குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!

'குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது.
குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!
Published on
Updated on
2 min read

'குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்' என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.

இதுதொடர்பாக திருச்சி அருகேயுள்ள சத்திரம் சஞ்சீவி நகரைச் சேர்ந்த கீதா சரவணனிடம் பேசியபோது:

'திருச்சி அருகே துறையூரை அடுத்த பூத்தாலம்பட்டி கிராமத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் நடேசன்' கோகிலா இருவரும் என்னை சிறுவயது முதலே சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினர். தந்தை கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். உள்ளூரில் பள்ளிப்படிப்பையும், நேரு நினைவுக் கல்லூரியில் பி.காம். பட்டத்தையும் பெற்றேன்.2007'ஆம் ஆண்டில் நிதிநிறுவனங்கள் நடத்திவரும் சரவணனுடன்திருமணம் நடைபெற்றது. 2 பிள்ளைகள்.

திருமணத்துக்குப் பின்னர் வீட்டில் இருந்தபோது, ஒரு நாள் தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரம் பார்த்தேன்.மூன்று மாதம் அழகுக் கலைப் பயிற்சி வகுப்பில் சேர்வது குறித்த அறிவிப்பாகும்.

அந்தப் பயிற்சியைப் பெற்று, இல்லத்தில் இருந்தே அழகுக்கலை பயிற்சியாளராகப் பணியைத் தொடங்கினேன். 18 ஆண்டுகளாக, தனியாக கடை எதுவும் நடத்தவில்லை.அழைப்பின் பேரில், சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்று மணப்பெண் அலங்காரம் போன்றவற்றை மேற்கொள்கிறேன்.

கரோனா காலத்தில்,திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆர்ட்& கிராப்ட் பயிற்சி அளிக்கும் வாய்ப்பை அளித்தனர். அதைத் தொடர்ந்து,தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களிலும் பயிற்சி அளித்துள்ளேன்.

மற்ற நேரங்களில் பெண்களுக்கு தொழில்திறன் ஊக்குவிக்குப் பயிற்சிகளை அளித்து, அவர்களைத் தொழில் முனைவோராக மாற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறேன்.

பூ வேலைப்பாடுகள், மெஹந்தி அலங்காரம், முகூர்த்தப் புடவைகள் மடித்துக் கட்டுதல், மணப்பெண் அலங்காரம், அழகுக் கலை பயிற்சி, 'டவல் பொக்கே', ஆரி ஓர்க்ஸ் போன்ற ஒருநாள் பயிற்சி வகுப்புகளையும், அழகுக்கலை குறித்த மூன்று மாதப் பயிற்சியையும் நடத்திவருகிறேன். இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்

களுக்கும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் பயிற்சிகளை அளித்துள்ளேன்.

இந்தப் பயிற்சியைப் பெறும் பெண்கள் பலர் தங்கள் இல்லத்தில் இருந்தே பணிகளைச் செய்துகொண்டு நல்ல நிலையில் இருக்கிறார்கள். பயிற்சி அளிப்பதோடு நிறுத்திவிடாமல், அவர்கள் எம்.எஸ்.எம்.இ. சான்றிதழ் பெறுதல்,தனியாக பிராண்ட்டை உருவாக்குதல் போன்ற தொடர்திறன் ஊக்குவிப்புப் பணிகளையும் அளித்து அவர்கள் வாழ்நாள் முழுமைக்கும் வழிகாட்டி வருகிறேன்.

தொழில் முனைவோர் புத்தாக்க மையத்தில் பயிற்சியாளராக இருப்பதால்,வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து பயிற்சிக்கு அழைக்கும்போதும் நானே அவர்களைத் தேடி சென்று நடத்துகிறேன்.

கல்லூரி மாணவிகள் இதுபோன்ற சுயதொழில் பயிற்சிகளைக் கற்று, தாங்களே சம்பாதித்துகொண்டு வாழ்க்கையில் தங்களை முன்னேற்றிக் கொள்ள முயல வேண்டும்.

குடும்பத் தலைவிகளும் தங்களது அன்றாட வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு,தொழில், கலைப் பயிற்சிகளைக் கற்று வீட்டில் இருந்தே சுயதொழில் மேற்கொண்டு தங்களையும், குடும்பத்தையும் மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

'டர்க்கி டவல் பொக்கே' தற்போது விழாக்களில் சால்வைகளையும், பொக்கேக்களையும் அளிக்கின்றனர். இவை வீட்டில் பயன்படாமல் முடங்குகின்றன.இதற்கு மாறாக, 'டர்க்கி டவல் பொக்கே'என்று டவலில் பூக்களை வைத்து அளிக்கலாம். இதற்கான பயிற்சியை நான் அளித்துவருகிறேன்.

இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.விழா முடிந்தவுடன் அந்த டவலை அவர்கள் வீட்டில் பயன்படுத்தலாம்.இதற்கான பயிற்சியை தஞ்சாவூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு அளித்தேன்.

இந்த விழாவுக்கு வருகை தந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் வியந்துப் பாராட்டி,தாங்கள் நடத்தும் விழாக்களுக்கு 'டர்க்கி டவல் பொக்கே' பயன்படுத்துவதாக உறுதியளித்து, பயிற்சி பெறும் பெண்களுக்கே இதற்கான ஆர்டர்களை அளித்துவருகின்றனர்.

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட அமர்சேவா சங்கத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கும் டர்க்கி டவல் பொக்கே குறித்த பயிற்சியை அளித்துள்ளேன்.

பழைய துணிகளைப் பயன்படுத்தி, பயனுள்ள பைகள் போன்ற பொருள்களையும் தயாரிக்கலாம்.எனக்குத் தெரிந்த பயிற்சிகளை பலருக்கும் பயிற்றுவித்து வருகிறேன்.

சில தொண்டு நிறுவனங்களில் இணைந்து, சமூகச் சேவையை ஆற்றி வருகிறேன். பெண்களுக்குத் தொழில் திறன் ஊக்குவிக்கும் பயிற்சி அளிப்பதற்காக, 50'க்கும் மேற்பட்ட விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களை பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெற்றுள்ளேன்'என்கிறார் கீதா சரவணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com