செர்பியாவின் வர்ன்ஜக்கா பன்ஜாவில் அண்மையில் நடைபெற்ற உலகப் பள்ளி சாம்பியன்ஷிப் 2025-க்கான சதுரங்க (செஸ்) போட்டியில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளுக்கான பிரிவில், இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் பிரக்னிகா வகாலட்சுமி.
ஏழு வயதாகும் அவர் ஒன்பதுக்கு ஒன்பது புள்ளிகள் பெற்றுள்ளார். பிரக்னிகா 4 -ஆவது சுற்றில் மொஹினூர் அசாகுஜேவாவையும், 5-ஆவது சுற்றில் வேரா ஜின்டியன் சூவையும் வென்றுள்ளார்.
இறுதிச் சுற்றில், தேசிய பள்ளிகள் சாம்பியனும் 1484 -ஆவது ரேட்டிங் பெற்ற ஷ்ரேயோன்ஷி ஜெயினை எதிர்கொண்டபோது, மிகக் கடினமான போராடி பிரக்னிகா வெற்றி கண்டார். இப்சப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய சிறுமி பிரக்னிகாதான்.
குஜராத் மாநிலத்தில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் போட்டியில் 2024-ஆம் ஆண்டுக்கான சாம்பியனும் பிரக்னிகாதான். சதுரங்கப் போட்டியில் தொடர்ந்து முன்னேறி வரும் பிரக்னிகா. தர வரிசையில் 1437 ஸ்தானத்தில் உள்ளார்.
உலகப் பள்ளி சாம்பியன் போட்டியில் இந்தியாவில் இருந்து 22 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆறு பிரிவுகளாக (யூ-7, யூ-9, யூ-11, யூ-13, யூ-15, யூ17) போட்டி நடைபெற்றது. பிரக்னிகா வென்ற தங்கப் பதக்கத்துடன், இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளது.
தங்கம் வென்றது குறித்து பிரக்னிகா மழலை மொழியில் கூறியது:
'எனது அக்கா வரேன்யா விளையாடுவதைப் பார்த்து சதுரங்கம் விளையாடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. குறுகிய காலத்திலேயே எனது திறமையைக் காட்டியுள்ளேன். சர்வதேசப் போட்டியில், செர்பியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துருக்கி, பிற வலுவான சதுரங்க விளையாட்டு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முதல் ஐந்து இடங்களைப் பெறுவார்கள் என்று நான் கணித்திருந்தேன்.
எட்டாவது சுற்றில் வென்றால், தான் சாம்பியன் என்று தெரியும். அந்தச் சுற்றில் எனது ஆட்ட எதிரி இந்தியாவைச் சேர்ந்த ஷே்ரயோன்ஷி ஜெயின், அவர் 2025 யூ-7 சிறுமிகள் பிரிவில் தேசிய சாம்பியனாவார். எட்டாம் சுற்றில், 22 நகர்வுகளில் ஷே்ரயோன்ஷியை வென்றவுடன் நான் சந்தோஷ மிகுதியால் எனது பயிற்சியாளரைக் கட்டிப்பிடிக்க ஓடினேன். '' என்கிறார் பிரக்னிகா வகா லட்சுமி.