இயற்கை நியதியில், படைப்பின் விநோதத்தால் அறிவுத்திறன் குறைந்தவர்களாகக் காணப்பட்டாலும், தங்களின் அறிவாற்றலால் வென்று தான் பிறந்த குடும்பத்துக்கும், படித்த பள்ளிக்கும், வாழும் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பவர்களாக விளங்குகின்றனர் புதுச்சேரி சத்யா சிறப்புப் பள்ளி மாணவ, மாணவிகள்.
சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டில் சர்வதேச அளவில் பதக்கங்களைப் பெற்று, தேசத்துக்கும் பெருமை சேர்த்த அந்த மாணவர்கள் தற்போது கலைகளிலும் மிகச்சிறந்த இடத்தை வகித்துள்ளனர்.
ஜிப்மர் கலையரங்கில் 130 மாணவர்கள் இணைந்து, அண்மையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய 'ராமகதா'' நாடகமானது பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.
கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வரும் சிறப்பு ஒலிம்பிக் பாகத் அமைப்பின் திட்ட மேலாளர் கே.ராம்ஜியிடம் பேசியபோது:
'நாடகத்தில் நடித்தவர்களில் 60 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் 15 வயதுக்கும் குறைந்தவர்கள். ராமனாக நடித்த மோகிலேஷ்வர், சீதையாக நடித்த நதியா, அனுமனாக நடித்த கே.கிஷோர், சடாயுவாக நடித்த கெளசிக் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டனர். நடித்தவர்களது நடை, உடைகள், பாவணைகள், வசன உச்சரிப்புகள் அனைத்தும் மிக தேர்ந்த கலைஞர்களைப் போல சிறப்பாகவே இருந்தது.
இவர்கள் தமிழ்நாடு, ஒடிஸ்ஸா, தெலங்கானா, புதுதில்லி உள்பட பல்வேறு மாநிலங்களிலும் நாடகங்களை நடத்தியுள்ளனர். புதுதில்லியில் மகாகவி பாரதி, பாரதிதாசன் வேடமணிந்து மண்ணின் வரலாறை நாடகமாக்கி பார்வையாளர் பாராட்டையும் பெற்றனர்.
இந்த மாணவர்களில் 10 பேர் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலத்தையும் வென்றுள்ளனர். பளுதூக்குதல், தடகளம், பூப்பந்தாட்டம் என அனைத்து நிலைகளிலும் சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் பள்ளிக்கு, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் கிளைகளும் உள்ளன. அறிவுத்திறன் குறைந்ததாக கண்டறியப்பட்டவர்களில் இருபத்து ஐந்து வயது வரையுள்ளவர்கள் வரை பயின்று வருகின்றனர். உடற்கல்வி, இசைப் பயிற்சி, திறன் மேம்பாடு என வாழ்க்கைக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன்படி அவர்கள் தரைவிரிப்புகள், கேழ்வரகு பிஸ்கட்டுகள் ஆகியவற்றை தயாரித்தும் விநியோகித்துவருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு உணவுப் பொருள் உள்ளிட்ட கண்காட்சியிலும் புதுவை அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகள் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுவருகின்றனர்.
இவர்களுக்கு பயிற்சியாளர்கள் அருண், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் விளையாட்டு, கலைப் பயிற்சிகளை நடத்திவருகின்றனர்.
பாரம்பரியக் கதைகளை பார்வையாளர் போற்றும் வகையில் கலை வழியாக எடுத்துரைத்து வரும் அறிவுத்திறன் குறைந்த குழந்தைகளுக்கென தனி மைதானம் அமைக்கப்பட்டால், விளையாட்டு, கலை என அவர்கள் எளிதாக பயிற்சி பெறமுடியும்'' என்கிறார்.
'ராமாயணத்தை இளந்தலை முறையும் நெகிழ்ச்சியுடனும், உணர்வுப் பெருக்குடனும் பார்த்து பரவசமடையும் வகையில் சுமார் 1 மணி நேரம் அரங்கிலிருப்போரை கட்டிப்போடும் வகையில் அமைந்திருந்தது அவர்களது ராமகதா என்றால் மிகையில்லை'' என்கிறார் பார்வையாளர் முனியசாமி.
-வ.ஜெயபாண்டி, படங்கள்-கி.ரமேஷ்.