
திருப்பூர் கிருஷ்ணன்
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திருப்பூரில் ஒரு பொதுக் கூட்டம். திருப்பூர் ராயபுரம் முக்கோணப் பூங்கா அருகே ஒரு மைதானம் இருந்தது. இப்போது அங்கு விநாயகர் கோயிலும், கிருஷ்ணர் கோயிலும் வந்துவிட்டன. புகழ்பெற்ற மைதானம் அது. அங்கு பெருந்தலைவர் காமராஜ் பேசுவதாக ஏற்பாடு.
பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தார்கள். எள் விழ இடமில்லை. பெருந்தலைவர் இன்னும் வந்துசேரவில்லை. அவர் வரும்வரை பெருந்தலைவரைப் பற்றி உரையாற்றும் பொறுப்பு குமரி அனந்தனுக்கு வழங்கப் பட்டது. கம்பீரமாகப் பேசத் தொடங்கினார் அவர்.
'ஏழைகள் இல்லத்தைத் தேடி நடக்கிற கால்கள் எவருடைய கால்கள்? அவை பெருந்தலைவரின் கால்கள்! ஏழைகளின் துயரங்களைப் பார்த்துக் கண்ணீர் சிந்துகிற கண்கள் எவருடைய கண்கள்? அவை பெருந்தலைவரின் கண்கள்!'' என்றிப்படி அந்தப் பேச்சு இனிமையாகவும் அழகாகவும் வளர்ந்து கொண்டிருந்தது.
பேச்சின் கருத்துக்கேற்ற இயல்பான முக பாவனைகள். உதட்டிலிருந்து வராமல் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகளின் அடுக்கு. மக்கள் சொக்கிக் கிறங்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால், அப்போது காரில் வந்து சேர்ந்தார் காமராஜ். குமரி அனந்தன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் அருகில் உள்ள நாற்காலியில் வந்து அமர்ந்தார்.
சில தலைவர்கள் ஆள்வைத்துப் புகழச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். காமராஜிடம் அத்தகைய குணம் அறவே கிடையாது. தம்மை யாரும் புகழ்ந்து பேசுவது அவருக்குப் பிடிக்காது. அதனால் அல்லவோ அவர் பெருந் தலைவர்! குமரி அனந்தனின் பேச்சில் குறுக்கிட்டு, 'போதும். நிறுத்துங்கண்ணேன்!'' என்றார்.
அடுத்த கணம், தான் பேசிய வாக்கியத்தைக் கூட முடிக்காமல் உடனே அமர்ந்துவிட்டார் குமரி அனந்தன். பெருந்தலைவர் மேல் அவருக்கிருந்த அபரிமிதமான மரியாதை, உடனடியாக தம்முடைய தலைவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அமர்ந்த அந்தத் தொண்டரின் பணிவு இவையெல்லாம் மக்களை வியக்க வைத்தன. குமரி அனந்தன் பேச்சுக்கான கைதட்டல் அடங்க நீண்ட நேரம் பிடித்தது. தன் தொண்டரின் பேச்சுக்கான அந்த நீண்டநேரக் கைதட்டல் பெருந்தலைவருக்கு மிகவும் பிடித்தது!
திருப்பூர் சிக்கண்ணா கலைக் கல்லூரியில் நான் இளங்கலை பயின்று கொண்டிருந்த காலம். அப்போது தமிழறிஞர் கா. மீனாட்சிசுந்தரம் கல்லூரி முதல்வராக இருந்தார். உயர்நிலைப் பேச்சாளர்களைக் கல்லூரிக்கு அழைத்துவந்து மாணவர்கள் முன் அவர்களைப் பேசச் செய்வதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார்.
கண்ணதாசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், புலவர் கீரன் போன்றோரெல்லாம் கல்லூரிக்கு வந்து பேசினார்கள். குமரி அனந்தனைப் பேச அழைக்க வேண்டும் என்ற எங்களின் விருப்பத்துக்கு முதல்வர் இசைந்தார். அதன்படி குமரி அனந்தன் கல்லூரிக்குப் பேச வந்தார்.
