கோயில் கட்டட - சிற்பக் கலை ஆய்வாளர், நடுகற்கள் ஆராய்ச்சியாளர், சிற்பச் சாஸ்திர பயிற்றுநர், தாவர மருந்தியல் துறைத் தலைவர், இருநூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர், தொல்லியல் - வரலாற்றை சான்றுகளுடன் எடுத்துரைப்பவர்... என்று பன்முகத்தன்மைகளைக் கொண்டவர் பேராசிரியர் முனைவர் ப.தேவி அறிவுச்செல்வம்.
மதுரையில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றுக்கு வருகை தந்த அவரிடம் பேசியபோது:
'திருமங்கலம் அருகேயுள்ள வடகரை கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் முன்பாக வெட்டவெளியில் ஒரு நடுகல் இருந்தது. ஒன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டு, பலகைக் கல்லில் இரு ஆண் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளது.
இதில், முதல் ஆண் வீரனின் தலையில் வலது பக்க வாட்டில் கொண்டை போன்ற தலைப்பாகை அணிந்து பூசலில் உயிர்நீத்ததை உணர்த்தும் விதமாக, வலது கையில் ஓங்கிய வாளுடன் இயக்க நிலையில் காட்டப்பட்டுள்ளார்.
இடது கையில் வளரி என்னும் ஆயுதத்தைப் பிடித்தபடி, தொங்க விட்டவாறு காட்டியிருப்பது இவர், கோயிலைப் பயன்படுத்துவதில் திறமையானவராக இருந்துள்ளதைக் காட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ளதாக எடுத்துகொள்ளலாம்.
இவரின் அருகே இடது பக்கம் உள்ள சிற்பமானது வலது கையில் வாள் ஒன்றை தரையில் குத்திட்டவாறும், தொங்கவிட்ட இடது கையில் குடுவை போன்ற பொருளைப் பிடித்த படியும் தலைப்பாகை அணிந்து காணப்படுகிறார்.
இவரது தலையின் வலது, இடது பக்கவாட்டில் சந்திரன், சூரியன், பாட்டி, இவர்கள் சூரியன்- சந்திரன் வரை நிலைத்து இருப்பார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இடது பக்கவாட்டில் பூ போன்ற அமைப்பு காட்டப்பட்டுள்ளது. இருவரும் கீழ் நோக்கிய பார்வையில் வீரர்களுக்கே உரிய அரையாடையுடன் காணப்படுகின்றனர்.
இவர்கள் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் வடகரை ஊரை உருவாக்கிய சோழ மூக்கன், நல்ல மூக்கன் என்ற சகோதரர்கள் என்றும், இவர்களது வாரிசுகள் நடுகல் எடுத்து இன்றும் விலங்கு பலி கொடுத்து வழிபாடு செய்வதாக இந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மூலக்கரை திருப்பரங்குன்றம் ஏறும் பாலத்தின் வலது பக்க சாலையோரத்தின் வெட்டவெளியில் ஒரு நடுகல் இருந்தது. வறுமையால், தன் பிள்ளைகளோடு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து உயிர்விட்ட நல்லதங்காள் விருதுநகரில் குலதெய்வமாக வழிபடப் பெறுகிறாள்.
மானம் பெரியதென்று பிறரிடம் இறைஞ்சாமல் உயிரைத் துச்சமாக மதித்து வரலாற்றில் நிலைப் பெற்ற நல்லதங்காளைப் போன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் தன் குழந்தைகளுடன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட கண்ணம்பாள் என்ற பெண்ணுக்கு நடுகல் எடுப்பித்து இன்றும் வழிபாடு செய்கின்றனர்.
இந்த நடுகல் ஐந்து வரிகளுடன் கல்வெட்டாக, தமிழ் எழுத்துப் பொறிப்புகளுடன் கூடியதாக உள்ளது. கண்ணம்பாள் என்ற பெயர் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. தன் குடிக்கும் குணத்துக்கும். இழுக்கு நேராவண்ணம் வாழ்க்கையில் இறப்பை வீரமுடன் எதிர்கொள்ளும் பெண்டிர் போற்றப்படுதல் வழக்கு.
அப்பெண்டிர் வானுறையும் தெய்வத்துக்கு நிகரானவராய் வணங்கப்படுகின்றனர். அவ்வீரப் பெண்டிரின் இச்செயலானது தன் குடி, ஊர், பெண்டிர் இவற்றைக் காக்க வீரமுடன் உயிர் துறந்த வீரனின் செயற்கரிய செயலுக்கு ஈடானதென பண்டைய நாளிலிருந்து மக்கள் கருதினர்.
ஆகோள் பூசலில் உயிர்நீத்த வீரனுக்கு அவன் பெயரும், பீடும் எழுதி கல் நாட்டி வழிபட்டதை சங்க இலக்கியங்களின் வெட்சி கரந்தைத் திணை பாடல்கள் கூறும். அந்தப் பாடல்கள் கூறியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சங்கக் கால நடுகற்கள் கண்டறியப்பட்டு, தமிழக வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தின. அத்தகு தொன்மையான மரபானது இந்த நூற்றாண்டு வரை கடைபிடிக்கப்பட்டு வருவது கண்கூடு.
