எல்லா உயிர்களும் இன்புற்று வாழ...

'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற வள்ளலார் வாக்குக்கு இணங்க, சிறுவயது முதலே பறவைகள், விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் அளித்து வருகிறேன்' என்கிறார் மு.அஜித்பாண்டி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ...
Published on
Updated on
2 min read

'எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற வள்ளலார் வாக்குக்கு இணங்க, சிறுவயது முதலே பறவைகள், விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் அளித்து வருகிறேன்' என்கிறார் மு.அஜித்பாண்டி.

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட தாமரைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வசித்து வரும் இவரிடம் பேசியபோது:

'எனது பெற்றோர் தி.முருகன்' எம்.முருகேஸ்வரி இருவரும் தொழிலாளர்கள். நான் மேரி மாதா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸில் பி.சி.ஏ. படித்தேன். தற்போது தேனி முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவிந்திரநாத்தின் அலுவலகத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றுகிறேன்.

எனக்கு சிறுவயது முதலே பறவைகள், விலங்குகளின் மீது பிரியம் அதிகம்.எல்லா உயிர்களும் இந்த உலகில் இன்புற்று வாழ வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது அன்பு செலுத்துவது நமது கடமையாகும். இயற்கையை நாம் நேசிக்க வேண்டும். நீர் சேமிப்பும் அவசியமாகும்.

இந்த பிரபஞ்சம் மனிதர்களுக்காக மட்டுமல்ல' என்பதை நினைவில் கொள்வோம். பணம், தங்கத்தைச் சேமிப்பதைப் போல் நிலம், நீர், தூய்மையான காற்றைச் சேமிப்போம்.

நமது உயிரைப் போல பிறர் உயிர்களையும் நினைக்க வேண்டும். யார் நமக்கு என்ன செய்தார்கள் என்று நினைப்பதைவிட, நம்மால் பிறருக்கு என்ன செய்ய முடியும் என்பதை நினைத்து வாழ வேண்டும்.தினமும் 5 நிமிடங்களை ஒதுக்கி,பறவைகள், விலங்குகளுக்கு தண்ணீர், தானியங்களை அளிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

இதனால், பசுக்கள், ஆடுகள் போன்ற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் உணவு, தண்ணீர் அளிப்பது வழக்கம். தினமும் காலை முதல் இரவு வரையில் மூன்று வேளையும் எனது வீட்டின் அருகே பச்சரிசி, வெல்லம், தினை, இட்லி போன்ற உணவுகளையும், தண்ணீரையும் வைப்பேன்.

நண்பர்கள், உறவினர்கள்,என்னைத் தேடி வருவோருக்கு உணவையும், தண்ணீரையும் வைக்கும் வகையிலான பிரத்யேக மண்சட்டியை இலவசமாக வழங்கிவருகிறேன்.

'பிரபஞ்சம்' என்ற பெயரில் 'நாளையத் தலைமுறையினருக்காக சேமிப்பு' என்ற நோக்கத்தோடு மூலிகைச் செடிகள், நாட்டு மரக்கன்றுகளையும் இலவசமாக வழங்கி வருகிறேன்.

இதுவரையில் 22 முறை ரத்த தானம் செய்துள்ளேன். முப்பதுக்கும் மேற்பட்ட ரத்த தான முகாம்களை நடத்தி, தேனி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ரத்தம் பெற்று தந்துள்ளேன். இதற்காக, 'சிறந்த ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்' என்பதற்காக தேனி மாவட்ட ஆட்சியர்களிடம் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளேன்.

இதுதவிர, விபத்துகள், அறுவைச் சிகிச்சைகளுக்காக ரத்தம் தேவைப்படுவோர் என்னை செல்போனில் எந்த நேரமும் தொடர்பு கொண்டாலும், நான் சேகரித்து வைத்துள்ள ரத்தக் கொடையாளர்களைத் தொடர்பு கொண்டு அனுப்பி வைக்கிறேன்.உடல் உறுப்புகள், உடல் தானம் செய்வதற்கான உறுதிமொழிப் படிவத்தையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளித்துள்ளேன்.

ரத்த தானம், உடல் தானம், உடல் உறுப்புகள் தானம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு முடிதானம்,தாய்ப்பால் தானம் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்து, அனைவருக்கும் வழிகாட்டுதல்களையும் அளித்துவருகிறேன். இளையத் தலைமுறையினர் ரத்த தானம் செய்யத் தயாராக இருந்தாலும், அவர்களை பெற்றோர் தடுக்கும் மனநிலை மாற வேண்டும்' என்கிறார் அஜித்பாண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com