திருப்பூர் கல்லூரி அரங்கத்துக்குக் குமரன் கூடம் என்று பெயரிடப் பட்டிருந்தது. மேடையேறிய குமரி அனந்தன் தன் பேச்சின் முதல் வாக்கியத்திலேயே மாணவர்களைப் படபடவெனக் கைதட்ட வைத்துவிட்டார்.
'இன்று என் பேச்சு இந்த அரங்கில் நிகழ்வது மிகப் பொருத்தம்தான். குமரன் கூடத்தில் குமரி பேச வந்திருக்கிறேன். குமரி பேசினால் உங்களுக்குப் பிடிக்கும்தானே?'' என்று பேச்சைத் தொடங்கி அவையைக் கலகலக்க வைத்தார் அவர்! சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கும்மேல் நிகழ்ந்த அவர் பேச்சில் கட்டுண்ட மாணவர்கள், அவர் பேச்சு முடிந்த பிறகுதான் கடிகாரத்தைப் பார்த்தார்கள்.
வகுத்தும் தொகுத்தும் பகுத்தும் பேசுவதில் வல்லவர். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என ஒரு சிறுகதைபோல் கச்சிதமான வடிவமைப்போடு அவர் பேச்சு கேட்போர் கவனத்தைக் கவரும். அவர் பேச்சின் இன்னொரு முக்கியச் சிறப்பம்சம் மிகத் திருத்தமான உச்சரிப்பு.
தமிழ்நாடு என்றால் அந்தச் சொற்களைத் தமிழ்நாடு என்றே ழகரம் தெளிவாக ஒலிக்கும் வகையில் உச்சரிப்பார். ணகர னகர வேறுபாடுகளை அவர் குரல் மிகச் சரியாக வித்தியாசப்படுத்திக் காட்டும்.
தெளிந்த சங்கீதம்போல் இருக்கும் அவர் பேச்சு. அவர் பேச்சை ஒருமுறை கேட்டவர்கள் மறுபடி மறுபடிக் கேட்க ஆர்வம் கொள்வார்கள். குமரி அனந்தன் பேச்சுக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.
குமரி அனந்தனின் ரசிகனான எனக்கு, ஒரு பெரும் பேறு கொஞ்ச காலத்துக்குக் கிடைத்தது. அவர் சென்னையில் நான் வசிக்கும் பத்மாவதி நகரில் சிறிதுகாலம் குடியிருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் நடைப் பயிற்சியை முடித்துவிட்டு என் வீட்டுக்கு வருவார். என் மனைவி கையால் ஒரு தம்ளர் மோர் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பார்.
பேச்சு அப்படி இப்படிப் போய்க் கடைசியில் பெருந்தலைவரிடம் வந்து நிற்கும். பெருந்தலைவரைப் பற்றிப் பேசும்போது அவர் விழிகள் மின்னும். அவர் விழிகளில் கண்ணீர் தளும்பும். நெகிழ்ச்சியில் நெக்குருகுவார் அவர்.
அவருக்குக் காமராஜ் போன்ற தலைவர் கிடைத்தது பாக்கியம் என்றால், காமராஜுக்கு அவரைப் போன்ற ஆத்மார்த்தமான தொண்டர் கிடைத்ததும் பாக்கியம்தான். பெருந்தலைவரின் நடமாடும் நினைவுச் சின்னமாக விளங்கியவர் அவர்.
குமரி அனந்தன் ஒரு தகவல் களஞ்சியம். எந்த நூலிலும் நமக்குக் கிடைக்காத அரிய பல செய்திகளைத் தம் சொற்பொழிவிலும் உரையாடலிலும் அள்ளிக் கொட்டுவார். அவை எல்லாமே அவர் சொல்லும் நேரடித் தகவல்கள்.
