகரித்தேன். சுரைக்காய் ரகங்களில் 15 வகை, அவரையில் 20 வகை , மிளகாய், பீர்க்கங்காய் போன்றவற்றில் தலா 10 வகை விதைகளையும் சேகரித்தேன்.
அந்தச் சமயத்தில் சே.குவேராவின் "மோட்டார் சைக்கிள் டைரிகள் எனும் நூலை வாசித்து, அதில் ஈர்க்கப்பட்டேன். பின்னர், விதைகளைப் சேகரிக்க இந்தியா முழுவதும் பயணம் செய்ய முடிவு செய்தேன். நண்பர்களின் ஆதரவுடன் இரு சக்கர வாகனத்தில் அகில இந்தியப் பயணத்தை 2021-இல் தொடங்கினேன்.
15 மாநிலங்களை வலம் வர ஆறு மாதங்கள் பிடித்தன. இந்தப் பயணத்தில், விதை விற்பனையாளர்கள், சேகரிப்பாளர்கள், இயற்கை விவசாய ஆர்வலர்களைச் சந்தித்தேன். என்னிடம் உள்ள விதைகளை இலவசமாக விநியோகித்தேன் அவர்களிடமிருந்து விதைகளைப் பெற்றேன். அதையும் தாண்டி, வேளாண்மை அறிவை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது. இந்தப் பயணம் எனக்கு ஒரு முகவரியையும் வழங்கியது.
புதுக்கோட்டைக்கு அருகே 5 சென்ட் நிலத்தில் ஒரு தோட்டத்தை உருவாக்கி, காய்கறிகள், கீரைகள், பூக்கள், மூலிகைகள் என்று வளர்த்து வருகிறேன். நிலத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தேன். அதன் உரிமையாளர் நிலத்தை விற்க முடிவு செய்திருப்பதால், வேறு நிலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இதுவரை சேகரித்த விதைகளை "கற்பகதரு" என்ற பெயரில் விதை வங்கியைத் தொடங்கி விதைகளை விற்கவும், பகிரவும், பரிமாறிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
விதை வகைகள், அவற்றின் நடவு பருவங்கள் குறித்து விவசாயிகளுக்கும், விதை விற்பனையாளர்களுக்கும் விழிப்புணர்வும், போதிய அறிவு அனுபவமும் இல்லாதது இந்தக் களத்தில் சவாலாக எழுந்துள்ளது. தொடர்ந்து தொடர்பில் இருந்தால், விதைகளைப் பரிமாறிக் கொள்வது போல, விதைகள் குறித்த அறிவு, விதைகளைப் பயிர் செய்யும் அனுபவங்களையும் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
சம்பா விதைப்பு, சாகுபடி ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை நடக்கும். அதுபோல விதைக்கும் பருவங்கள் காய்கறிகளுக்கும் உண்டு. வெற்றிக்கரமான விளைச்சலை காய்கறிகளில் அடைய சரியான நடவு காலத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
பாரம்பரிய நாட்டு விதைகளை விவசாயிகளுக்கு வழங்கும்போது இயற்கை விவசாயத்தில் வளர்க்கப் பரிந்துரை செய்வேன்.
பயிற்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விதை வகைகளின் பன்முகத்தன்மை, நிலையான நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்குக் உரியமுறையில் விழிப்புணர்வு வழங்கினால் விளைச்சலில் வெற்றி காண முடியும். உள்ளூர் காய்கறிகளைக் கொள்முதல், விற்பனை செய்வதை ஊக்குவிக்க வாரச் சந்தைகள் பெரிதும் உதவும்.
இமயமலைப் பகுதியில் விளையும் "தேவகி' நெல் வகை ஒன்றை ஆந்திர விவசாயி விஜயராம் கொண்டுவந்து விளைவித்து வருகிறார். அவரிடமிருந்து அந்த நெல் விதைகளைப் பெற்று திருவண்ணாமலை கார்த்தி என்பவரிடம் கொடுத்து விளைவிக்கச் சொன்னேன். ‘சீரக சம்பா' போல நல்ல வாசனை உள்ள அரிசியை ‘தேவகி' வழங்குகிறது'' என்கிறார் சாலை அருண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.