-பொ.ஜெயச்சந்திரன்
பட்டிமன்ற நடுவர், மரபுக் கவிஞர், நகரத்தார் வரலாற்று ஆய்வறிஞர், சமயச் சொற்பொழிவாளர், இலக்கியப் பொழிவாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மலர்த் தொகுப்பாளர், பதிப்பாளர், வழக்குரைஞர், கும்பாபிஷேகங்களின் வர்ணனையாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மைக்குச் சொந்தக்காரர் தேவக்கோட்டையைச் சேர்ந்த முனைவர் இரா. இராமநாதன்.
அவரிடம் பேசியபோது:
'வாரணாசி முதல் ராமேசுவரம் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களின் கும்பாபிஷேகங்களுக்கான வர்ணனையைச் செய்துள்ளேன். கும்பாபிஷேகங்களில் என்னுடைய குரல் ஒலித்ததும்,கருட பகவானே வந்து வட்டமிட்டு விடுவார் என்பது கண் கூடு என்பதால் 'கருடனை அழைக்கும் காந்தக் குரல்' என்பது மக்களின் நம்பிக்கை. 'கும்பாபிஷேகமா? கூப்பிடு இராமநாதனை' என்பது செட்டிநாட்டுப் பழமொழியாகிவிட்டது.
கண்டதேவித் தேருக்கு கடந்த ஆண்டு ஜூன் 21'இல் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு நிலவிய பதற்றச் சூழலைப் பக்திச் சூழலாக மாற்றி மூன்று மணி நேரம் தனிநபராக வர்ணனை செய்தேன். இதற்காக, சிவகங்கை இராணியார் கெüரி வல்லப சாஹிபா டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியாரால் கெளரவிக்கப்பட்டேன்.
திருவண்ணாமலை கோயில் கும்பாபிஷேக விழா மலரை கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 11 மாதங்கள் உழைத்தேன். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலரை வெளியிட்டு சிறப்பித்தார்.' உலகின் மிகப் பெரிய கும்பாபிஷேக மலர்'என்று பலரும் பாராட்டினர். வண்புகழ் நாராயணப் பெருமாள் கோயில் வரலாறு, அரியக்குடி தென் திருப்பதி கோயில் வரலாறு, சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில் குடமுழுக்கு மலர் போன்றவற்றில் பதிப்பாசிரியராக இருந்துள்ளேன்.
ஆயிரக்கணக்கான பாடல்களை இளம் வயதிலேயே மனப்பாடம் செய்ததால், அது இன்றைக்கு பேச்சு துறைக்குத் துணையாக இருக்கிறது.முப்பது ஆண்டு கால மேடை அனுபவம் உள்ளது. பட்டிமன்றங்ளில் நகைச்சுவையுடன் பேச்சை வெளிப்படுத்தினால் மட்டுமே ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பார்கள்.
தமிழும் அதன் இலக்கியங்களும் அறத்தையும், தனி மனித ஒழுக்கத்தையும் போதிக்கின்றன. சமூகத்தை நல்வழிப்படுத்த மேடைப் பேச்சை கருவியாக்கி மனித மனங்களைச் சுத்திகரிக்க விழைகிறேன்.
பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமும், இராஜலெட்சுமி அம்மையார் நினைவுப் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக நடிகர் கமலஹாசனிடமும் பாராட்டும் பெற்றுள்ளேன். நூற்றுக்கணக்கான விருதுகள், பட்டங்கள், பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன்' என்கிறார் இராமநாதன்.