ஒருமுறை மகாத்மா காந்தி தொடர்பாக அவர் தெரிவித்த ஒரு செய்தியைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தேன். காந்தி உண்மையிலேயே மகாத்மா தான் என்பதை உறுதிப்படுத்தியது அந்தச் செய்தி. அது எந்த நூலிலாவது பதிவாகியிருக்கிறதா என்று தெரியவில்லை. குமரி அனந்தன் சொன்ன செய்தி இதுதான்:
தண்டி யாத்திரை நடந்துகொண்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காகலகட்டம். உப்புச் சத்தியாக்கிரக ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. உப்பெடுப்பதற்காக ஏராளமான தொண்டர்களுடன் தண்டியை நோக்கி நடந்துகொண்டிருந்தார் மகாத்மா.
அந்த ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு கிராமம். எண்ணற்றோர் மகாத்மாவை வரவேற்றார்கள். மக்கள் தலைவரல்லவா அவர்? அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்புக் கொடுக்க நினைத்தார்கள் பொதுமக்கள். ஒரு பெண் ஆரத்தித் தட்டில் தீபமேந்தி காந்திக்கு ஆரத்தி எடுக்க முன்வந்தார். அந்தப் பெண்ணின் ஆரத்தியை ஏற்க காந்தி மறுத்துவிட்டார்! ஏன் என்று கேட்டதற்கு மகாத்மா சொன்ன காரணம் என்ன தெரியுமா? அந்தப் பெண் கதர் ஆடை அணியவில்லை என்பதுதான் அது!
இத்தகைய அரிய தகவல்களைக் குமரி அனந்தன் அல்லாது யார் தர முடியும்?
சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது, தமிழக அரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழில் எம்.ஏ. பட்டம், முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர். இருபத்தொன்பது முக்கியமான நூல்களின் ஆசிரியர். குமரி அனந்தனின் தமிழமுது, நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், கலித்தொகை இன்பம், கங்கையே வருக குமரியைத் தொடுக! போன்றவை அவற்றில் சில.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் சட்டப் பேரவை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நேர்மையுடன் பணியாற்றியவர். இவரை 'தமிழ்நாட்டு வினோபா' என்று சொல்வது பொருந்தக் கூடும். ஒன்பது முறை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நடை பயணங்களை மேற்கொண்டவர்.
தம் வாழ்நாள் முழுதும் ஐந்து விஷயங்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவருடைய பல நடைபயணங்களும் கூட அவற்றுக்கானவைதான்.
'பூரண மதுவிலக்கு வேண்டும், பனைமரங்களைப் பாதுகாக்க வேண்டும், புதுச்சேரியில் உள்ள மாந்தோப்புக்குக் குயில்தோப்பு என பாரதியார் நினைவாகப் பெயர் சூட்ட வேண்டும், சுப்பிரமணிய சிவா கண்ட கனவை நனவாக்கும் வகையில் தருமபுரியில் பாரதமாதாவுக்குக் கோயில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும்' என்பவையே அவரது ஐந்து விருப்பங்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கியவர் அவரே. தமிழில் தந்தி விண்ணப்பங்கள், காசோலை விண்ணப்பங்கள் வேண்டும் எனப் போராடி வெற்றி பெற்றவரும் அவரே.
விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார். ரயில் நிலையங்களில் 'பயணிகளின் பணிவான கவனத்திற்கு' என வெளிவந்து கொண்டிருந்த அறிவிப்பை, 'பயணிகளின் கனிவான கவனத்திற்கு' என மாற்றியவரும் இவர்தான்.
முகத் தோற்றத்தில் மட்டுமல்லாமல், பேசும் ஆற்றலிலும் தமிழிசை சவுந்தரராஜன் தன் தந்தையின் சாயலைக் கொண்டிருக்கிறார் என்பது மகளின் பெருமை.
குமரி அனந்தன் மறைவைத் தமிழ்ச் சொற்பொழிவுத் துறையின் மகத்தான நட்சத்திரம் ஒன்றின் மறைவாக வரலாறு குறித்துக் கொள்ளும்.