சங்கக் கால நடுகற்கள் வீரனின் பெயர் கொண்டு விளங்குகிறது. தற்காலத்திற் கண்டறியப்பட்டுள்ள இந்நடுகல்லானது ஒரு பெண்ணின் பெயரைத் தாங்கியுள்ளன.
கல்வெட்டுடன் கூடிய நடுகல் இது. இரண்டரை அடி உயரம். ஒன்றரை அடி நீளம் கொண்ட செவ்வகக் கல்லின் மேல் பக்க அரைவட்ட வடிவ வளைந்த அமைப்புடனும், முன்பக்கம் கண்ணம்பாள் என்ற பெயருடன் தொடங்கும் தமிழ் எழுத்து கல்வெட்டுகளுடன் காணப்படுகிறது.
அம்மனின் இரண்டு பக்கத்திலும் சிறு கற்கள் உள்ளன. அவை கண்ணம்பாளின் பிள்ளைகள் என்று சொல்லப்படுகிறது. இப்பகுதி மக்கள் கண்ணம்பாள் அம்மன் என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
திருமோகூர் கருப்பாயூரணி சாலையில் அம்மாபட்டி என்ற கிராமத்தின் உள்ளே இரண்டு புளிய மரங்களின் அடியில் வரிசையாக ஐந்து நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் ஆண்-பெண் உருவங்கள் புடைப்புச் சிற்பற்மாக சிறு மேடை போன்ற அமைப்பின் மீது நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளது.
வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் குறு வாளும் ஏந்திய நிலையில் முதுகின் வலது பக்கம் அணங்குடை பகழியுடன் (இலக்கை தாக்கும் அம்பு) கூடிய குடையுடன் அரை ஆடை அணிந்தும், அவருக்கு இடது பக்கத்துக்கு அருகே வீரனின் இணையானவர் சமபாத நிலையில் நின்று, இடது கையினை தொங்கவிட்டவாறு, கையில் ஏதோ ஒரு பொருளைப் பிடித்த படியும் வலது கையானது மடித்து என்னவென்று கண்டறிய முடியாத நிலையில் சிதைந்து உள்ள வகையிலும், பக்கவாட்டு கொண்டை போட்டு செதுக்கப்பட்டுள்ளார்.
இரண்டடி உயரம், இரண்டடி நீளம் கொண்ட இரு வீரர்கள் புடைப்புச் சிற்பமாக பலகை கல்லில் காட்டப்பட்டுள்ளனர். இரு வீரர்களும், இடது பக்கம் திரும்பியவாறும், இயக்க நிலையிலும் நேராகப் பார்த்தவாறும் இடது பக்கவாட்டு கொண்டை போட்டும் இடது கையில் அம்பு முதுகின் வலது புறம் அம்பாறாத்தூணியுடன, அம்பு வைத்துகொள்ளும் கூட்டினை முதுகில் வைத்து கட்டியிருப்பது வடிவுடன் காட்டப்பட்டுள்ளார்.
மங்கலச் செயலுக்கு வலது காலை முன்னெடுத்து வைப்பதும், மரணமே சிறப்பு என்று புறப்படும் போர் வீரர்கள் இடது காலை முன்வைத்து புறப்பட வேண்டும் என்ற மரபுக்கேற்ப இவர்கள் இடது காலை முன்வைத்துள்ளனர்.
சிற்பங்களின் பொதுவான விதிப்படி போர் வீரர்களை வடிக்கும்போது, இடது காலை முன்வைத்து வலது தோளை இடது புறமாக சிறிது திருப்பி இடது கால் பெருவிரலிலும், நெற்றி மையமும் நேராக ஒர் நேர்க்கோட்டியில் இருக்குமாறு சுத்த வீரனுடைய சிலைகள் அமைக்க வேண்டும். அதே மாதிரியாக இச்சிற்பங்கள் இடது காலை முன்வைத்து விதி மீறாமல் வடிக்கப்பட்டுள்ளது.
எனவே வீரனின் உருவங்கள் வீர நிலையை வெளிப்படுத்தி இருக்கின்றன எனக்கூறலாம். இது போன்று கிட்டத்தட்ட 23 இடங்களில் 33 நடுகற்களை கள ஆய்வின் வழியாகக் கண்டறிந்துள்ளேன்.
துரை எல்லீஸ் நகரில் உள்ள ஒரு அரங்கத்தில், "அரிட்டாப்பட்டி' (தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளம்) என்ற தலைப்பிலான நூலினை நானும், பண்பாட்டுச் சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் என்பவரும் இணைந்து மார்ச் 22-இல் வெளியிட்டுள்ளோம்.
அதில், வரலாற்றில் மாங்குளம்-மீனாட்சிபுரம், பூசாரிப்பட்டி பாறை ஓவியமும் - பெருமாள் பட்டி ஆழக்கல்லும், சிட்டம்பட்டி தேவியம்மன் கோயில் நடுகற்கள், கூலானிப்பட்டி முற்கால பாண்டியர் கோயில், வரலாற்றில் அரிட்டாப்பட்டி என 5கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்'' என்கிறார் தேவி அறிவுச்செல்வம்.