யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் வாக்கிய பஞ்சாங்கம் 'நல்லி குப்புசாமி செட்டியார் பிறப்பதற்குமுன்பிருந்தே அவரது வீட்டில் பயனில் உள்ளது. போர்க்காலத்துக்கு முந்தைய யாழ்ப்பாண வாக்கிய பஞ்சாங்கங்களின் தொகுப்பும் அவரது வீட்டில் உள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பே இந்த நிலையை அவர் என்னிடம் சொன்னார்.
அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் யாழ்ப்பாணம் வாக்கிய பஞ்சாங்கத்தைக் கொடுக்கும் வழக்கம் எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு இரண்டு படிகள் கொடுப்பேன். கொழும்பில் வணிகம் செய்த நாராயணன் செட்டியார். அவர், காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தானைச் சேர்ந்தவர்.
செட்டியார் தனது ஊருக்கே திரும்பினார். அவர் குடும்பத்துக்கும் யாழ்ப்பாணப் பஞ்சாங்கமே பயனில் உள்ளது. அந்தக் காலத்தில் என் தந்தையார் ஆண்டு தோறும் தவறாமல் அவருக்கு யாழ்ப்பாண வாக்கிய பஞ்சாங்கம் அனுப்பி வைப்பார்.
யாழ்ப்பாண பஞ்சாங்கத்தின் சிறப்பு என்ன?
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆரிய சக்கரவர்த்திகள் 770 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் புதிய அரசுப் பரம்பரையைத் தோற்றுவித்தனர். சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் எனத் தம்மை அழைத்தனர். அக்காலத்தில் அவர்களுக்குச் சோதிட வல்லுனர்களாக கொக்குவில் இரகுநாதையர் குடும்பத்தார் இருந்து வந்தனர்.
ஆரிய சக்கரவர்த்திகளுக்கு முன்பே இரகுநாதய்யர் குடும்பத்தார் அங்கு வாழ்ந்திருக்கக் கூடும். இன்று வரை அவர்களது பரம்பரையினர் அங்கு வாழ்கின்றார்கள். அவர்களின் முழு நேர தொழில் ஆருடம்தான். முன்பு ஏட்டுச் சுவடிகளாக இருந்த ஜோதிட குறிப்புகள் இக்காலத்தில் அச்சுக்கூடம் ஏறின. புத்தக சாலையும் அமைத்திருக்கிறார்கள்.
பஞ்சாங்கம் கணிப்பதை வாழ்வாகக் கொண்டவர்கள் இவர்கள். மிகச் சுத்தமாகக் கணித்து மக்களுக்கு வழி காட்டுகிறார்கள். முற்காலத்திலும் அண்மையில் நடந்த போர்க் காலத்திலும் யாழ்ப்பாணம் இரகுநாதையர் வாக்கிய பஞ்சாங்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல பகுதிகளில் இந்த பஞ்சாங்கத்துக்கு மவுசு உண்டு.
மறவன் புலவு க. சச்சிதானந்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.