எந்த மதமும் சாராத, அனைத்து மதத்தினரும் வழிபடக் கூடிய கோயிலைக் கட்டியிருக்கிறார் பிரபோயில் நாராயணன்.
கேரளத்தின் கண்ணூரில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் சேரப்புழா என்ற ஊருக்கு அருகில் உள்ள பிரபோயில் எனும் சிறு கிராமத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான அறிவுத் திருக்கோயில் உள்ளது.
இந்தக் கோயிலை நிர்மாணித்திருக்கும் பிரபோயில் நாராயணனிடம் பேசியபோது:
'வாழ்க்கையில் படிப்புக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. எனது 55-ஆம் வயதிலும் நான் தொலைதூரக் கல்வி மூலம் மலையாளம் முதுகலைப் படிப்பு படித்துகொண்டிருக்கிறேன். வரலாறு, தத்துவம், சமூகவியல், ஹிந்தி, உள்ளிட்ட ஐந்து முதுகலைப் பட்டங்களைப் பெற்றிருக்கிறேன்.
கவிதைகளைத் தவிர, பல்வேறு துறைகள் சார்ந்து 27 புத்தகங்களை எழுதி இருக்கிறேன். இதற்கெல்லாம் மிக முக்கிய காரணகர்த்தா மலையாளக் கவிஞரான விஷ்ணு நாராயண நம்பூதிரி. தலைச்சேரி அரசுக் கல்லூரியில் நான் புகு முக வகுப்பு படித்தபோது, அவர் என்னுடைய ஆசிரியர். அவரது கவிதைகளை நான் கருத்தூன்றிப் படித்து ரசித்து, வியந்திருக்கிறேன். அவர்தான் எனக்கு கற்றலின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர். மனிதனுக்கு கல்வியின் மூலமாகக் கிடைக்கும் அறிவு வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.
'விஷ்ணு நாராயண நம்பூதிரியின் மாணவராக இருந்த காலத்தில் இருந்தே மனித குலத்துக்கே மிக முக்கியமான ஞானத்துக்கென்று ஒரு கோயில் இல்லையே' என்று நினைத்திருக்கிறேன். இப்படி ஒரு அறிவுத் திருக்கோயிலைக் கட்ட வேண்டும் என்பது எனது 25 ஆண்டு கனவு.
எந்த மதத்துக்குரிய அடையாளமும் இல்லாமல், ஞானத்தின் அடையாளமான புத்தகம்தான் வைத்து வணங்கப்பட வேண்டும் என்பதே எனது கனவு. மாணவர்களுக்கு கல்வி கற்க உதவிடும் வகையில் 'பி. என். கல்லூரி'' என்ற பெயரில் டுடோரியல் கல்லூரியைத் துவக்கி நடத்தி வருகிறேன். சிறுகச் சிறுக சேமித்து, எனக்கு சொந்தமான இரு ஏக்கரில் அறிவுத் திருக்கோயிலைக்கட்டியுள்ளேன்.
ஒரு சிலர் நன்கொடை வழங்கினாலும், ஒட்டு மொத்த செலவோடு ஒப்பிடுகையில் அது வெகுசொற்பமே. என் சொந்த சேமிப்பில் இருந்தே இதற்கு செலவழிக்க வேண்டும் என்பதால்தான் இதனைக் கட்டி முடிப்பதற்கு இவ்வளவு காலமாகிவிட்டது.
2021 மார்ச் 4-இல் கோயில் துவக்கப்பட்டது. இங்கே எந்த கடவுள் உருவமும் கிடையாது. புத்தகத்தின் சிற்பமே இங்கே பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இந்தச் சிற்பம் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சிற்பியான சந்தோஷ் மனசமால் உருவாக்கப்பட்டது. முப்பது அடி உயரமுள்ள பீடத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தச் சிற்பத்தை வணங்க படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இங்கே பிரார்த்தனை செய்யலாம். தாங்களே புத்தகங்களைக் கொண்டு வந்து கோயிலுக்கும் வழங்கலாம். இங்கே வருகிறவர்களுக்கு புத்தகமே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மலையாள இதிகாசமான கிருஷ்ண கதா எழுதிய மலபார் பகுதியைச் சேர்ந்த கவிஞர் செருசேரி, கெளதம புத்தர், மற்றும் அறிவின் அடையாளமான விளக்கின் சிற்பம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
கோயில் வளாகத்தில் கூட்டங்கள், கருத்தரங்குகள் போன்றவை நடத்துவதற்கான அரங்க வசதியும் உள்ளது. சுமார் 8 ஆயிரம் புத்தகங்கள் கொண்ட ஒரு நூல் நிலையமும் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் எழுத விரும்பும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் தங்கி, எழுதுவதற்கு உதவும் வகையில் மூன்று காட்டேஜ்களும் உள்ளன. மொத்தம் பத்து காட்டேஜ்கள் கட்டுவது எனது இலக்கு. எதிர்காலத்தில் இது ஒரு படிப்பாளிகள், படைப்பாளிகள் மையமாக விளங்கும்.
ஆண்டுதோறும் 'வித்யாரம்பம்' விழா நடைபெறும். அப்போது குழந்தைகளுக்கு இங்கே 'எழுத்துகள் அறிமுகம்' செய்து வைக்கப்படும். அப்போது ஏராளமான இளம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கோண்டு வந்து அவர்களுக்கு அட்சராப்பியாசம் செய்து வைப்பார்கள்.
இரண்டாவது விழாவாக, ஏப்ரலில் பிரம்மாண்டமான முறையில் ஒரு கலை-இலக்கியத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 'நவபுரம் மகோத்சவம்' என்று பெயரிலான விழாவில், இலக்கிவாதிகள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் , விவாதங்கள் ஆகியவற்றுடன் இசை, நடன நிகழ்ச்சிகளும், புத்தக வெளியீடு விழாக்களும் நடத்தப்படுகின்றன.
திராவிட மொழிகள் சார்ந்த எழுத்தாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.