மனிதம் மட்டும் இங்கே மலிவு!

எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை.
சினிமா
சினிமா
Published on
Updated on
2 min read

எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அதுதான் உலகத் தரம். சினிமாக்களின் அடிப்படையை அளந்து பேசுகிறார் இயக்குநர் பி.வி.பிரசாத். "காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கி ஈர்த்தவர். இப்போது "சகுந்தலாவின் காதலன்' படத்தை இயக்குவதுடன், நடிகராகவும் அடுத்தக் கட்டத்துக்கு செல்கிறார்.

தலைப்பின் வழியாக எதுவும் சொல்ல வர்றீங்களா...

கதையின் மனசாட்சியை ஒரு தலைப்பு பிரதிபலிக்க வேண்டும். அதற்காகத்தான் சகுந்தலாவின் காதலன் என்று இப்படியொரு தலைப்பு. காந்தியும் ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படியிருக்கும். அப்படி எழுகிற ஒரு சூழலை கடக்கிற சில மனிதர்களின் கதைதான் இது. சந்தோஷத்தை எதிர் கொள்கிற அதே நேரத்தில், உண்மையைப் பார்த்தால் மனுஷக்கு அவ்வளவு பயம். இதுதான் வாழ்வின் பெரும் சவால். சந்தோஷத்தை அடைவதற்காக ஒரு பொய் சொல்கிறோம்.

அது அந்த நேரத்தில் அழகா இருக்கும். கிரீடமாக ஜொலிக்கும். ஆனால், உண்மை அம்மணமாக நிற்கும். ஒரு கட்டத்தில் ஏசுநாதர் தலையில் இருந்த முள் கிரீடம் மாதிரி குத்தும். அதனால்தான் உண்மையை கண்டு ஓடி ஒளிகிறோம். சந்தோஷம் மட்டுமே கண்ணுக்கு தெரிய, பொய் துரத்த... உண்மை நெருக்க... பலர் சாமியாராக திரிகிறார்கள். சிலர் பைத்தியமாகிறார்கள். என்னை கேட்டால் உண்மையை நேருக்கு நேர் சந்திக்கிற தைரியம்தான் வாழ்க்கை. அது வலிக்கும். உயிரை எடுக்கும். ஆனால், அதுதான் சரி. இப்படி ஒரு அனுபவம் இங்கே சிலருக்கு கைக் கூடி வருகிறது. அதை ஐந்து கோணங்களின் வழியே கடத்தியிருக்கிறேன்.

உள்ளடக்கம் பற்றி பேசினால் இன்னும் கொஞ்சம் தெளிவு பிறக்கும்...

பிரசவம் பார்க்க நாட்டிலியே அதிக வசதி இருக்கிற மருத்துவமனையில் சேர்க்கலாம். ஆனால், தாய் அனுபவிக்கிற அந்த வலிக்கு என்ன பணம் தர முடியும். இருப்பதிலேயே சிறந்த உணவை வாங்கி விடலாம். ஆனால், பசி என்ன விலை கொடுத்தால் வரும். எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது.

இதோ மீத்தேன், ஹைட்ரோ ஹார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள். சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும்.

தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்கு பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும் போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள்.

தயாரிப்பு, இசை, இயக்கம், நடிப்பு எல்லா பக்கங்களிலும் இருக்கீங்க... இது பெரிய அழுத்தம் இல்லையா...

எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். சம்பாதிப்பதை நல்லப் படியாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல் நீயே சினிமா தயாரிப்பதெல்லாம் தேவையா என்று கேட்காதவர்கள் இல்லை.

அப்போதெல்லாம் மனசுக்கு பிடித்ததைத்தானே செய்கிறோம் என உள்ளுக்குள் ஒரு அலை அடிக்கும். அருவா, ஆபாசம் என நாடு போற்றும் வெள்ளி விழா படங்களை எடுத்தால், சமூகத்தை கெடுக்கிறீங்களே என்று கேட்காலம். சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. இதை நானே தயாரிக்கலாம் என தோன்றியதால் தயார்க்கிறேன்.

அவ்வளவுதான். இசையும் அப்படித்தான். எல்லாம் கேள்வி ஞானம்தான். இங்கே யாரும் சுயம்பு கிடையாது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்துக் கொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.

பசுபதி, சுமன், கருணாஸ் என நடிகர்கள் நிறைந்திருக்கிறார்கள்....

எல்லோருக்கும் நல்ல மனசு உண்டு. கதையையும், அதன் தன்மையையும் புரிந்துக் கொண்டு எவ்வளவு பணம் வேண்டும் என கேட்டவர் சுமன் சார். நான் ரொம்பவே மதிக்கிற பசுபதி, கருணாஸ் இருவரின் பங்கும் இதில் கை சேர்ந்ததில் மகிழ்ச்சி. நான் கடவுள் ராஜேந்திரன் அண்ணன் அப்படி ஒரு ஒத்துழைப்பு தந்தார். தாமிரபரணி பானு கதையோடு அவ்வளவு பொருந்தியிருக்கிறார்.

கவிஞர், எழுத்தாளர் அ.வெண்ணிலா படத்துக்கு வசனம். இது எனக்கு பெரும் பலம். ஃபிலிம் ரோலில் சினிமா எடுப்பதில் அவ்வளவு திருப்தி உண்டு. அதற்காகவே இதை முழுக்க முழுக்க ஃபிலிம் ரோலில் எடுத்து வந்திருக்கிறேன். அறிவுமதி அண்ணனின் மகன் ராசாமதி கேமிரா. அவரின் பெரும் பயணத்தின் அத்தாட்சியாக இது இருக்கும். லட்சக்கணக்கான மக்களைச் சென்று சேரக் கூடிய சினிமாவுக்கான பொறுப்பை உணர்ந்து உழைத்திருக்கிறேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.