உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்கக் கூடிய படமாகவும் "படையாண்ட மாவீரா' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும் போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும்போதும் அனுபவித்தேன்.
அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். பயணங்களின்அருமை புரியும்.
நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றன. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதைவிட கொடுப்பினை வேறு இல்லை'' என்று ஆர்வத்துடன் பேசுகிறார் இயக்குநர் வ. கௌதமன். "கனவே கலையாதே', "மகிழ்ச்சி' படங்களுக்குப் பின் இப்படத்தை இயக்குகிறார்.
படையாண்ட மாவீரா... என்ன மாதிரியான படம்...
உன்னையும் இந்த மண்ணையும் காக்க ஒருத்தாய் மக்களாக நில்லுங்கள் என்று சொல்கிற கதை. மாவீரம் சுமந்த ஒருவரின் வரலாற்றோடு அதை பின்னிப் பிணைந்து சொல்ல வருகிறேன். அரசியல் என்பது குழப்பமான அரசியலாக இருக்கிறது.
ஊடகங்களும், பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் பொதுமக்களுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கடிக்கப்படுகின்றன. வசதி வாய்ப்புகளும், அநீதிகளும் பெருகி விட்ட சமூகத்தில் எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஊழலும், அலட்சியங்களும் பெருகி விட்ட சமூகம், 30 ஆண்டு கால ஈழப் போராட்டம் கண் முன்னே வீழ்ந்த கொடூரம்...
இந்தத் தலைமுறை தமிழர்களின் வரலாற்றை, எங்களை தாளாத துயரமாக அழுத்திக் கொண்டு இருக்கின்றது. காலங்காலமாக பேசி பேசி, எங்களை தெருவில் இறக்கி விட்டு, தலைவர்கள் எல்லாம் மாளிகைகளை உள்பக்கமாக சாத்திக் கொண்டு விட்டார்கள். அநீதிகளுக்கு எதிராக அணி திரட்ட, வழி நடத்த, ஒன்று சேர்க்க முடியாத அத்தனை தலைவர்களுக்கும் குற்ற உணர்வை கொடுக்கும் விதமாக இந்த களம் உருவாகி வந்திருக்கிறது.
கதையின் உள்ளடக்கம் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக...
நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்தக் கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஆனால், திரைக்கதையில் இது ரொம்பவே புதிது.
படத்தின் மேக்கிங் இன்னும் பலம். நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை.
போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. அன்பும், போராட்டமும்தான் இந்த மானூடத்தின் நிரந்தரம். நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினோமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததைக் கொடுத்து கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்த காலம் ஒரு தனி மனிதனுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம்.
நிறைய சமரசங்கள் செய்ய வேண்டி இருக்குமே...?
குழப்பமான அரசியல் இருக்கிற போது, இங்கே சமரசங்களோடு வாழ முடியாது. அரசியலும், வாழ்க்கையும் பந்தாடிக் கொண்டே இருக்கிறது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் நிறைய இளைஞர்கள் தவறான பாதைகளில் பயணிக்கிறார்கள். இந்த உலகத்துக்கு தெரியாத களம் நிறைய இருக்கிறது.
கடந்த தலைமுறை போய் சேர்ந்து விட்டது. மிஞ்சியவர்கள் எல்லாம் புதியவர்கள். நல்லது நடக்குமா என்று ஏங்கி நிற்கும் பிள்ளைகள் நிறைய பேர் வந்து விட்டார்கள். அவர்களுக்கு இந்த காலம் தந்திருப்பது இயலாமையும் கோபமும் கையறுநிலையும்தான்.
இந்தத் தலைமுறைக்கான இன எழுச்சி என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு கிடையாது. அந்தளவுக்கு அங்கே பாதிப்புகள் இருக்கிறது. இப்போது இங்கே என்னென்ன நடக்கிறது என்கிற உண்மையை உருக்கமாக சொல்லியிருக்கிறேன்.
வைரமுத்து - ஜி.வி.பிரகாஷ் கூட்டணிக்கு எப்போது எதிர்பார்ப்பு உண்டு....
நடந்துக் கொண்டிருக்கிற உண்மையை அப்படியே அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறேன். வட தமிழகத்தில் எல்லாமே போய் விட்டன. கடலூர் தமிழகத்தின் குப்பை தொட்டியாக மாற்றப்பட்டு விட்டது.
பஞ்சம் பிழைக்கவும், பசியாற்றவும் பச்சை பூமி வேண்டும். அதுவே முதலில் இல்லை. வலிகளும், வேதனைகளும் மட்டுமே இருக்கிற உண்மையான பதிவைக் கொடுத்திருக்கிறேன். என் நிலம், என் மக்கள் சார்ந்த கதை என்பதால் நானே முக்கிய கதாபாத்திரம் ஏற்று விட்டேன்.
மன்சூரலிகான், "ஆடுகளம்' நரேன், "பாகுபலி' பிரபாகர், "வேதாளம்' கபீர், மதுசூதனராவ், தீனா, சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, "நிழல்கள்' ரவி, இளவரசு, தமிழ் கௌதமன், "தலைவாசல்' விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார். இப்படி பெரும் படையுடன் வருகிறேன். கதையின் ஒரிடத்தில் வருகிற சூழலை கவிஞரிடம் சொன்னேன்.
உயிரைப் பிரிவது
மட்டுமா சாவு?
ஊரைப் பிரிவதும்
சாவுதானடா!
மண்ணகம் எல்லாம்
மண்ணகம் அல்ல
மானம் வீரம் வாழ்வுதானடா ...
இப்படி அந்த சூழலுக்கு வார்த்தைகள் தந்தார். அது ஜி.வி.யின் இசையில் மெல்ல மெல்ல கசிந்து வரும். எங்கள் வலி, வாழ்வை கதையாக தயாரிக்க வந்த நிர்மல் சரவணாராஜ், சி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வி.கே.புரொடக்ஷன்ஸ் குழுமத்துக்கு நன்றி.